திருவாசகம்
7. திருவெம்பாவை
திருவாசகத் தலைப்பின் விளக்கம்
வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து
திருவாதவூரடிகள் திருவண்ணாமலையினை அடைந்து இறைவனை வழிபட்டு அத்தலத்தில் தங்கியிருக்கும் நிலையில் மார்கழித் திங்கள் வந்ததாக, இளமகளிர் வைகறைப் பொழுதில் துயிலிணர்ந்தெழுந்து ஆதியும் அந்தமும் இல்ல அரும்பெருஞ்சோதியாகிய இறைவனது பொருள் புகழினைப் போற்றிசைத்துத் தம்மையொத்த மகளிரைத் துயில் எழுப்பிக் கொண்டு சென்று பொய்கையில் நீராடி அண்ணாமலையானை அன்பினாற் பாடிப் போற்றி மார்கழி நீராடலாகிய நோன்பினைச் சிறப்புறக் கொண்டாடினர் எனவும், அவ்வழகிய காட்சியைக் கண்ட மணிவாசகப் பெருமான், அம்மகளிர் வைகறைப் பொழுதில் ஒருவரை யொருவர் எழுப்பிச் சென்று ஆர்த்த பிறவித்துயர் கெடப் பூத்திகழும் பொய்கையில் நீராடி இறைவனை யேத்தி வழிபடும் நிலையில் அம்மகளிர் கூறும் உரைகளாக இத்திருவெம்பாவையைப் பாடி அருளினார்.
திருவெம்பாவை இருபது பாடல்களை உடையது. இப்பாடல்கள் யாவும் மகளிர் ஒருவரை யொருவர் நோக்கி 'எம்பாவாய்' என அழைத்துக் கூறும் முறையில் 'பாவைமார் ஆரிக்கும் பாடலாக' அமைந்திருத்தலால் திருவெம்பாவை யென்பது இதற்குரிய பெயராயிற்று. மகளிர் ஒருவரை யொருவர் துயலுணர்த்தி அழைத்து நீராடி இறைவனைப் போற்றும் முறையில் அமைந்த இப்பனுவலைப் 'பாவைப் பாட்டு' என வழங்குவர்
இளமகளிர் இசையுடன் பாடியாடும் பல்வரிக் கூத்தாக அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார வுரையிற் காட்டியவற்றுள், அம்மனை, நல்லார்தந்தோள் வீச்சு (தோணோக்கம்), சாழல், உந்தி, அவலிடி (பொற்சுண்ணம்), கொய்யு முள்ளிப்பூ (பூவல்லி) என்பவற்றுக்குரிய பாடல் வகைகள் திருவாசகத்தில் அமைந்துள்ளன. இவையேயன்றி, கோத்தும்பி, தெள்ளேணம், பொன்னூசல், குயிற்பத்து முதலிய மகளிர் விளையாட்டிற்குரிய இசைப்பாடல்களும் உள்ளன. இங்ஙனம் மணிவாசகப்பெருமான் இறைவனது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் திருப்பாடல்களை விளையாடும் பருவத்து இளமகளிர் கூற்றில் வைத்து அருளிச் செய்துள்ளார்.
"மனைகள் தொறும் இறைவனது தன்மைபாடிக் கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டயருங் கழுமலமே" எனவும்,
"கருகு குழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன் றடைவோமே"
எனவும் வரும் ஆளுடைய பிள்ளையார் தேவாரத் தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால், பண்டை நாளில் தமிழகத்தில் வாழ்ந்த இளமகளிர் இயலும் இசையும் பயின்று இறைவனைப் போற்றுதற்குரிய சமய ஒழுக்கங்களிற் சிறப்புற்றிருந்தனர் என்பது நன்கு புலனாம். காரைக்காலம்மையார். மணலாற் சிறு வீடு கட்டி விளையாடும் இளம் பருவத்திலேயே இறைவனது பொருள் சேர் புகழைப் போற்றிப் பயின்ற திறத்தை.
'வண்டல் பயில்வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை அண்டர்பிரான் திருவார்த்தை யணைய வருவன பயின்று'
எனச் சேக்கிழாரடிகள் பாராட்டிப் போற்றியுள்ளார். மேல் எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் இளமகளிர் விளையாடல்களுள் ஒன்றாகிய பாவைப்பாட்டு முறையிலேயே இத்திருவெம்பாவையும் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது இனிது புலனாம்.
திருவெம்பாவை இருபது பாடல்களை உடையது. இதன்கண் உள்ள பாடல்கள் யாவும் நான்கடிக்கு மேற்பட்டு எட்டடியால் இயன்ற கொச்சக வொருபோகு எனப்படும். இவற்றை இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா என வழங்குவர் பிற்காலத்தார்.
திருவெம்பாவைக்குச் சத்தியை வியந்தது' என முன்னோர் கருத்துரை கூறுவர். சத்திகளாவார் அம்பிகை, கணாம்பிகை, கௌரி கங்கை, உமை, பராசத்தி, ஆதி சத்தி, ஞான சத்தி, கிரியாசத்தி என ஒன்பதின்மரெனவும், மனோன்மனி, சர்வபூததமனி, பலப்பிரமதனி, பலவி கர்ணி, கலவிகர்ணி, காளி, ரௌத்திரி, சேஷ்டை, வாமை என ஒன்பதின்மரெனவும் வெவ்வேறு பெயரிட்டு வழங்குவர். உலகத் தோற்றத்திற்குக் காரணராகிய சத்திகள் ஒன்பதின் மரும் படைப்பு முதலிய தொழில்களை நிகழ்த்தல் கருதி ஒரு வரை யொருவர் தூண்டிக் கிளர்ந்தெழச் செய்து தொழிற்படும் இயல்பினை உணர்த்துவது இத்திருவெம்பாவை என்றும், இதன் முதலிலுள்ள எட்டுத் திருப்பாடல்களும் மகளிர் ஒருவரையொருவர் துயிலெழுப்பும் நிலையில் அமைந்திருத்தலால் அங்ஙனம் எழுப்பப்பெற்ற மகளிர் எண்மரும் அவர்களை முதன் முதல் எழுப்பத் தொடங்கியவள் ஒருத்தியும் ஆக ஒன்பதின்மர் தம்முள் உரையாடும் முறையில் அமைந்தது இப்பனுவல் என்றும், நவசத்திகளின் ஆற்றல் தொழிற்படும் இயல்பினைச் சுட்டிய இத்திருவெம்பாவை ஐந்தொழிற் றிருக்கூத்தியற்றும் அம்பலவாணர்க்குரிய மார்கழித் திருவாதிரைத் திருவிழாவிற் பத்து நாட்களிலும் தில்லைக் கூத்தன் திருமுன்னர் முறையே ஓதி வழிபடப் பெறும் சிறப்புடைத் தாயிற்றென்றும் கூறுவது மரபு.
மக்களுக்குரிய ஓராண்டு வானோர்க்கு ஒரு நாள். ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு திங்களும் இரவு ; தை முதல் ஆனி முடிய ஆறு திங்களும் பகல். இவ்வகையில் மார்கழித் திங்கள் வானோர்க்குரிய வைகறைப் பொழுதாகக் கருதப்பெறுகிறது. கூத்தப்பெருமான் திருவுருவில் திகழும் திருவாதிரையானது, நிறைமதியுடன் கூடி விளங்கும் சிறப்புடைய திருநாளாக அமைவது மார்கழித்திங்களில் ஆதலின், மார்கழித் திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்குரிய திருநாளாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.
சிவபெருமானுக்குரிய திருவாதிரைத் திருநாளையே முதன்மையாகக் கொண்டு இந்நீராடல் நோன்பு நிகழும் என்பது,
'மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்'
எனவரும் திருப்பாவையால் உய்த்துணரப்படும். கன்னியர் பலரும் கோலம் புனைந்து ஒருங்கு கூடிச் சென்று நீராடுதலும், பிறர் வீடுகளிற் பாடிச் சென்று ஐயமேற்றுத் தாம் பெற்ற பரிசிற் பொருள்களை வறியோர் பலர்க்கும் வழங்கி மகிழ்தலும், பாவையைச் சிறிய குழமகனாகப் பேணிச் சீராட்டி அப்பிள்ளைக்கு மற்றொருத்தியின் பாவையை மண மகளாக்கிக் கோடற்குச் சிறு சோறு சமைத்து இளமகளிர் குழுவுடன் விருந்துண்டு மகிழ்தலும் சங்க காலத்தில் நிகழ்ந்த தைந் நீராடலிற் காணப்படும் சடங்குகளாகும். இவற்றுட் சில தைப்பொங்கலை யடுத்துக் கன்னிப் பொங்கல் நாளில் தமிழ் நாட்டிற் சில இடங்களில் இள மகளிரால் மேற்கொள்ளப்பெற்று வருதலை இக்காலத்துங் காணலாம். தைந் நீராடலாகிய இந்நோன்பின்கண் கன்னிப் பெண்கள் அழகிய பாவையினை அமைத்துச் செய்யும் சடங்குண்மை கருதி இந்நோன்பு 'அம்பாவாடல்' எனப் பெயரெய்தி யிருத்தல் வேண்டும். அம்பா -தாய். தாயோடு ஆடப் பெறுதலின் இப்பெயர்த்தாயிற்று' என்றார் பரிமேலழகர்.
"வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ " எனவும், "நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்' எனவும், " பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் " எனவும் வரும் திருப்பாவைத் தொடர்களால் இந்நோன்பில் பாவைக்குச் செய்யும் சடங்குண்மை புலனாம். இங்ஙனம் கன்னியர் நீராடி நோன்பு நோற்றலின் நோக்கம், நாடுமலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கி இவ்வுலகம் இன்புறுதல் வேண்டும் என இறைவனை வேண்டி அவனது திருவருளைப் பெறுதற் பொருட்டேயாம். தமிழ் நாட்டுச் சிறுமியர்களின் இவ்வுயர்ந்த அருள் நோக் கத்தினை, வெம்பாதாக வியனில வரைப்பென அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்' எனவரும் தொடரில் ஆசிரியர் நல்லந்துவனார் அழகுற விரித் துரைத்துள்ளார். உலகில் அறம் பொருள் இன்பங்களாகிய ஒழுகலாறுகள் தடையின்றி நிகழ்தற்கு உறுதுணையாவது மழை. மழையின்றேல் மாநில வாழ்க்கையில்லை. இறைவனது அருளின் நீர்மையாகிய மழையினைப் பெய்விக்கும் ஆற்றல் பெறுதற்குரியார் ஒருமை மகளிரே. ஆதலால் உலகம் மழையாற் குளிர்வதாக' என உலகநலங் கருதி நோன்பியற்றும் கடமையும் உரிமையும் அம்மகளிர்க்கே உரியவாயின. ஒருமை மகளிர்க்குரிய இக்கடமை யுணர்வினை மணிவாசகப் பெருமான்,
முன்னிக்கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும் முன்னி யவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். எனவரும் திருவெம்பாவைச் செய்யுளால் எழில் பெற விளக்கியுள்ளார். இவ்வாறே ஆண்டாள் அருளிய திருப்பாவையிலும், ஓங்கி யுலகளந்த யுத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்." என 'உலகம் மழையாற் பல வளமும் பெறுக' என வாழ்த்துங் குறிப்புப் புலனாதல் காணலாம்.
சங்க நூல்களில் பாவையினை வைத்துச் செய்யும் சடங்கு முதலியன தைந் நீராடல் நோன்பிற்குரியவாகச் சொல்லப்பட்டன. மகளிர்க்குரியனவாகச் சொல்லப்பட்ட அச்சிறிய சடங்குகளை விரித்துரையாமல், இருபாலாரும் இறைவனது திருவருள் பெற்று உய்யும் நோக்குடன் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாகிய இறைவன் ஒருவனையே மனமொழி மெய்களால் இறைஞ்சிப் போற்றும் ஒருமைநிலை வளர இளமகளிர் விடியற் காலையிலேயே துயிலுணர்ந்தெழுந்து தம் தோழியர்களையும் எழுப்பிக் கொண்டு பொய்கையில் நீராடி இறைவனது பொருள்சேர் புகழை வாயாரப் பாடிப் போற்றும் முறையில் திருவாதவூரடிகள் இத்திருவெம்பாவையை அருளிச் செய்துள்ளார்.
இறைவனருளிய மெய்யுணர்வினால் மனமாசு நீங்கப் பெற்ற செம்புலச் செல்வராகிய அடியார்கள், ஆணவ மலமாகிய பேரிருளில் அழுந்தியுறங்கும் உயிர்களை அவ்வுறக்கத்தை விட்டு எழுப்பிப் 'பிறவி வெப்பந்தணிய இறைவனது திருவருளாகிய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி யின்புற வருக' என அழைக்கும் முறையில் அமைந்தது. இத்திருவெம் பாவை யெனக் கூறுவர் பெரியோர்.
'மல விருளுற் றுறங்காமல் மன்னுபரிபாகர் அருள் செலமுழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை' எனவரும் திருவாசக வுண்மையில் இக்கருத்து இனிது விளக்கப்பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும்.
வைகறையில் துயிலெழுந்து இறைவனது மெய்ப் புகழை நெஞ்ச நெக்குருக நினைந்து போற்றிவரும் இள மகளிர், தம் தோழியர்பால் வைத்த அன்பும் இறைவன் திருவடிகளில் தாம் வைத்த பத்தித் திறமும் வளர ஒருவரை யொருவர் துயிலுணர்த்தும் முறையும், நகைச்சுவை பொருந்த உரையாடும் நிலையிலும் இறைவன்பாற் கொண்ட அன்பின் திறமே மேம்பட இனிமையாகப் பேசும் மொழித் திறமும், பொழுது புலர்வதன்முன் பூத்திகழும் பொய்கை குடைந்தாடி அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென் றிறைஞ்சி அம்முதல்வனைப் பண்ணார் தமிழாற் பாடிப் போற்றும் பாங்கும், உலகம் வெயிலாலும் பனியாலும் வெம்பாது நலம் பெற வேண்டி உலகம் ஈன்ற அன்னையாகிய இறைவியின் திருவருளே யென்ன மழையைப் பெய்யப் பணிக்கும் மனவளமும், இறைவன்பால் அன்புடையவரையே தாம் கணவராகப் பெறுதல் வேண்டும் எனத் தம் மண வாழ்க்கை குறித்து இறைவனை வேண்டிப் போற்றும் மனத்திட்பமும், மன்னுயிர்கள் உய்தற் பொருட்டு ஐந்தொழில் திருக்கூத்தி யற்றும் இறைவனது அருளியல்பினைப் போற்றி அம்மகளிர் தாம் மேற்கொண்ட மார்கழி நீராடல் நோன்பினை நிறைவு செய்து கொள்ளும் முறையும் திருவெம்பாவை யென்னும் இப்பனுவலிலே அன்பெனும் ஆறு கரையது புரள அடிகளால் நன்கு அருளிச் செய்யப்பெற்றுள்ளன.
இதன்கண் ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி ' எனவும், 'மாலறியா நான்முகனுங் காணா மலை' எனவும், 'அண்ணாமலையான்' எனவும் திருவண்ணாமலைப் பெருமானை அடிகள் குறித்துப் போற்றுதலால், இத்திரு வெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பெற்ற தென்பது இனிது விளங்கும்.
வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து