Subscribe Us

header ads

9.அரக்கன் தோள் நெரித்தது


திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்



9.அரக்கன் தோள் நெரித்தது


திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 40. குலாப் பத்து - மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய


வானினும் நீரினும் செல்லவல்லவர்களும் பல மாயங்களும் கற்றுக் கைதேர்ந்தவர்களுமாகிய அரக்கர்களுக்குத் தலைவனாக, இலங்கையைத் தலைமையிடமாக வைத்து மூவுலகங்களையும் ஆட்சி செய்துவந்த இராவணன் என்னும் அரக்கன்,

சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல வரங்களையும் பெற்றுத் தேவர்களும் மூவர்களும் அடிபணியவும் இருசுடரும் ஐம்பெரும்பூதமும் ஏவல் கேட்கவும் தனக்கு மிக்காரும் ஒத்தாரும் எவ்வுலகத்திலும் இல்லை என இறுமாப்புக் கொண்டு திரிந்து வந்தான்.

ஒரு நாள் அவன் வான் வழியாக விமானத்தில் செல்லும்போது, சிவபெருமான் கயிலைக் குன்றம் எதிர்ப்பட்டது; பாகன், விமானத்தை நிறுத்தி, சுயிலைக்குன்றத்தை வணங்கி வலம் செய்து செல்வதே முறை எனக் கூறினான்.

ஆணவம் தலைக்கேறிய அரக்கன், நான் பெற்ற பேறு அனைத்தும் சிவபெருமான் அளித்தவையே என்பதை அறவே மறந்து, ஒரு சிறிதும் பணிவு இன்றி, விமானத்தைக் கயிலைக்குன்றுக்கு மேலே செலுத்துமாறு கட்டளையிட்டான்; விமானம் மேற்செல்லும் ஆற்றலின்றி நின்றுவிடவே, கடுஞ்சினங் கொண்டு, குறுக்கே நின்ற கைலைமலையையே எடுத்து எறிந்து விடுவதர்க விமானத்தினின்றும் இறங்கித் தன் வீரத்தோள்களால் மலையைப் பெயர்க்கத் தொடங்கினான்.

மலையும் சிறிது அசைவுற்றது; கைலையில் இறைவனோடு வீற்றிருந்த உமையம்மையும் துணுக்குற்றனர். சிவபெருமான் தன் திருவடியின் சிறு விரலைச் சிறிது அழுத்தினார். ஒரு மலையைத் தூக்கி எழும் மற்றொரு மலைபோல் கைலையைத் தோள்கொடுத்துத் தூக்கிய அரக்கனது முடியும் தோளும் நெடுநெடு என நெரிபட்டு அரக்கனும் யானைக் காலில் அகப்பட்ட அத்திப்பழம்போல் நசுக்குண்டு கதறி னான்.

பல காலம், மலையடியிற் கிடந்த வண்ணமாகவே சிவபெருமானைப் பணிந்து பல இனிய பாடல்களைப் பாடி விடுதலையடைந்து சிவபெருமான் திருவருளையும் மேலும் பல வரங்களையும் பெற்று இலங்கைக்குத் திரும்பினான்.


Thanks to: Thiruvasagam publication of Social Religious Guild, Thirunelveli


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments