திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருவடிகளை அடைவதற்காகவே, நாம் பிறவி எடுத்துள்ளோம்.
ஆதலால், அத்திருவடிகளைச் சிந்தித்தலும், துதித்தலும், வணங்குதலுமே நமது கடமையாகும். அறியாமை, பிறப்பு இறப்பு, சுழற்சியையும் ஒடுக்குபவராக உள்ள சிவபெருமான், இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே அணைக்கட்டு கிராமத்தில், அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை, அறம்வளர்த்தஈஸ்வரர் என்ற திருநாமத்தில், சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பிரதோஷ பூஜைகள் மிகவும் விசேஷமானதும், திருமணத்திற்கான பரிகார ஸ்தலமும் ஆக விளங்குகிறது.
சுவாமி ஸ்ரீ அறம்வளர்த்தஈஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி என்ற திருநாமத்தோடு, கிழக்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளார். இக்கோவிலில் பெரிய உருவத்தில் நந்தியம் பெருமான் அமர்ந்துள்ளார். சிவ கோஷ்டங்கள் உள்ளன. சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் இடையில், சோமாஸ்கந்த வடிவத்தைக் குறிக்கும் வகையில், ஸ்ரீ முருகப்பெருமான் சன்னதி அமைந்துள்ளது. ஆலயம் அருகில் வன துர்க்கை, மற்றும் ஜேஷ்டாதேவி சிலைகள் காணப்படுகின்றன. கோயில் குளம் செல்வ விநாயகர் குளம் என்று அழைக்கப்படுகிறது. தினப்படி பூஜை ஒரு வேளை நடைபெறுகிறது.
திருச்சிற்றம்பலம்.
0 Comments