Subscribe Us

header ads

05 திருச்சதகம்

திருவாசகம்


5. திருச்சதகம்



திருவாசகத் தலைப்பின் விளக்கம்


திருவாசகத்தில் ஐந்தாம் பனுவலாக அமைந்த இப்பகுதி, தெய்வத்தன்மை வாய்ந்த நூறு திருப்பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதலால் திருச்சதகம் என்னும் பெயர்த்தாயிற்று. சதம் என்ற வடசொல் நூறு என்னும் எண்ணினைக் குறித்த பெயராகும். அது. நூறு திருப்பாடல் களைக் கொண்டது என்னும் பொருளில் 'க' என்னும் ஓர் இடைச்சொல்லைப் பெற்றுச் 'சதகம்' என வழங்கியது என்பர். இத்திருச்சதகம், 1. மெய்யுணர்தல். 2. அறிவுறுத்தல், 3. சுட்டறுத்தல், 4. ஆத்தும சுத்தி, 5. கைம்மாறு கொடுத்தல், 6. அநுபோக சுத்தி, 7. காருகரியத்திரங்கல், 8. ஆனந்தத் தழுந்தல், 9. ஆனந்த பரவசம். 10. ஆனந்தா தீதம் எனப் பத்துத் தலைப்புக்களை உடையதாய், ஒவ்வொரு தலைப்புக்கும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டதாய்ப் பத்து யாப்பு விகற்பங்களைப் பெற்றுள்ளது.

ஒரு பாடலின் இறுதியிலுள்ள சொற்சிறாடர், சொல், எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடப் பெறுவது, அந்தாதி என்னும் சொற்றொடர் நிலைச் செய்யுளாகும். இத் திருச்சதகத்தில் உள்ள நூறு திருப்பாடல்களும் மேற்குறித்த வண்ணம் ஒரு செய்யுளின் ஈறு அடுத்த செய்யுளுக்கு முதலாக அமையும் முறையில் அந்தாதியாக அருளிச் செய்யப் பெற்றுள்ளன. 'மெய்தானரும்பி' எனத் தொடங்கும் இத்திருச்சதகத்தின் முதற்பாடலின் முதற் சொல்லொடு பொருந்தும் முறையில், இதன் நூறாம் பாடலாகிய இறுதித் திருப்பாட்டு மெய்யர் மெய்யனே' என முடிந்து ஈறும் முதலும் ஒன்றாய் இணைந் திருத்தல் காணலாம். திருச்சதகமாகிய இவன் அமைப்பு முறையினை அடியொற்றிப் பிற்காலத்தில் தோன்றியதே பதிற்றுப் பத்தந்தாதி என்னும் பிரபந்தம் என்பது இங்கு நினைத்தற்குரியதாகும்.

திருப்பெருந்துறையிலே குருந்த மா நிழலில் அருட் குரவனாக எழுந்தருளித் திருவாதவூரடிகளுக்கு ஞானோபதேசம் வழங்கியருளிய குருமூர்த்தியாகிய இறைவன் பால் திருவாதவூரடிகள் கொண்டுள்ள எல்லையற்ற பேரன்பினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது இத் திருச்சதகமாகும். தம்மை ஆட்கொண்டருளிய பேரருளாளனாகிய இறைவனிடத்து வாதவூரடிகள் கொண்ட பேரன்பின் முதிர்ச்சியும், அதன் பயனாக 'யான்' 'எனது' என்னும் இருவகைப் பற்றுக்களும் அறவே நீங்க அடிகள்பால் நிகழ்ந்த வியக்கத்தக்க நற்செயல்களும் ஆகியவற்றைப் புலப்படுத்தும் முறையில் இப்பனுவல் அமைந்திருத்தலால். இதற்குப் 'பத்தி வைராக்கிய விசித்திரம்' என ஆன்றோர் கருத்துரை வரைந்தனர்.

பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு பதிகம் என்ற முறையில் இத்திருச்சதகத்தில் பத்துப் பதிகங்கள் அமைந்து உள்ளன. ஒவ்வொரு பதிகமும் தனித்தனி யாப்பமைதி பெற்றுத் தனித்தனித் தலைப்புடன் விளங்குதல் காணலாம். இவற்றுள் 'மெய்தானரும்பி' எனத் தொடங்கும் முதற் பதிகம் 'மெய்யணர்தல்' என்ற தலைப்பில் அமைந்துளது. மெய்யுணர்வானது, தோற்றக் கேடுகளின்றித் தூய்தாய் என்றும் உள்ள மெய்ப்பொருளாகிய இறைவனை இடை விடாது நினைத்து போற்றுதல். உடல், கருவி, நுகர்ச்சி யாகிய உலகப்பொருள்களின் நிலையாமைகண்டு அவற்றின் பிணிப்பிலிருந்து விலகி, மெய்ப்பொருளாகிய கடவுளை அநுபவ வாயிலாக உணர்ந்து போற்றும் நிலையில் திருச்சதகத்தின் முதற்பதிகம் அமைந்துள்ளது. 'மெய்யுணர்தல்' என்னும் இப்பதிகத் தலைப்புக்குத் 'தேகாதி பிரபஞ்சங்களைக் கண்டு நீங்குதல்' என முன்னோர் கூறிய விளக்கம் இத்திருப்பதிகக் கருத்தினை நன்கு புலப்படுத்துவதாகும்.

ஆருயிர்த் தலைவனை நினைந்த அளவில் உண்டாம் அன்புமேலீட்டால் உள்ளத்தே இன்பவுணர்வு தோன்றுத லும், அவ்வுணர்வின் வழிப்பட்ட மெய்ப்பாடாக உடம்பில் மயிர் சிலிர்த்தலும் நடுக்கம் உண்டாதலும், முன் தலைவன் செய்த தலையளியை எண்ணுந்தோறும் நெஞ்சம் நெகிழ்ந்து உருகப் பெறுதலும், அதன் பயனாகக் கண்ணீரரும்புதலும், தலைவனுடைய இனிய பண்புகளையுணர்ந்து இன்புறுதற்குத் தடையாயிருந்த இடையூறுகளெல்லாம் அறவே அகன்று ஒழிய அப்பெருமானது கருணைத் திறத்தினை எண்ணி அகங்குழைந்து பாராட்டிப் போற்றுதலும் ஆகிய இச்செயல்கள் தலையாய அன்புடையார்பால் நிகழ்வனவாகும்.

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி யென்னுங் கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.

எனவரும் இத்திருச்சதக முதற்பாடலால் இனிது விளங்கும். இறைவனது திருவருளில் ஈடுபட்ட மெய்யடியார்கள் பால் நிகழும் அன்புரிமைச் செயல் முறைகளைப் புலப்படுத்தும் முறையில் இத்திருப்பாடல் அமைந்துளது. மெய் அரும்புதல், கைதலைவைத்தல், கண்ணீர் ததும்புதல், வெதும்புதல் என்பன மெய்யின் தொழில்கள் ; உள்ளம் பொய்தவிர்தல் மனத்தின் தொழில்; 'போற்றி சய சய போற்றி' என்றல் வாக்கின் தொழில். எனவே மனமொழி மெய்யாகிய முக்கர ணங்களாலும் இறைவனை வழிபட்டமை புலனாம். என்றும் மாறாத மெய்ம்மைப் பொருளாகிய இறைவனை அன்பினால் அகங்குழைந்து போற்றும் திருவருள் வாழ்வின் சிறப்பினை உணர்ந்து, நிலையற்ற உலகியல் நடையாகிய பொய்ம்மை யைத் தவிர்ந்தொழுகும் உறைப்புடைய மெய்த்தொண்டர் வாழ்வின் இயல்பினை விளக்கும் நிலையில் அமைந்த இத்திருப் பாடல், 'பத்தி வைராக்கிய விசித்திரம் ' என்னும் திருச்சதகப் பொருளையும், அதன்முதற்கண் அமைந்த 'மெய்யுணர்தல்' என்னும் திருப்பதிகம் நுதலிய பொருளையும், இத்தகைய திருவாசகச் செழுமறையினை அருளிச்செய்து அன்புரு வாகிய திருவாதவூரடிகளது திருவுருவ இயல்பினையும் ஒருங்கேயுணர்த்தி நிற்றல் காணலாம்.


வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments