Subscribe Us

header ads

மோன மந்திரம் - அசபை - பேசா எழுத்து - திருமந்திரம் 4ம் தந்திரம் பாடல் 3



தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் 

தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் 

தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும் 

தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.

தேவர்க்கும், மூவர்க்கும் மற்றும் யாவர்க்கும் பெருமானாகிய முழுமுதற் சிவன், என்றும் நிலைத்து உறைகின்ற திருவிடம் சிற்றம்பலம், சிதம்பரம், திருஅம்பலம் ஆகும். இவ்விடங்களிலேயே தேவர்கள் உறைவார்கள். இவ்விடங்கள், மனிதர்கள் உறைவதற்கும் உரிய பொதுவான இடங்கள் ஆகும். அசபா மந்திரத்தை மனதிற்குள் தியானிக்கும் போது மனம் ஒடுங்கி, புற உலகம் மறைந்து ஆன்ம அறிவாகிய பேரொளி காட்சியாகக் கிட்டும் என்பது திருமூலர் பாடல். சிற்றம்பலம், சிதம்பரம், திருவம்பலம், தென்பொது என்னும் இந்நான்கும் சிவன் இயல்பாய் இருக்கின்றதும், பரவெளியாய் நிற்பதும் அவனது சத்தியே.

அம்பலம் - ஊர்ப்பொதுமன்றம்,

சிறு அம்பலம் - சிற்றம்பலம்; சிறிய சபை, சிறுமை, சிறுத்தொண்டர் என்பதுபோல நுணுக்கம் என்பதின் மேற்று.

அம்பரம்-ஆகாயம். சித் அம்பரம் சிதாகாசம; பரஞானாகாயம் என்பதாம்.

திரு - ஞானம் . 'போகமும் திருவும் புணர்ப்பானை என்பதன் கண்ணும் இப்பொருட்டாதலை அறிக, திரு வம்பலம் ஞானசபை. இத்திருவம்பலம் புண்ணிய பூமியாகிய மண்ணுலகத்திருப்பினும் போகபூமியாகிய விண்ணிலுறையும் தேவர்கள் தம் போகபூமிவாசம் நிலைபெற வணங்கிச்செல்ல வந்து உறைகினறனர் என்பதாம்.

இம்மந்திரத்தின் பொருள் இந்த அதிகாரத்திற்கு ஏற்புடைத்தாமாறு யாங்ஙனமெனின், அசபையைத் தியானிக்க, சிதாகாசமாகிய தகராலயதரிசனம் கிட்டு மாதலின் என்க.

Post a Comment

0 Comments