திருவாசகம்
6. நீத்தல் விண்ணப்பம்
திருவாசகத் தலைப்பின் விளக்கம்
வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து
திருப்பெருந்துறையில் ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளியிருந்து வாதவூரடிகளை ஆட்கொண்டருளிய சிவபெருமான், 'இன்னும் சிலநாள் இங்கிருப்பாய்' எனக் கூறி மறைந்தனனாக, ஆசிரியனது பிரிவாற்றாது மனங் கலங்கிய அடிகள், இறைவன் பணித்தவண்ணம் திருப்பெருந் துறையிலிருந்து திருவுத்தரகோசமங்கையை அடைந்து திருக்கோயிலிற்புகுந்தவர், தம்மை ஆண்டுகொண்டருளிய ஆசிரியத்திருமேனியைக் காணப் பெறாராய்ப் பெரிதும் வருந்தி, 'உத்தரகோசமங்கைக்கு அரசே, அடியேனைக் கை விட்டு விடுவாயோ?' என நெஞ்சம் நெக்குருகி நின்று நீத்தல் விண்ணப்பம் என்னும் பனுவலைப் பாடிப் போற்றினார் என்பதும். அந்நிலையில் உத்தரகோசமங்கைப் பெருமான் அடிகட்கு ஆசிரியத் திருக்கோலத்தைக் காட்டி அருள்புரிந்தான் என்பதும் வரலாறு.
நீத்தல் விண்ணப்பமாகிய இப்பனுவல், கட்டளைக் கலித் துறையாக அமைந்த ஐம்பது திருப்பாடல்களை உடையது; ஒரு பாடலின் இறுதி அடுத்த பாடலுக்கு ஆதியாக அமையக் 'கடையவனேனை 'எனத் தொடங்கி 'அமுதுண்ணக்கடையவனே' என மண்டலித்து முடிந்துள்ளது. 'நின் திருவடிக்குச் தொண்டுபட்ட என்னைக் கைவிட்டு விடுதலாகாது' வாதவூரடிகள் ஆண்டவனை நோக்கி வேண்டிக்கொள்ளும் முறையில் அமைந்தமையால், இது 'நீத்தல் விண்ணப்பம்' என்னும் பெயர்த்தாயிற்று.
இதன் முதல் இருபது பாடல்களிலும் நாற்பத்தெட்டாம் பாடலிலும் உத்தரகோச மங்கைக்கு அரசே' என இறைவனை அடிகள் அழைத்துப் போற்றுதலைக் கூர்ந்துநோக்குங்கால் நீத்தல் விண்ணப்பமாகிய இப்பதிகம் திருவுத்தரகோசமங்கையில் அருளிச் செய்யாதென்பது இனிது புலனாம்.
நிண்ணப்பத்திற்குப் 'பிரபஞ்ச வைராக்கியம்' என முன்னோர் கருத்துரை வரைந்துள்ளனர். 'பிரபஞ்ச வைராக்கியம்' என்னும் இத்தொடர்க்கு 'உலக வாழ்க்கையிற் பற்றறுத்தலாகிய உறுதிப்பாடு' என்பது பொருள். திருப்பெருந்துறையில் இறைவன் அந்தணனாகி வந்து அழகமர் திருவுருக்காட்டி ஆண்டருளிய பின்னர், உலகத்தொடர்பினை அறவே உதறிவிட்டு இறைவனோடு பிரிவறக்கலத்தலாகிய பேரின்ப நிலையினைத் தலைப்பட்டு இன்புறமுந்தும் அடிகளார். இறைவன் 'இன்னும் சின்னாள் இங்கு இருத்தி' எனக் கூறி மறைந்தனனாக, அப்பிரிவினைத் தினைத்தனைப்பொழுதும் தரித்திருக்க வொண்ணாராய், உலக வாழ்க்கையில் தமக்குள்ள வெறுப்பும், முதல்வன் திருவடியினைத் தலைப்படுதற்குரிய பேரன்பினைப்பெறுதல் வேண்டுமென்னும் பெருவேட்கையும் விளங்க அருளிய பனுவல் நீத்தல் விண்ணப்பம் ஆதலின் இதற்குப் பிரபஞ்ச வைராக்கியம்' என முன்னோர் கருத்துரை வரைந்தனர். ஆண்டவனது திருவடியைத் தலைப்படுதற்குச் சாதனமாகிய மெய்யன்பினது வியக்கத்தக்க திறத்தினை விளக்கும் திருச்சதகத்தினையடுத்து அதன் பயனாக உலக வாழ்க்கையிற் பற்றொழிவின் உறுதிப்பாட்டினைப் புலப்படுத்தும் நீத்தல் விண்ணப்பம் அமைந்திருத்தல் கூர்ந்து உணரத்தக்கதாகும்.
'யாவர்க்குங் கடையேனாகவுள்ள எளியேனை நினது பெருங்கருணைத் திறத்தால் உளங்கலந்து நின்று ஆண்டு கொண்டருளிய ஏறூர்ந்த செல்வனே, என்னை இத்துயர் நிலையிற் கைவிட்டு விடுவாயோ? வளமிக்க புலியின் தோலை உடையாகக் கொண்டவனே, நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கையைத் தலை நகராகக் கொண்டு வீற்றிருந்தருளும் வேந்தனே, செஞ்சடைக் கடவுளே, அடியேன் பெரிதுந்தளர்வுற்றேன்; எம்பெருமானே, தளர்ச்சி நீக்கி அடியேனைத் தாங்கிக் காத்தருளவாயாக' என்பார்,
கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய் விறல்வேங்கையின் தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னே தளர்ந் தேனெம்பிரானென்னைத் தாங்கிக் கொள்ளே.
எனத் திருவாதவூரடிகள் உத்தரகோசமங்கைப் பெருமானைப் பரிந்து வேண்டுகின்றார். இதன்கண் 'விட்டிடுதி ' என்னும் இகரவீற்று முன்னிலை யொருமை எதிர்கால வினைச்சொல் 'கண்டாய்' என்னும் முன்னிலையசையினைப்பெற்று 'விட்டு விடுவாயோ' என ஒலி வேற்றுமையால் வினாவாக நின்று 'விட்டு விடாதே' என்ற பொருளைத் தந்தது. இச்சொற்கு இதுவே பொருள் என்பதனை, 'விடுதிகொல் என்னையென்று நீத்தல் விண்ணப்பமென்னுந் தொடைகெழு பனுவல் ஓத' எனவரும் திருவாதவூரடிகள் புராணச் செய்யுளில் கடவுள் மாமுனிவர் தெளிவாகக் குறித்துள்ளமை காண்க.
நீத்தல் விண்ணப்பம் என்ற தொடர்க்கு. உலகப்பற்றை நீத்தற் பொருட்டு இறைவனிடத்து வேண்டிய வேண்டுகோள் எனவும், 'என்னை நீத்து விடாதே' என இறைவனை நோக்கிச் செய்துகொண்ட வேண்டுகோள் எனவும் இரு வகையாக நம் முன்னோர் பொருள் கொண்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.
வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து