நான்காம் தந்திரம் - 1. அசபை
பாடல் எண் : 2
ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி
ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே.
உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் (சிவம்), அ, உ, ம ஆகிய முத்தொழில் எழுத்துக்களின் ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக இயங்குகிறது: ஈரெழுத்து (அ, உ): இது சிவம் - சக்தி ஆகிய இருவராகப் பொருந்தி நிற்கும் நிலையைக் குறிக்கும். மூவெழுத்து (அ, உ, ம): உலகைப் படைப்பதற்காக (சிருஷ்டி), ஒளிரும் பேரொளியாகக் காட்சியளிக்கும் நிலையைக் குறிக்கும். மகாரம் (ம): இந்த எழுத்து, ஆன்மாக்களுக்கு உலக வாழ்வில் மயக்கத்தை (மறைப்பை) ஏற்படுத்துகிறது. பிரணவ மந்திரமும் அசபை அல்லது பேசா மந்திரமே என்பது திருமூலர் பாடல்.
பிரணவத்தின் பொருளுணர்த்துதல்
ஒ என்னும் ஓரெழுத் தாலே,உலகெல்லாம் ஒழிவற நிறைந்துநின்று, அகாரமும் உகாரமும் ஆகிய ஈரெழுத்தாலே சிவமும் சத்தியுமாகிய இருவராகப் பொருந்தி நின்று. அகார உகார மகார மாகிய மூவெழுத்தாலே சிருஷ்டி யுன்முகமாகக் காட்சி யளிக்கின்ற ஒளிப்பிழம்பாகிய சிவம், மகாரத்தால் மயக்கத்தைச் செய்தது என்றவாறு.
ஓம் என்பது அகார உகார மகார நாத விந்து இவற்றின் கூட்டுறவால் விளைந்தமையை விளக்கி அருளுகின்றார்.
உலகெங்கும் தானாகி என்றது 'ஓ' என்பதிலுள்ள 0 பிந்துவாகிய வட்டமும், - இவ்வடிவுள்ள நாதமும் கூட உலகந்தோன்றி நிற்குமாதலின், பிந்து நாதங்க ளுடைய அகார உகாரங்களுடைய சேர்க்கையே உலகெலாம் என்றது. அவ்வோரெழுத்தும் முற்கூறி யாங்கு அகாரவுகாரங்களின் சேர்க்கையே என்பதும், அவ்வெழுத்துக்களே சிவசத்திகள் என்பதும் இசைந்தங்கு இருவராய் என்பதால் விளக்கியருளப்பட்டது.
மூவெழுத்து என்றது மேற்கூறியவற்றோடு மல எழுத்தாகிய மகரமும் கூடிய நிலையாம். சோதி ஐ எனப் பிரித்து, சோதிவடிவான தலைவனாகிய சிவம் எனப் பொருள் கொள்க, மயக்கம் அது உற்றது - மயக்கை விளைவித்தது, அது. பகுதிப்பொருள் விகுதி.
பிரணவமும் அசபையாதலின் இம்மந்திரம் இவ்வதிகாரத்திற்கு இயைபுடைத்தாயிற்று.
0 Comments