உ
திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்
3. அத்திக்கு அருளியது
திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 4. போற்றித் திருஅகவல் - அத்திக் கருளிய அரசே போற்றி
துருவாச முனிவர், சிவபெருமானை முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது பெருமான் திருமுடியிலிருந்து நறுமணம் மிக்க பொன்னிறத் தாமரை மலர் ஒன்று முனிவர் கையகத்து வந்து விழுந்தது; அதைப் பன்முறையும் வணங்கிக் கையில் ஏந்திக்கொண்டு பொன்னுலகுக்குச் சென்றார்;
அங்கு, இந்திரன், பேரார்வத்துடன் தேவர்களும் முனிவர்களும் பல்லாண்டு இசைக்கவும், அரமகளிர் ஆடிப்பாடி சூழ்ந்து வரவும், இன்னியம் பல ஒலிக்கவும், சாமரைகள் இரட்டவும், வெண் கொற்றக்குடை நிழற்றவும், ஐராவதத்தின் மேல் அமர்ந்து, உலா வருவதைக் கண்ணுற்றார். உலாப்போந்த வாசவனை வணங்கி வானவர் பல கையுறை வழங்கினர்;
முனிவரும் தன் கையகத்திலிருந்த பொன்மலரைக் கையுறையாகக் கொடுத்தார். அத்தெய்வ மலரின் மாட்சியறிய மாட்டாத புரந்தரன், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு கையால் வாங்கித் தான் ஊர்ந்து வந்த ஐராவதத்தின் முடியில் வைத்தான்; அந்த வெள்ளையானை, களிப்பு மிகுதியால், அம்மலரைக் கீழே தள்ளிக் காலால் தேய்த்து விட்டது. தான் கையுறையாகக் கொடுத்த சிவபெருமான் திருமுடிமேல் சாத்தப் பெற்ற பொற்றாமரைக்கு நேர்ந்த இழிவையும், ஆகண்டலன் ஆணவத்தையும், நான்கு கொம்பு யானையின் செருக்கையும் கண்டு மனங்கொதிப்பேறிய முனிவர், இந்திரனை நோக்கி "ஆயிரங் கண்ணோய்!
வண்டுளருந் தண்டுளாய் மாயோன் இறுமாப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்
அண்டர் தொழ வாழ் உன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென்றுணர்ந்திலையால்
உன் முடி, மண்ணுலக மன்னன் பாண்டியன் ஒருவனால் சிதறக்கடவது, இந்த வெள்ளையானையும் மண்ணுலகத்தில் காட்டானையாகப் பிறந்து அலைந்து உழலக்கடவது" எனச் சாபமிட்டார்.
ஈரிறு மருப்பின் சீரிய யானையும் கரியாக மண்ணுலகிற் பிறந்து யானைக் கூட்டங்களுடன் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து கொண்டிருக்கலாயிற்று. இவ்வாறு திரிந்துகொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள், கடம்பவனத்துள் நுழைந்து அங்கிருந்த தாமரைக் குளத்தில் நீராடியது. முனிவர் சுடுசொல் விடுதலையாகும் காலம் வந்துற்றபடியால் காட்டானை உருவம் நீங்கி, பண்டைய வடிவும் அறிவும் பெற்றது.
அங்கு சொக்கலிங்க மூர்த்தியாகக் காட்சியளித்த சிவபெருமானை வணங்கி, தாமரைப் பொய்கையிலிருந்து, தன் துதிக்கையால் நன்னீர் கொண்டு வந்து இறைவன் திருமேனிக்குத் திருமஞ்சனம் செய்து, தாமரை மலர்களைச் சாத்தி வழிபட்டது. வெள்ளையானையின் பூசைக்குத் திருவுளம் மலர்ந்த சிவபெருமான், வேண்டிய வரங்களைத் தந்து, வானவர் உலகில் முன்புபோலச் சீரும் சிறப்பும் பெற்று வானவர் தலைவன் ஊர்தியாகத் திகழும் வண்ணம் திருவருள் செய்தார்.
0 Comments