Subscribe Us

header ads

7. அயன் தலை கொண்டு செண்டாடியது


திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்



7.அயன் தலை கொண்டு செண்டாடியது


திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 9. திருப்பொற்சுண்ணம் - அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி


நான்முகனின் பத்துப் புதல்வர்களில் மூத்தவனும், அறிவு ஆற்றல்களில் மிக்கவனுமாகிய தக்கன், தன் தந்தையின் அறிவுரைகளால், சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைத் தெரிந்து, மானசவாவிக் கரையில் அமர்ந்து, அப்பெருமானையே தன் நெஞ்சக் கமலத்துள் இறுத்திப் பல ஆண்டுகள் தவம் செய்து பெறற்கரிய தலைசிறந்த வரங்கள் பலவற்றைப் பெற்றான்.

அவன் பெற்ற வரங்கள் எல்லாம் தேவரின் மேலாய வளங்களைப் பெற்றுத் தன் ஆணை எல்லா உலகங்களிலும் சென்று பல மக்களுடன் வாழ்வதையே முடிவாகக் கொண்டனவேயாம்; அவன் வீடு பேற்றை விரும்பவில்லை. சிவபெருமான் அருளிய வரங்களின் வலிமையால் தேவரும் அசுரரும் வழிபடவும், நான்முகன் முதலாயோர் தன் சொல்வழி நிற்பவும் தக்ஷபுரியைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

வேதவல்லி என்னும் கற்பிற்சிறந்த பேரழகியை மணந்து ஆயிரக்கணக்கான புதல்வர்களைப் பெற்றான் இப்புதல்வர்கள் எல்லாம் இவன் போல் இம்மை வளத்தில் ஈடுபடாது, நாரத முனிவன் நல்லுரையால் வீடு பேற்றை விரும்பித் தவம் செய்து சிவபெருமான் திருவருளால் வீடுபெற்றனர்.

பின்னர் இருபத்து மூன்று பெண்களைப் பெற்று அவர்கள் வழியாகத் தன் கிளையை அளவுக்கு மேல் பெருக்கமறச் செய்தான்; பின்னும் விண்மீன் கூட்டமாகிய இருபத்தேழு பெண்களைப் பெற்று, அவர்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். சந்திரன், பேரழகோடு விளங்கிய கார்த்திகையையும் உரோகணியையும் பெரிதும் காதலித்து மற்றவர்களைப் புறக்கணித்தான்; புறக்கணிக்கப்பட்ட பெண்கள், தங்கள் தந்தையிடம் முறையிட, சந்திரன் கலைகள் யாவும் தேய்ந்து பொலிவு ஒழிக எனச் சாபமிட்டான்.

இந்த சாபத்தால் கலைகள் குறையப்பெற்ற சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்து கலைகள் ஒவ்வொன்றாய் நிறையப்பெற்றான். தக்கன் சுடுமொழியின் வண்ணம் கலைகள் நாளும் நாளும் குறைவதும், சிவபெருமான் திருவருள் வண்ணம் பின்னர் நாளும் நாளும் நிறைவதுமாக மாறி மாறிக் குறைந்தும் வளர்ந்தும், சந்திரன் நிலைபெறுவானாயினன்.

தன் சுடுமொழியை மாற்றியதால், தக்கனுக்குச் சிவபெருமானிடத்துப் பகைமை பிறந்து வளர்வதாயிற்று. புலகர் என்னும் முனிவர் நல்லுரைகளாலும் சிவபெருமானும் தனக்கு மருகனாக வருவார் என்ற வரத்தின் நினைவாலும் பகைமை தணிந்து அரசு செலுத்தி வந்தான்.

சிவபெருமான் அளித்த வரத்தின் பயனாக, உமாதேவி, தக்கனுக்கு மகளாய்த் தோன்றி, சிவபெருமானை அடையத் தவம் செய்தார்; சிவபெருமானும் தோன்றினார். தக்கன் தன் மகளாரின் திருமணத்தைப் பேரார்வத்துடன் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் போது, மாயமாகச் சிவபெருமான் மறைந்து விட்டார். மீண்டும் உமாதேவி தவம் செய்யத் தொடங்கினார். சிவபெருமான் யாவரும் அறியாது தனித்து தவக்கோலத்துடன் வந்து உமையம்மையை இடது பாகத்தமர்த்திக் கயிலைக்குச் சென்றுவிட்டார்.

சிவபெருமான் இவ்வாறு செய்தது தக்கனுக்குப் பெரும் சினத்தை உண்டாக்கி விட்டது. தக்கன், தன் மகளைக்காணக் கயிலைக்குச் சென்றான்; அவனை, சிவபெருமான் அம்மையொடு அமர்ந்திருக்கும் திருக்கோயிலுட் புகாவண்ணம் பூதகணங்கள் தடுத்துவிட்டன. அடங்காச் சினத்தனாகத் தக்கன் திரும்பினான்.

சிவபெருமானுக்கு அவிப்பாகம் கொடாமல் அவரை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தக்கன் ஒரு பெருவேள்வி இயற்றினான்; அவன் தவவலிமைக்கு அஞ்சித் தேவர்கள் எல்லாம் வந்தனர்; அவுணர்களும் வந்தனர்; ஆனால் அகத்தியர், சனகாதி முனிவர்கள் முதலிய மெய்ப்பொருள் உணர்ந்த மேலோர் வரவில்லை. தக்கன் செயல் தகாதது எனத் ததீசி முனிவர் பலவாறு எடுத்துரைத்தும் அவன் கேட்கவில்லை. சிவபெருமான் திருப்பெயர்களைத் தாங்கியுள்ள தெய்வங்களையும் எம்பெருமானையும் ஒன்று எனக் கருதும் மயக்கத்தையும், அவன் அருளால் படைத்தல் காத்தல் செய்யும் முதல்வர்களை அவனோடு ஒத்தவர் எனக்கொள்ளும் அறியாமையையும் தவிர்த்துச் சிவபெருமானே பரம்பொருள் எனக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக முனிவர் கூறியும் தக்கன் தெளிய வில்லை.

தக்கன் வேள்வியைத் தொடங்கிவிட்டான். அவன் கட்டளைப்படி, காமதேனு, பல்வகை இனிய உணவுகளைக் கொண்டு குவித்து எல்லோருக்கும் படைத்தது. சிந்தாமணியும், சங்கநிதியும், பதுமநிதியும், ஐந்தருக்களும் பலவகை மணிகளையும், ஆடைகளையும், அணிகளையும் யாவர்க்கும் வழங்கின. தேவர்கள், முனிவர்கள், அந்தணர் யாவரும் மனமார வாயாரப் பலவகை உணவுகளையும் உண்டு களித்துப் பாராட்டினார்கள்.

எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியின் பேரொலியாகவே இருந்தது, திருமாலுடைய கருடனும், நான்முகனது அன்னமும், வாசவனது ஐராவதமும், அங்கியங் கடவுளது ஆட்டுக்கிடாவும், இயமனுடைய எருமைக்கடாவும் கதிரவனது குதிரைகளும் ஒருபால் நின்று ஒலித்தன. அரம்பையர் இசை ஒருபால் முழங்கின, எங்கும் ஒரே ஆரவாரமாக இருந்தது.

வேள்வி தொடங்கிற்று; அவரவர்க்குரிய பகுதி வேலைகளை அவரவர் செய்தனர். தக்கன் ஆகுதி செய்யப்பெறும் தேவர்களை நினைத்து அவிகளை அமுதுபோல் ஊட்டிக்கொண்டிருந்தான். இந்த நிலையில், தக்கன் தன்னை அழையாதிருந்தும், உமாதேவியார் கயிலையிலிருந்து, தக்கனது வேள்விச்சாலைக்கு வந்து சிவபெருமானையும் தன்னையும் அழையாதது பெருங்குற்றம் என்பதைத் தக்கனுக்குக் கூறினார்.

தக்கன் தன் மகளாகிய உமையம்மையிடம் சிவபெருமானை இழித்துக் கூறியதோடு அம்மையையும் இகழ்ந்தான். உமையும், வேள்விச்சாலையை விடுத்துக் கயிலைக்கு மீண்டனர். ஈதெல்லாம் அறிந்த சிவபெருமான் தக்கன் வேள்வியை அழிக்கத் திருவுளங் கொண்டார். வீரபத்திரக் கடவுளும் பத்திரகாளியும், இருவர் கண்களிலிருந்தும் தோன்றி, இறைவன் ஆணையைத் தலைமேல் கொண்டு வேள்விச்சாலைக்குச் சென்றனர். இருவர் தோற்றத்தையும் கண்டு தேவர்கள் எல்லாம் நடுங்கினர். இறுதிக் காலம் வந்து விட்டது என ஏங்கினர்.

வீரபத்திரர், சிவபெருமானுக்கு உரிய அவியைக் கேட்டார்; தக்கன் மறுத்தான்; கூடியிருந்த தேவர்களைப் பார்த்தார் வீரபத்திரர், "முறையற்றவன் வேள்விக்கு நீவிரும் துணையாக வந்துள்ளீரோ" எனச் சீறினார்;

தண்டாயுத்தினால் திருமாலின் மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார்.

பிரமனை ஒரு கையால் தலையில் குட்டி வீழ்த்தினார்; அருகிலிருந்த அவன் மனைவியின் மூக்கை அரிந்தார். தேவர்களெல்லாம் ஒளிந்து கொள்ள இடம் தேடிப் பல வழியாலும் ஓடினார்கள்.

சந்திரனைப் பிடித்துத்தள்ளிக் காலால் தேய்த்தார்,

சூரியனைக் கன்னத்தில் அடித்துப் பற்களை உதிர்த்தார்;

பகன் என்னும் சூரியனது கண்களைப் பிடுங்கினார்.

இயமனைத் தலையை வெட்டினார்.

குயிலுருக் கொண்டு ஓடிய இந்திரனைப் பிடித்து வெட்டி வீழ்த்தினார்,

அக்கினி தேவனின் கைகளையும் நாக்குகளையும் துணித்தார். அவன் மனைவியாகிய சுவாகாதேவியின் மூக்கைக் கிள்ளி எறிந்தார்,

நிருதியைத் தடியால் அடித்து வீழ்த்தினார்.

வருணணையும் வாயுவையும் எழுவாலும் மழுவாலும் தாக்கினார்.

குபேரனைச் சூலத்தால் குத்திக் கொன்றார்.

அசுரர் தலைவன் தலையை ஒரு கணையால் எய்தார்.

மான் உருக்கொண்டு ஓடிய வேள்வித் தெய்வத்தின் தலையைக் கணையால் அறுத்தார்;

தன்னை வணங்கிய உருத்திரர்களை மன்னித்து வழி காட்டினார்.

மனம் கலங்கித் தக்கன் நின்றான்; அவன் தலையை வெட்டி அக்கினி தேவனை உண்ணச் செய்தார். தக்கன் மனைவி, மகள் முதலிய பெண்டிர்களைப் பத்திரகாளி தண்டித்தார்.

வேள்விச்சாலை அழிந்தது; அனைவரும் மாண்டனர்.

சிவபெருமான் உமையுடன் வேள்விச்சாலைக்கு எழுந்தருளினார்; திருமாலும் நான்முகனும் வணங்கி நின்றார். உமையம்மை மாண்டவர்களை உய்வித்தருள வேண்டினார்; யாவரும் உயிர் பெற்றனர். தக்கனுடைய தலையை முன்னமே தீக்கடவுள் உண்டுவிட்டமையின், ஒரு ஆட்டுத் தலையைத் தக்கனுக்குத் தலையாக வைத்து உயிர்ப்பித்தனர். அவனும் தன் குற்றத்திற்கு வருந்திச் சிவபெருமானை வணங்கித் திருவருட்கு இலக்கானான்.

"மலைமகள் தனை இகழ்வது செய்த மதியறு சிறுமனவனதுயர்

தலையினொடழலுருவனகரமற முனிவு செய்தவனுறைபதி

கலை நிலவியபுலவர்களிடர்களை தருகொடை பயில்பவர் மிகு

சிலை மலி மதிள் புடை தழுவிய திகழ்பொழில் வளர் திருமிழலையே"

(தேவாரம் 208)


"சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன்னியங்கு

பருதியான் பல்லுமிறுத்தவர்க்கருளும் பரமனார் பயின் றினி திருக்கை

விருதினான் மறையும் அங்கமோராறும் வேள்வியும் வேட்டவர் ஞானம்

கருதினாருலகிற் கருத்துடையார்சேர் கழுமல நகரெனலாமே"

(தேவாரம் 4072)


"எச்சன் நிணத்தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளிலொருவன்பல் இறுத்துக்கொண்டார்

மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார் விறலங்கி கரங்கொண்டார் வேள்விகாத்து

உச்ச நமன் தாளறுத்தார் சந்திரனையுதைத்தார் உணர்விலாத்தக்கன்றன் வேள்வியெல்லாம்

அச்சமெழ அழித்துக் கொண்டருளுஞ் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே"

(தேவாரம் 7191)



Thanks to: Thiruvasagam publication of Social Religious Guild, Thirunelveli


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments