Subscribe Us

header ads

02 கீர்த்தி திருவகவல்

திருவாசகம்


2. கீர்த்தித் திருவகவல்



திருவாசகத் தலைப்பின் விளக்கம்


திருவாசகத்தின இராண்டாம் திருப்பாட்டாகிய கீர்த்தித் திருவகவல், சிவபெருமான் தன்பால் அன்புடைய மெய் அடியார்களுக்கு எளிவந்து அருள்சுரந்த புகழ்ச் செய்திகளை விரித்து உரைப்பதால் கீர்த்தித் திருவகவல் என்னும் பெயர்த்தா யிற்று. கீர்த்தி -புகழ். இதற்குச் 'சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை' என முன்னைச் சான்றோர் ஒருவர் கருத்து உரைத்துள்ளார். 'புகழ்பெருகும் செய்கை எல்லாம் புகல் அகவல்' எனப் போற்றப்பெறும் சிறப்புடையது. இக்கீர்த்தித் திருவகவலாகும். நிலைமண்டில ஆசிரியப்பாவாக அமைந்த இப்பாடல் 146 அடிகளை யுடையதாகும்.

தில்லை மூதூரில் ஐந்தொழிற் றிருக்கூத்தியற்றும் சிவபெருமான் உலகத்து உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய்த் திகழும் தன்னுடைய அருட்குணங்கள் யாண்டும் விளங்க இவ்வுலகில் அன்பிற்சிறந்த அடியார்கள் பொருட்டு நிகழ்த்தி அருளிய அற்புத நிகழ்ச்சியாகிய திருவிளையாடல்களை மணிவாசகப் பெருமான் இத்திருவகவலில் விரித்துரைத்துப் போற்றியுள்ளார். இதன்கண் குறிப்பிடப் பெற்ற அருட்செய்திகளின் விளக்கத்தைப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி திருவிளையாடல், திருவுத்தரகோசமங்கைப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முதலிய நூல்களைக் கொண்டு ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.

திருப்பெருந்துறையில் அருட்குருவாகப்போந்து மெய்ப் பொருளை உபதேசித்தருளிய சிவபெருமான் வாதவூரடிகளை நோக்கி 'நலமவி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருக' எனப் பணித்தருளி மறைந்தமையும், அந்நிலையில் உடனிருந்த அடியார்கள் இறைவனது பிரிவாற்றாது தம் உடம்பினைத் துறந்து இறைவனுடன் இரண்டறக்கலந்தமையும், அங்ஙனம் இறைவனையடையப் பெறாது எஞ்சி நின்ற அடியார்கள் தீயிற்பாய்ந்து தம் உடம்பினை விடுத்து இறைவனை அடைந்தமையும், கயிலைப் பெருமானாகிய கடவுள் அன்பர்களுக்கு நேர் நின்று அருள்செய்தற் பொருட்டுப் புலியூர்ப் பொதுவாகிய பொன்னம்பலத்திலே புகுந்தருளினமையும் ஆகிய செய்திகள் இக்கீர்த்தித் திருவகவலின் இறுதிப் பகுதியிலே குறிக்கப் பெற்றுள்ளன. இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் திருப்பெருந்துறையில் அருட் குரவனாக எழுந்தருளிய இறைவன் பணித்தவண்ணம் வாதவூரடிகள் தில்லைக்கு வந்தபொழுது இக்கீர்த்தித் திருவகவல் அருளிச் செய்யப்பெற்றதென்பது நன்கு புலனாம்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்தினையடுத்து வான்சிறப்பு என்ற அதிகாரம் வைக்கப்பெற்றமை போன்று திருவாசகத்தில் கடவுள் இலக்கண முணர்த்தும் சிவபுராணத்தையடுத்து இறைவனது இனிய திருவருளாகிய மழையின் சிறப்புணர்த்தும் கீர்த்தித்திருவகவல் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தக்கதாகும்.


வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments