Subscribe Us

header ads

01 சிவபுராணம்

திருவாசகம்


1. சிவபுராணம்



திருவாசகத் தலைப்பின் விளக்கம்


திருவாசகத்தின் முதற்கண் உள்ள சிவபுராணம், கீர்த்தித்திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித்திருவகவல் என்ற நான்கும், திருக்குறளின் முதற்கண்ணவாகிய கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களையும் போன்று தெய்வத் தமிழ்மறைக்குரிய பாயிரமாக அமைந்தன எனக் கொள்ளுதல் பொருந்தும்.

திருக்குறளில் முதற்கண் உள்ள கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தைப் போன்று திருவாசகத்தின் முதலில் அமைந்தது சிவபுராணமாகும். இஃது, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது அநாதி முறைமையான பழமையினை விரித்துரைப்பதாகலின், சிவபுராணம் என்னும் பெயர்த்தாயிற்று. 'சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை, முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்' என இதன்கண் அடிகள் குறிப்பிடுதலால், சிவனது அநாதி முறைமையான பழமை யென்னும் ஒரு பொருளே நுதலியது இத்திருப்பாட்டு என்பது இனிது விளங்கும். தொண்ணூற்றைந்தடிகளை யுடைய இப்பாடல்,

ஒருபொருள் நுதலிய வெள்ளடி யியலால் திரிபின்றி வருவது கலிவெண் பாட்டே' (செய்யுள்-153)

என்ற தொல்காப்பிய இலக்கணத்தின்படி அமைந்த கலி வெண் பாட்டாகும். 'இது கடவுட்பராய முன்னிலைக்கண் வந்த பாடாண் பாட்டு' என்பர் ஆசிரியர் மறைமலையடிகள்.

உலகிற்கு நிமித்த 'காரணனாகிய சிவபெருமான், திருவைந்தெழுத்தாகிய மந்திரப்பொருளாய் விளங்கி உயிர்களின் நெஞ்சத்தாமரையிலே நீங்காதெழுந்தருளியிருந்து உள்நின்று உபகரித்தருள்வதோடு புறத்தேயும் ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளி வந்து திருப்பெருந்துறையில் தமக்கு மெய்ப்பொருளை உபதேசித்தருளிய அருட் செய்தியும், அப்பெரியோன் அறிவுறுத்தருளிய மெய்ந்நூற் பொருளைச் சிந்தித்துணரும் நிலையில் அம் முதல்வன் ஆகம நூற் பொருளாகித் தம் நெஞ்சத்தே அண்ணித்திட்டு அமுதூறும் இனிமைத்திறமும், தனிமுதற் பொருளாகிய இறைவன் தன்னை அன்பினால் நினைந்துருகும் மெய்யடியார்கள் உள்ளத்தே அவரவர் நினைந்ததிருமேனிகொண்டு விரை அருள்புரிதல் வேண்டிப் பலவேறு திருக்கோலங்களைத் தாங்கி எங்கும் நீக்கமறக் கலந்து நிற்கும் இயல்பும் ஆகிய இறைவனது பேரருட்டிறத்தை நினைந்துருகிய திருவாத வூரடிகள்,

'நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க' எனச் சிவபுராணத்தின் முதற்கண் சிவபரம்பொருளின் திரு வடிகளை வாழ்த்திப் போற்றுகின்றார்.

ஐம்புலன்களால் அலைக்கப்பட்டுப் புறத்தே விரைந்தோடும் மனத்தின் வேகத்தைக் கெடுத்துப் பொறிவாயிலாகச் செல்லும் அவா ஐந்தனையும் அடக்கி உயிர்களை ஒரு நெறிப்படுத்தவல்ல பேராற்றலும், திருவருள்வழியொழுகும் அடியார்களது பிறவிப் பிணிப்பினை அறுக்கும் வன்மையும், யாவராயினும் அன்பரல்லாதாரால் அறியப்படாத அருமை யும், கைகூப்பி வணங்கும் தொண்டர்களின் உள்ளத்திலே சிறந்து விளங்கிச் செந்தேன்பொழியும் இனிமைத் திறமும், தலைதாழ்த்து வணங்கும் தொண்டர்களைத் தேவர்களும் தொழுது போற்றும்வண்ணம் உயர் நிலையில் வைத்துச் சிறப்பிக்கும் அருள் நலமும் ஒருங்குடைய இறைவன் திருவடிச் சிறப்பினை, 'வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க ' என வெற்றித்திறம் விளங்க விரித்துப் போற்றியுள்ளார்.

இவ்வாறு சிவபெருமான் திருவடிகளுக்கு வாழ்த்தும் வெற்றியும் கூறிய வாதவூரடிகள், 'ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளு மலைபோற்றி' எண்வகைப் போற்றி வாசகத்தால் எண்குணத்தானாகிய வணக்கமுங் கூறினார்.

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான்

என இறைவன் திருவருட்டுணைகொண்டு தாம் சொல்லக் கருதிய பொருள் சிவபுராணம் என்பதனைத் தெளிவாக எடுத்துரைத்தார். இதனால் சிவபுராணம் என்ற இப்பெயர், இம்முதற்பகுதிக்கேயன்றி அடிகள் அருளிய திருவாசகம் முழுவதற்கும் பொருந்துமெனக் கொள்ளுதற்கும் இடனுண்டு.

இங்ஙனம் நுதலிய பொருளை முன்மொழிந்த வாதவூரடிகள்,

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்' என்ற தொடரால் அவையடக்கமும் கூறினாராயிற்று.

எனவே நூன்முகத்து உரைத்தற்குரிய வாழ்த்து, வணக்கம், வரு பொருளுரைத்தல் ஆகிய மங்கல வாழ்த்தும் அவையடக்கமுமாக இச்சிவபுராணத்தின் முற்பகுதி அமைந்திருத்தல் காணலாம்.

உயிர்கள் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள உடம்புகளைப் பெற்றுப் பிறந்து ஓரறிவு முதல் ஆறாவதறிவெனப்படும் மனவுணர்வு ஈறாகப் படிப்படியே அறிவினாற் சிறந்து வளரும் வளர்ச்சி முறையும், இங்ஙனம் பலவகைப் பிறப்புக்களிலும் பிறந்துழன்று தூய்மையடைந்த நல்லுயிர்களுக்கு இறைவன் திருவடிப்பேறு நல்கி அவ்வுயிர்களை ஆட்கொண்டருளுதலும், அறிவுநூல்களாகிய வேதங்களாலும் உணர்தற்கரிய அப்பரம்பொருள் உயிர்களின் நலங்கருதிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இயற்றுமுகமாக உயிர்களின் அறியாமையை அகற்றித் தூய்மை செய்து பேரின்பம் நல்கிப் பிறவிவேரறுக்கும் பெற்றியும், தாயிற்சிறந்த அருளாளனாகிய இறைவன் எல்லாமாய் அல்லவுமாய் நிற்குமியல்பும், தில்லைக்கூத்தனாகிய அவ்விறைவன் திருவடிகளை நெஞ்சம் நெக்குருகிப்பணிந்தேத்திப் பரவிய திருப்பாட்டின் பொருளுணர்ந்து சொல்லும் மெய்யடியார்கள் பல்லோரும் போற்றச் சிவனடிக்கீழ் வைகும் பேரானந்தப் பெருவாழ்வு எய்தி இன்புறுவர் என்பதும் ஆகிய உண்மைகள் சிவபுராணமாகிய இத்திருப்பாட்டில் விரித்து உரைக்கப்பெற்றுள்ளன. இத்திருப்பாட்டு சிவனது அருவ நிலையைக் கூறுவதெனவும் "ஈசர் தமக்கியல்பான திருநாம முதலெவையும், மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட் குறிப்பு" உடையதெனவும் சான்றோர் கூறுவர்.


வித்துவான் க.வெள்ளைவாரணன், துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (முதற் பகுதி) என்ற நூலிருந்து


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments