திருவாசகம்
4. போற்றித் திருவகவல்
திருவாசகத் தலைப்பின் விளக்கம்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ' எனத் தொடங்கும அகவல், வணக்கம் எனப் பொருள்படும் 'போற்றி' என்னும் தமிழ் மந்திரத்தால் இறைவனை முன்னிலைப் படுத்துப் போற்றுவதாதலின், 'போற்றித் திருவக வல்' என்னும் பெயர்த்தாயிற்று, நமச்சிவாய என்னும் மந்திரத்தின் முன்னுள்ள நம' என்னுஞ் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் 'போற்றி' என்பதாகும். போற்றுதல் என்பது புகழ்தல், வணங்குதல், குறிக்கொண்டு பாது காத்தல் எனப் பலபொருள் தரும் ஒரு சொல்லாகும். போற்றி என்பது வணக்கம் என்ற பொருளிலும் எம்மைப் பாதுகாத்தருள்க என வேண்டிக்கோடற் பொருளிலும் வழங்கும் செந்தமிழ் மந்திரச்சொல் என்பது, போற்றித் திருவகவலாகிய இதனாலும், போற்றித் திருத்தாண்டகம் முதலாக முன்னுள்ள திருமுறைகளில் காணப்பெறும் அருட்பாடல்களாலும் நன்கு துணியப்படும்.
போற்றித் திருவகவல் ஆகிய இதற்குச் சகத்தின் உற்பத்தி எனச் சான்றோரொருவர் கருத்துரை வரைந்துள்ளார். இங்கே 'சகம்' என்ற சொல், உலகத்தில் வாழும் உயிர்களை உணர்த்தும் என்பர். உயிர்கள் இவ்வுலகிற் பிறந்து வீடு பேறடைதற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் இவ்வகவல் அமைந்திருத்தலால் 'முத்திபெறு நெறியறியும் மொழி போற்றித் திருவகவல்' என இதனைச் சிறப்பித்துரைப்பர் அறிஞர். இப்பாடல் 225 அடிகளையுடையதாகும். இதன்கண் உள்ள எல்லா அடிகளும் நாற்சீரால் இயன்றமையின் இது நிலை மண்டில ஆசிரியப்பாவாகும்.
நான்முகன் முதலிய தேவர்களால் வழிபடப் பெறும் சிறப்பமைந்த காத்தற் கடவுளாகிய திருமாலும் காணுதற்கரிய தன் திருவடியிணையை அன்பிற் சிறந்த மெய்யடியார்கள் கண்டு மகிழ்தற் பொருட்டுப் பேரருளாளனாகிய இறைவன் இந்நிலவுலகிலே எளிவந்தருளிய செய்தியும், உயிர்கள் பொறிகளாலும் உணர்வுகளாலும் வேறுபட்ட பல திற உடம்புகளிற் பொருந்தித் தோன்றிப் பெறுதற்கரிய மக்கட் பிறப்பினை யெய்தும் முறையும், மக்கட் பிறப்பில் தாய் வயிற்றிற் கருவாய்த் தங்கிய நால்முதல் மகவாய் வெளிப்படும் வரையும் நேரும் பலவகைத் துன்பங்களிலும் உயிர்கள் தப்பிப் பிழைக்குமாறும், பிள்ளைப் பருவம் முதல் ஆண்மைப் பருவம் எய்துமளவும் நேரும் பலவகைத் தொல்லைகளும், அவற்றை யெல்லாந்தப்பி உலகியல் வாழ்வில் நன்றாக வாழும் நிலையில் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாக. சிறப்புடைய அக்கருத்தினைக் கலைத்தற்கு முற்படும் பல் வேறு குழுவினரின் தீய முயற்சிகளும், அவற்றாற் சிறிதும் மனங்கலங்காது நனவிலும் கனவிலும் இறைவன் பால் இடையறாப் பேரன்புடையராம் வண்ணம் அவ்விறைவனே குருபரனாக எழுந்தருளிய செய்தியும், மெய்யன்பராகிய அடியார்களைத் தாய்போல் தலையளித்துக் காக்கும் இறைவனது பெருங்கருணைத்திறமும் ஆகியவற்றை இவ்வகவலில் ஒன்று முதல் என்பத்தாறு வரையுள்ள அடிகளால் மணிவாசகப் பெருமான் விரித்து விளக்குகின்றார். எண்பத்தேழாம் அடி முதல் இருநூற்றிருபத்தைந்தாம் அடிமுடியவுள்ள இவ்வகவலின் பிற்பகுதி, சிவபெருமானை முன்னிலைப்படுத்திப் போற்றும் மந்திர மொழியாக அமைந்துளது. இப்பகுதி வடமொழி எசுர் வேதத்தின் இடையே அமைந்த திருவுருத்திரத்தைப் போன்று சிவபரம் பொருளை மலர் தூவி வழிபடு தற்கேற்ற செந்தமிழ் மந்திரங்களாக அமைந்துள்ளது என்றும் வாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் மந்திரங்களாகிய இவை திருக்கோயில்களிலும் பிறவிடங்களிலும் இறைவனை வழிபடுதற்குரிய சிறப்புரிமை வாய்ந்தனவென்றும் ஆசிரியர் மறைமலையடிகளார் தாம் எழுதிய திருவாசக விரிவுரையில் நன்கு விளக்கியுள்ளார்கள்.
திருக்குறளில் உள்ள 'அறன் வலியுறுத்தல்' என்னும் அதிகாரத்தைப் போன்று திருவாசகத்தில் நான்காம் பனுவலாக முறைப்படுத்தப் பெற்றது இப்போற்றித் திருவகவலாகும். முற்றத்துறந்த முனிவர்களால் உணர்த்தப்படும் உறுதிப்பொருள்களுள் இம்மை மறுமை வீடு என்னும் மும்மை நலங்களையும் ஒருங்கே தருவது அறம் என்ற முதற் பொருளேயாகும். எனவே அவ்வறத்தில் பெருமையினை வலியுறுத்தும் நோக்கத்துடன் 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தை அடுத்து 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரம் வைக்கப்பட்டது. திருக்குறளில் அமைந்த இம்முறையினை யொட்டியே திருவாசகத்திலும் நீத்தாராகிய திருத் தொண்டர்களின் பெருமையினை விளக்கும் திருவண்டப் பகுதியின் பின் என்றும் மாறாத நல்லறத்தின் சிறப்பினை வற்புறுத்தும் இப்போற்றித் திருவகவல் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம். இவ்வைப்பு முறையின் அமைப்பினை உணர்தற்கு இப்போற்றித் திருவகவலுக்கும் அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்திற்கும் இடையே அமைந்த தொடர்பினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும்.
குற்றமற்ற மனத்தினால் எண்ணித் துணிந்து இயற்றப் படுவதே அறமென்றும் அதுவும் பொறாமை, அவா, வெகுளி. கடுஞ்சொல் ஆகிய குற்றம் நான்கினையும் விலக்கிய நிலையில் நிகழ்வதென்றும் ஆசிரியர் திருவள்ளுவர் அறத்திற்கு கணம் கூறியுள்ளார். அறத்தின் இயல்பாக அமைந்விலக்கணம் உலகியல் முறையினை உளங்கொண்டு கூறிய பொதுவிலக்கணமாகவே கொள்ளத்தகுவதாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர், அறத்தின் சிறப்பிலக்கணத் தினைக் கடவுள் வாழ்த்தாகிய முதலதிகாரத்திலேயே தெளிவாகக் குறித்துள்ளார். நல்லறங்கள் எல்லாவற்றிற்கும் நிலைக்களமாக விளங்குவோன் அருளாளனாகிய இறைவனே என்ற உண்மையினை 'அறவாழி யந்தணன்' என்ற தொடரால் பொய்யில் புலவர் நன்கு புலப்படுத்தியுள்ளார். எனவே அறக்கடலாய் விளங்கும் அருளாளனாகிய இறைவனது திருவருளை எதிரேற்று நடக்கும் தூய உள்ளமுடைய பெரியோர்களால் இயற்றப்பெறுவது எதுவோ அதுவே உண்மையான அறமாகும் என்பது திருவள்ளுவர் கருத்தாதல் நன்கு தெளியப்படும்.
உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளை யெல்லாம் உள்ளவாறு அறிந்து அவற்றிற்கேற்ப இன்ப துன்பங்களாகிய இரு வினைப்பயன்களை நுகர்விக்க வல்ல தனி முதல்வன் இறைவனாதலின் அவன் திருவடிகளை அன்பினால் வழிபடும் கருத்துடன் மக்கள் தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்களெல்லாம் நல்லறமாகும். இவ்வாறன்றி இறைவனடிகளை மறந்து 'யான்' 'எனது' என்னும் செருக்குடன் செய்யும் செயல்கள் உலகியல் நெறியால் நோக்கும் நிலையில் நல்லன போற் காணப்பட்டாலும் உண்மையால் நோக்குங்கால் வீண் செயலெனவே கருதப்படும். ஒன்றினும் வேண்டுதல் வேண்டாமையின்றி எல்லாவுயிர்களிடத்தும் போருளுடைய னாய் வேண்டும் நலங்களை வழங்கி யருளும் இறைவன் திருவடிகளைப் போற்றி வழிபடுதலே எல்லா அறங்களுக்கும் மூலமான நல்லறமாகும் என்பது சான்றோர் துணிபாகும். அறத்தின் அடிப்படைக் கொள்கையாகிய இவ்வுண்மை யினை,
"காண்பவன் சிவனேயானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம், அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண்செயல், இறைவன் சொன்ன விதி அறம், விருப்பொன் றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே. எனவரும் செய்யுளில் அருணந்தி சிவனார் திட்பமுற விளக்கியுள்ளார்.
மேல் எடுத்துக் காட்டிய வண்ணம் முன்னைத் தமிழ்ச் சான்றோர் பலரும் அறத்தின் இலக்கணங்களாகக் கூறிய கருத்துக்களைத் தொகுத்து நோக்குவோமானால், உலக மக்கள் அறவாழியந்தணனாகிய கடவுளிடத்து நீங்காத பேரன்புடையராய் அருளாளனாகிய அவன் திருவடிகளை யிறைஞ்சித் தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்களே உண்மையான நல்லறங்களாம் என்பது நன்கு விளங்கும்.
இறைவன் திருவருளை நிலைக்களனாகக் கொண்டு நிகழும் அறத்தின் சிறப்பிலக்கணத்தினை உலக மக்களுக்கு உணர்த்தத் திருவுளங்கொண்ட மணிவாசகப் பெருமான். இப்போற்றித் திருவகவலால் மன்னிய திருவருள் மலையெனத் திகழும் சிவபரம் பொருளை மறவாது போற்றி வழி படுமுகமாக வையத்து வாழ்வாங்கு வாழும் நல்லற நெறியை மக்கள் கடைப்பிடித்தொழுகுதல் வேண்டுமெனத் திட்பமுற வலியுறுத்தியுள்ளார். எனவே திருவாசகத்திலுள்ள போற்றித் திருவகவலாகிய இது, திருக்குறளில் அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்துடன் தொடர்புடையதென்பது இனிது புலனாம்.
இதுகாறும் கூறியவாற்றல் திருவாசகத்தில் முதற்கண் அமைந்த சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் ஆகிய நான்கு திருப்பாடல்களும், திருக்குறளின் தொடக்கத்தே அமைந்த கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கதிகாரங்களைப் போன்று, திருவாசகச் செழுமறையின் பொருள் நலங்களைப் புலப்படுத்தும் பாயிரமாக முறைப்படுத்தப் பெற்றன என்பது ஒருவாறு புலனாதல் காணலாம்.
வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து