பஞ்சபுராணம் - 01
தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. (1.1.1)
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் ஏங்கெழுந் தருளுவ தினியே (8.37.3)
திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை மாகடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்ற எஞ்சிவனை திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம் குளிர என் கண் குளிர்தனவே (9.5.2)
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.(9.29.9)
பெரியபுராணம்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். (12.00.1)
திருச்சிற்றம்பலம்
பஞ்சபுராணம் - 02
தேவாரம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. (7.24.1)
திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே (8.37.9)
திருவிசைப்பா
பெருமையிற் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே
கருமையின் வெளியே கயற்கணான் இமவான் மகள் உமையவள் களை கண்ணே
அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பல புக்குருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே (9.1.4)
திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய் மனத்தொண்டர் உள்ளீர்
சில்லாண்டிற் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேருவிடங்கன் விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதங் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (9.29.4)
பெரியபுராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவி யோம்மஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி (12.01.2)
திருச்சிற்றம்பலம்
பஞ்சபுராணம் - 03
தேவாரம்
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. (2.18.1)
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருளிலை யானால்
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே (8.28.1).
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமாறிசைய (9.1.6)
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல் லாம் விளங்க
அன்ன நடைமடவாள் உமைகோன்அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே (9.29.1)
பெரியபுராணம்
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி (12.1.1)
திருச்சிற்றம்பலம்
பஞ்சபுராணம் - 04
தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே. (5.90.1)
திருவாசகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக்கு அருளியவாரு ஆர்பெறுவார் அச்சோவே (8.51.1)
திருவிசைப்பா
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்ட சோளேச்சரத் தானே (9.13.1)
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. (9.29.2)
பெரியபுராணம்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார் (12.58.7)
திருச்சிற்றம்பலம்
பஞ்சபுராணம் - 05
தேவாரம்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஓன்றுடையானை உமைஒருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே. (1.98.1)
திருவாசகம்
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டக் கோவான் மொத்துண்
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் (8.8.8)
திருவிசைப்பா
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர் படரொளி தரும் திரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்று பொற் குழல் திருச்சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழுகு ஓக்கின்றதே (9.23.1)
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்பெற்றதார் பெறுவார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமைமணவாளனுக்கு காம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே (9.29.7)
பெரியபுராணம்
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்
மன்னிவாழ் கயிலைத் திருமாமலை. (12.00.11)
திருச்சிற்றம்பலம்
0 Comments