Subscribe Us

header ads

10. அரியொடு பிரமற்கு அளவறியாமை


திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்



10. அரியொடு பிரமற்கு அளவறியாமை


திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 2. கீர்த்தித் திரு அகவல் - அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்


அனற் பிழம்பாக நின்ற சிவபெருமான் அடியையும் முடியையும் அரியும் பிரமனும் அளந்து காணவியலாது நின்றதைக் குறிப்பிடுவது.

படைப்புக் கடவுளாகிய பிரமனுடைய நாட்கள் ஒவ்வொன்றும், தேவர்கள் ஆண்டில் 12,000 ஆண்டுகள் கொண்ட பகற்பொழுதும், அதே அளவுள்ள இராப்பொழுதும் கொண்டதாகும். தேவர்கள் ஆண்டு 12,000 என்பது, மண்ணுலக ஆண்டு 4,320,000,000-க்குச் சமமாகும்.

பிரமனுடைய இராப்பொழுதில், எவ்வகைச் செயலும், எவ்வகைத் தோற்றமும் அற்று, எல்லா உலகமும் உயிரும் ஒடுங்கி, ஏற்றம் தாழ்வு இல்லாத ஒரே அமைதியே நிலவும்; இதை, யாவும் அழிந்த ஊழி எனக் கூறுவர்.

இத்தகைய இரவு ஒன்றில், பிரமன், அண்டங்களுக்கு எல்லாம் முதல்வனும் உயிருமாகி ஆயிரங்கண்களுடன், நீர் உருவம் பெறாத நீர் மேல் ஆயிரம் படங்களையுடைய அனந்தன் என்னும் உயர் வெள்ளையணையில் நாராயணன் கண் வளர்வதைக் கண்டு, பெருவியப்பும் மகிழ்வும் உடையவனாய், என்றும் உள்ள அப்பொருளைக் கையினால் தொட்டு நீ யார்? சொல்' என்றான்.

செந்தாமரைக் கண்ணன், அனந்தலொடு கடைக்கண் சாத்தி, புன்னகை பூத்து "மகனே வருக" எனலும், பிரமன் வெகுண்டு எண்ணிறந்த உலகங்களைத் தோற்றியழித்து யாவைக்கும் மூலமும் உயிருமாய் விளங்கும் என்னை, 'மகன்' என அழைக்கும் மடமை ஏன் கொண்டாய்" எனக் கூறினான்.

திருமால் "உலகங்களை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் நாராயணன் நான் என்பது அறிந்திலையா? நான் அன்றோ 'பரம்பொருள்'; நீ என் அழியாத் திருமேனியிலிருந்து தோன்றினவன் அன்றே "எனக் கூற, இருவருக்கும் 'யார் பரம்பொருள் ' என்பதில் பூசல் தோன்றிப் போராகப் பெருகியது.

அப்பொழுது, அண்டங்களை எல்லாம் அழிக்க எழுந்தது போல் முதல், நடு, ஈறு இல்லாத ஒரு பேரழற் பிழம்பு தோன்றவே, இருவரும் திகைத்து நின்றனர். அண்டம் அனைத்தும் கடந்து நின்ற பேரோளித் தூணமாகிய அனற்பிழம்பின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு, காவதக் கணக்கான நீளமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட நீலமணிக் குன்று போன்ற பன்றி உருவில், நிலத்தை அகழ்ந்து அடியைக் காண திருமாலும், திசையனைத்தும் விரிந்த சிறகுகளுடன் தூய வெண்மையான அன்னத்தின் உருவில், விரைந்து பறந்து முடியைக் காண பிரமனும் சென்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உழன்றும் காணவியலாது களைத்துக் கையற்றுத் தங்கள் ஆணவம் ஒடுங்கப் பெற்றனர். இந்த நிலையில், முன்தோன்றிய அனற்பிழம்பு, சிவலிங்க உருவில் காட்சியளித்து இருவருக்கும் அருள் செய்தது. தம் பேதமையால் 'பரமம் யாம் பரமம்' என்ற பிரமன் அரி இருவரும், தம் பதைப்பு ஒடுங்கி, பரம்பொருள் சிவபெருமானே என உணர்ந்து வழிபட்டார்கள்.

பிரமன், முடியைக் கண்டதாகப் பொய் கூறியபடியால், சிவபெருமான், அவனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்து, அவனை நான்முகனாக நிலைக்க அருளினார்.


Thanks to: Thiruvasagam publication of Social Religious Guild, Thirunelveli


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments