திருவாசகம்
3. திருவண்டப்பகுதி
திருவாசகத் தலைப்பின் விளக்கம்
எல்லாம் வல்ல இறைவன், உலகப் பெரும்பரப்பாகிய அண்டங்கள் எல்லாம் இல்நுழைகதிராகிய வெயிலொளியில் விளங்கித் தோன்றும் நுண்ணிய அணுக்களைப் போன்று மிகச் சிறியனவாகத் தோன்றத் தான் அவற்றினும் மிகமிகப் பெரியவனாகி எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குதலாகிய பருமை நிலையினையும, உயிர்க்குயிராய் உள் நின்று எவ்வகைப் பொருள்களையும் ஊடுருவி இயக்கியருளும் நுண்மை நிலையினையும் ஒருங்குடையவனாவன். இவ்வுண்மையை அவனருளாலே உணரப்பெற்ற வாதவூரடிகள், அம்முதல்வனது தூல சூக்கும நிலையை வியந்து போற்றுவதாக அமைந்தது திருவண்டப் பகுதியாகிய அகவலாகும். இஃது 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்' எனத் தொடங்கி அண்டப் பரப்பின் உள்ளும் புறம்பும் திகழும் இறைவனது பேராற்றலை விரித்துக் கூறுவதாதலின் திருவண்டப்பகுதி' என வழங்கப் பெறுவதாயிற்று. 'அண்டப் பகுதி' என்னும் இது, ஆத்திசூடி என்றாற் போலப் பாட்டின் முதற்குறிப்பாற் பெற்ற பெயராகும். இணைக் குறளாசிரியப்பாவாகிய இது, 182 அடிகளையுடையதாகும்.
திருவண்டப் பகுதியாகிய இவ்வகவல் சிவனுடைய தூலசூக்குமத்தை வியந்தது' என முன்னுள்ளோர் கருத்துரை வரைந்துள்ளனர். இறைவன் செய்தருளும் ஐந்தொழில்களில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் நான்கினைப் பற்றிப் பொதுவாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ளுதற்கேற்ற அரும்பொருள்கள் இதன்கண் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இதன் பொருளமைதியை, "திகழ்திருவண்டப் பகுதித் திருவகவல் செப்பியது" "தகுசிருட்டி நிதியொடுக்கஞ் சாற்றுதிரோ தம்பொதுவாய்" "அகலமுறத் தேர்ந்திடவே யருளிய நற்பொருளாகும்" எனவரும் திருவாசக உண்மையால் இனிதுணரலாம்.
அளக்கலாகாப் பேரளவினவாகிய அண்டங்களெல்லாம் இறைவனது அருள் வெளிப்பரப்பினுள்ளே சிறிய அணுக்களையொப்ப அடங்கித் தோன்றுதலின், அவ்விறைவனது பெருமை, சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டா இயல்பினது. அண்டங்களின் தலைவராக நியமிக்கப் பெற்ற தெய்வங் களாகிய நுண்ணிய உயிர்களாலும் அறியவொண்ணாத நிலையில் உயிர்க்குயிராய் உள்நின்று இயக்குவோன் இறைவன் ஒருவனே ஆதலின் அப்பெருமான் நுண்ணியவற்றுல் எல்லாம் மிகவும் நுண்ணியன். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பினவாய் அண்டப் பரப்பில் திகழும் ஞாயிறு, திங்கள், வான், வளி, தீ, நீர், மண் முதலிய எல்லாப் பொருள் களுக்கும் ஆற்றலை வழங்கி அவற்றைத் தொழிற்படுத்துவோன் அம்முதல்வனே. பேரருளாளனாகிய அப்பெரியோன் அன்புடைய அடியார்களுக்கு அணுகி நின்றருளும் எளிமைத் திறமும் அன்பரல்லாதார்க்கு மிக மிகச் சேய்மையனாக அப்பாற்பட்டு நிற்கும் அருமைத்தன்மையும் ஒருங்குடையான். இறைவன் மாதொரு பாகனாக எளிவந்து தோன்றி வழங்கிய பேரின்பம், உடம்போடிருந்து பொறுத்தற்கு இயலாதபடி உள்ளம் முழுவதையும் அகத்திட்டுக் கொண்டது; என வாதவூரடிகள் தாம் பெற்ற அருளாரமுதப் பேரின்ப நுகர்ச்சியை இத் திருவகவலில் விரித்துக் கூறியுள்ளார்.
வேண்டுதல் வேண்டாமையிலான் ஆகிய இறைவன் திருவடிகளை இடைவிடாது போற்றும் பெரியோர்களே 'யான்' 'எனது' என்னும் இருவகைப் பற்றும் நீத்த நீத்தா ராவர். புலன்களிற் செல்லும் அவா ஐந்தினையும் அடக்கிய இப்பெருமக்களே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும் உள்ளவாறு உணர வல்லவர்கள். அணுமுதல் அண்டம் ஈறாகவுள்ள பொருள்களைப் பற்றிக் 'கூர்ந்து ஆராய்ந்து உணர்த்தவல்ல பேரறிவு, முற்றத்துறந்த முனிவர்களாகிய இப்பெரு மக்களுக்கே உரியதாகும். இறைவன் திருவருள்வழி ஒழுகும் நிறைமொழி மாந்தராகிய வாதவூரடிகள், அண்டப் பரப்பின் அகத்தும் புறத்தும் இடையீடின்றிக் கலந்து விளங்கும் இறைவனது இயல்பினை உணர்த்து முகமாக, அவன் அருளாலே அவன் தாள் வணங்கிய மெய்யடியார்களாகிய நீத்தார் பெருமையினையும் உடம்பொடு புணர்த்து விளக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். நிறைமொழி மாந்தர் அருளிய மறைமொழியாக விளங்கும் இத்திருவகவல், திருக்குறளில் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தைப் போன்று திருவாசகத்தில் மூன்றாந் திருப்பாட்டாக அமைக்கப் பெற்றிருப்பது, நீத்தார் பெருமை என்ற அதிகாரத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பை இனிது புலப்படுத்துவதாகும். இந்நிலவுலகும் இதனைச் சூழ இயங்கும் ஏனை உலகங்களும் உருண்டை வடிவினவாய் ஒன்றனுக்கு ஒன்று ஈர்ப்பாற்றல் உடையனவாக இயங்கிவரும் அற்புதக் காட்சியினை வாத வூரடிகள் இவ்வகவலில் விளக்கிய திறம் வியந்து போற்றத் தக்கதாகும்.
வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து