எட்டாததையும் எட்ட வைக்கும் சக்தி வாய்ந்தவர் பையனூர் எட்டீஸ்வரர்
அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் திருக்கோயில்,
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பையனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
நியாயமான வழக்கு விவகாரங்களில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வங்கள் கிடைக்கவும் இங்குள்ள எட்டீஸ்வரர் சுவாமியையும், எழிலார்குழலி அம்மனையும் வழிபட்டு அருள் பெறுகின்றனர்.
ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்குளத்தின் தென்புறம் சிவாலயமும், வடபுறம் பெருமாள் ஆலயமும் கிழக்கு முகமாய் அமைந்துள்ளன.
கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட கற்றளியாக பையனூர் சிவாலயம் அமைந்துள்ளது. ஆலய விமான அமைப்பு, "கஜபிரஷ்டம்' எனப்படும் தூங்கானை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
எதிரே நந்தி மண்டபத்தில் எழிலான நந்தி தேவர், இறைவனை நோக்கி அமர்ந்துள்ளார். அன்னை எழிலார் குழலி, ஆலயத்தின் இடது முன்புறம் சந்நிதி கொண்டுள்ளாள்.
இது தவிர, சூரியன், சந்திரன், விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் ஆறுமுகப் பெருமான், இடைக்காட்டுச் சித்தர், தம்பதி சமேத நவகிரக சந்நிதி என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய திருமேனிகள் உள்ளன. இவை அனைத்தும் குடமுழுக்கு விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும்.
ஆலயத்தின் பழமை
காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு பல்லவ தேசத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள் தங்கள் காலத்தில் சென்னை, காஞ்சி ஆகிய பகுதிகளைச் சுற்றி ஏராளமான திருக்கோயில்களைக் கட்டினர். குடிமக்களிடையே பக்தி பெருகவும். நாடு வளம் பெறவும் ஆலய வழிபாடுகளைத் தடை இல்லாமல் நடத்தி வந்தார்கள். தங்கள் காலத்துக்குப் பிறகும் பூஜைகள் நிரந்தரமாக நடப்பதற்கு எண்ணற்ற நிலங்களையும் ஏற்படுத்தி விட்டுப் போனார்கள் பல்லவர்கள். பல்லவ மன்னர்கள் கட்டிச் சிறப்பித்த பல கோயில்களுள் ஒன்றுதான் பையனூர் ஸ்ரீஎட்டீஸ்வரர் ஆலயம் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த அற்புதமான திருக்கோயில், சைவம் - வைணவம் இரண்டும் ஒற்றுமையாக இருந்து வந்துள்ள கிராமம் பையனூர். இதை நிரூபிக்கும் வகையில் எட்டீஸ்வரர் சிவாலயமும், அருளாளப் பெருமாள் வைணவ ஆலயமும் ஊரில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரண்டு ஆலயங்களுக்கும் நடுவே ஒரு பைரவர் குளம் என்ற திருக்குளம் காணப்படுகிறது.
தல வரலாறு:
பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரத்தில் எட்டீஸ்வரரின் பக்தனான நாகன் எனும் விவசாயி வசித்து வந்தவன். ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி செய்து ஆலயத்துக்குச் சேர வேண்டியதை அங்கு சேர்த்து விட்டு,
தங்களுக்கு உரிய கூலியை ஊர் சபையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் ஊர் சபையின் உறுப்பினர்கள் சிலர், நாகனுக்கான கூலியைக் கொடுக்காமல் விரட்டி விடுவார்களாம். செய்த வேலைக்கு கூலி கிடைக்காத நாகன், எட்டீஸ்வரரிடம் கண்ணீர் மல்கத் தன் குறையைச் சொன்னான். அப்போது அனைவரும் கேட்கும்படியாக, அனைவரும் நில்லுங்கள் அப்படியே என்றொரு குரல் அதிகாரமாகக் கேட்டது. நாகனுக்கு உரிய கூலியைக் கொடுங்கள். என்று அந்த அசரீரி சொன்னது. இது எட்டீஸ்வரரின் எச்சரிக்கை என்பதை ஊர் சபையினர் உணர்ந்தார்கள். அதன் பின், இறைவனின் சந்நிதிக்குப் போய் மன்னிப்புக் கேட்டதோடு, நாகனிடமும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அவனுக்குச் சேர வேண்டிய கூலியை மொத்தமாகக் கொடுத்தனர். இனிமேலும் இது போல் எதுவும் நிகழாது எங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று இறைவனிடம் சொல் என்று நாகனிடம் கெஞ்சலாக வேண்டிக் கொண்டனர். நாகனும் அவர்களை மன்னித்து, இறைவனுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டான் என்று இவ்வாலய வரலாறு.
தற்போது ராஜகோபுரத் திருப்பணி மற்றும் சுற்றுச் சுவர் திருப்பணி நடைபெறுகிறது. இதைக் காணும் சிவ அன்பர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து சிவத் திருப்பணியில் கலந்து கொள்ள அன்புடன் அழைகின்றோம்.
அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்
அரசு வரிவிலக்கு பெற்றது
இந்தியன் வங்கி திருப்போரூர்
வங்கி கணக்கு எண். 827996759
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பையனூர் கிராமம்
0 Comments