சிவமயம்
திருச்சிற்றம்பலம்
மாணிக்க வாசக சுவாமிகள்
வரலாற்றுச் சுருக்கம்.
பாண்டிய நாட்டின் வைகை ஆற்றின் கரையோரத்தில் அமையப்பெற்ற திருவாதவூரிலே ஆதிசைவக் குலத்தில் வந்த சம்புபாதசரிதருக்கும் சிவஞானவதியம்மைக்கும் அருந்தவப் புதல்வராக மாணிக்கவாசக சுவாமிகள் எனும் வாதவூரர் தோன்றி அருளினார்.
பதினாறு ஆண்டுகளிலேயே சுவாமிகள் யாவும் பயின்று அதன்படி நடந்து நல்வொழுக்க சீலராக விளங்கினார். ஞானசீலராக விளங்கிய அவரை நாட்டு மக்கள் அனைவரும் வியந்து போற்றினர். சைவ நெறிகளிலும் இறை வழிபாட்டிலும் இவரது மேன்மையை பல நல்லோர்களால் கேட்டுணர்ந்த அந்நாட்டு அரசனனான அரிமர்த்தன பாண்டியன், சுவாமிகளை அழைத்து உரையாடினான். மாணிக்கவாசக சுவாமிகளின் கூரிய அறிவினைக் கண்டு அதிசயித்தான். "தென்னவன் பிரமராயன்" என்ற பட்டத்தை வழங்கியும் தனது அரசவைக்கு முதலமைச்சராக ஆக்கியும் சிறப்பித்தான்.
அறநெறி தவறாது அரசை நடத்திச் சென்ற வாதவூரர், போகவாழ்வில் பற்றின்றி பேரின்பப் பெருவாழ்வுதனை பெற்றிட விரும்பினார். அதற்கான வழியினைக் காண்பித்தும் அதில் தன்னை நடத்திச் செல்லவும் ஒரு ஞானாசிரியரைத் தேடி வந்தார்.
அச்சமயம் தமது குதிரைப்படை நலிவடைந்திருப்பதை உணர்ந்த
அரசன் வலிமைமிக்க புதிய குதிரைகளை வாங்க விரும்பினான். அப்பொழுது சோழநாட்டுக்
கடற்கரையில் நல்ல குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ள செய்தியை தூதர்கள் தெரிவித்தனர்.
உடனே தமது முதலமைச்சராகிய மாணிக்கவாசக சுவாமிகளை அழைத்து அக்குதிரைகளை ஆராய்ந்து வாங்கிவருமாறு பணித்து, அதற்கு வேண்டிய பெரும்
பொருள்களையும் பரிவாரங்களையும் கொடுத்து அனுப்பினான். சுவாமிகள்
மீனாட்சியம்மையையும் சொக்கநாத பெருமானையும் வணங்கி பின் சோழநாட்டுக்குப்
புறப்பட்டார்.
மாணிக்க வாசகரை ஆட்கொள்ளும் தருணமிதுவென திருவுளம் கொண்ட சிவபெருமான், குருந்த மரத்தடியில் அருளாசிரியாக வேடம் கொண்டு எழுந்தருளினார். ஆவுடையார் கோயில் என வழங்கும் திருப்பெருந்துறையை மாணிக்கவாசகர் அடைந்ததும் சோலையினின்று சிவநாம முழங்கக் கேட்டு தம்மெய் மறந்தார்.
ஒலியின் வழி செல்கையில் மரத்தடியில் முனிவரின் கோலத்திலிருந்த சிவபெருமானைக் கண்டார். காந்தம் கண்ட இரும்புபோல் ஈசன்பால் ஈர்க்கப்பட்டு அவர்தம் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினார். இறைவனும் அவருக்கு ஞானதீட்சை அளித்து உண்மைப் பொருளை உபதேசித்து அருளினார். தம்மை முழுமையாக குருமூர்த்திக்கு அர்ப்பணம் செய்து மாணிக்கம் போல் ஒளிரும் வாசகங்களை பாடல்களாக பாடினார். குருநாதராகிய சிவபெருமானும் அதனைக் கேட்டு மகிழ்ந்து 'மாணிக்கவாசகர்' எனும் நாமம் சூட்டி "திருக்கோயில் பணி செய்க" என்று கட்டளையிட்டு மறைந்தார். சுவாமிகளும் தாம் கொண்டு வந்த பெருட்களை எல்லாம் திருப்பணிக்கே செலவழித்தார். பல நாட்கள் கடந்தும் குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் வராததைக் கண்ட அரசன் தூதர்களை அனுப்பினான்.
அவர்களும் வாதவூரரிடம் சென்று அரசனின் உத்திரவை புறக்கணிப்பதால் விளையக் கூடிய விபரீதங்களை எடுத்து உரைத்தனர். ஆயினும் வாதவூரர் அதனைப்பொருட்படுத்தாது திருப்பணியைத் தொடர்ந்தார். தூதர்களும் வேறு வழியின்றி அரசனிடம் சென்று வாதவூரரின் செயலை தெரிவித்தனர். அதனால் சினம் கொண்ட அரசன் குதிரைகளுடன் உடனே வருமாறு ஓலை அனுப்பினான். வாதவூரர் பெருந்துறை பெருமானிடம் முறையிட, இறைவன் "நாம் ஆவணி மூலத்தில் குதிரைகளுடன் வருவோம், நீ முன்னர் செல்க! இம்மாணிக்கக்கல்லை அரசனிடம் கொடு" என்று கூறி மாணிக்கக் கல்லையும் தந்தருளினார்.
அமைச்சரும் உடனே பயணித்து அரசனிடம் மாணிக்கல்லைச் சேர்ப்பித்து ஆவணி மூலநாளில் குதிரைகள் அணைத்தும் வந்து சேரும் என அறிவித்தார். அந்நாளும் வந்தது. ஆண்டவன் காட்டிலுள்ள நரிகளை எல்லாம் பரிகளாக்கி ஒட்டிக் கொண்டு தாமே குதிரைச் சேவகனாக வேடம் பூண்டு அரசனிடம் ஒப்புவித்தார்.
அன்றிரவே வந்த பரிகளெல்லாம் நரிகளாகி இன்னல்கள் பல செய்தபின் ஊரைவிட்டு காடு நோக்கி ஓடின. மிகக் கோபங்கொண்ட அரசன் வாதவூரரை கடுமையாக தண்டிக்கச் செய்தார். ஆலவாய் பெருமானோ வைகையாற்றில் வெள்ளம் பெருகி மதுரையில் பாயும்படிச் செய்தார். இயற்கையின் சீற்றத்திற்குப் பயந்த அரசன் குடிமக்களில் வீட்டிற்கு ஒருவர் வந்து வைகைக் கரையை அடைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். வந்தி எனும் மூதாட்டியின் பங்கிற்கு சிவபெருமானே கூலியாளாக வந்து பிட்டுக்கு மண்சுமந்து கரையடைக்கச் சென்றார். ஆனால் அங்குமிங்குமாய் ஓடித்திருவிளையாடல் புரிந்தார். அரசன் கோபம் கொண்டு பிரம்பால் அடித்தார். பாண்டியன் அடித்த அடி அவன் முதுகிலும் எல்லோர் முதுகிலும் பட்டது. சிவபெருமான் மறைந்திட வைகையில் வெள்ளமும் தணிந்தது. அரசன் இறைவனின் திருவிளையாடலையும் மாணிக்கவாசகரின் பெருமையும் அறிந்து பிழை பொறுக்க வேண்டினான்.
மாணிக்கவாசகரும் அரசனின் பிழை பொறுத்துத் தம் அமைச்சர் பதவியைத் துறந்தார். பின்னர் திருப்பெருந்துமை, உதரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர், சீர்காழி, திருவண்ணாமலை, திருக்கழக்குன்றம் முதலிய தலங்களில் சிவபெருமானை வணங்கிப் பதிகங்கள் பாடி தில்லை அடைந்தார்.
தில்லைவாழ் அந்தணர்களோடு வாதுக்கு வந்த புத்தகுருவை இறைவனருளால் வாதில் வென்றார். ஊமைப்பெண்ணை பேச வைத்தார். புத்தகுரு முதலியோர் ஈசன் பெருமை உணர்ந்து சைவராயினர். நடராசப்பெருமான் அந்தணர் வடிவங்கொண்டு மாணிக்கவாசகரிடம் சென்றார். திருவாசகம் முழுவதையும் ஒதச் செய்து தமது ஓலைச் சுவடியில் அவற்றை எழுதிக் கொண்டு திருக்கோவையாரையும் பாடச்செய்து அதனையும் எழுதிக் கொண்டு "மாணிக்கவாசகன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது" என்று கையொப்பமிட்டு அதனைக் கனகசபையின் திருப்படிகளிலே வைத்து விட்டு மறைந்தருளினார்.
மறுநாள் காலையில் தில்லைவாழ் அந்தணர்கள் படிகளில் சுவடியைக் கண்டு அதிசயித்து மாணிக்கவாசகரிடம் சென்று விபரம் அறிந்தனர். திருவாசகப் பாடல்களின் பொருளை தெரிவிக்க வேண்டினர். மாணிக்கவாசகர் அவர்களை பொற்சபைக்கு அழைத்துச் சென்று தில்லை நடராசனைக் காண்பித்து இவரே இத்திருவாசகத்திற்கு பொருளாவார் என்று காட்டி சிவபெருமானது திருவடியில் இரண்டறக் கலந்தார்.
திருச்சிற்றம்பலம்
0 Comments