Subscribe Us

header ads

2. அத்தி உரித்து அது போர்த்தது


திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்



2. அத்தி உரித்து அது போர்த்தது


திருவாசகத்தில் 13 பாடலாக இடம்பெற்றுள்ள 13. திருப்பூவல்லி - அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்


முன்னொரு காலத்தில் யானை வடிவம் கொண்ட கயாசுரன் என்னும் ஓர் அசுரன், நான்முகனை நோக்கித் தவம் செய்து அழியாத வலிமை, வாழ்நாள், செல்வம் முதலிய பல வரங்களைப் பெற்று மூன்று உலகங்களிலும் சுற்றித் திரிந்து எல்லோருக்கும் துன்பம் செய்து வந்தான்.

திசைக் காவலர்களை வெருட்டினான்; இந்திரன் ஏறிச் செல்லும் ஐராவதத்தின் வாலைப் பிடித்துச் சுழற்றி எறிந்து, இந்திரனும் தேவர்களும் புறங்கொடுத்து ஓடச் செய்தான்.

தேவர்களும், முனிவர்களும், மற்றுமுள்ளோரும், பெரு நடுக்கம் கொண்டு, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காசிப்பதியில் அடைக்கலம் புகுந்தார்கள்.

கயாசுரன், தான் பெற்ற வரங்கள் எல்லாம் சிவபெருமான் முன்னம் நில்லாது என்பதை அறவே மறந்தும், தன் வெற்றியிலும் வலிமையிலும் செருக்குற்றும், சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருப்பதியில் அடைக்கலம் புகுந்தவர்களையும் கொன்று சிதைக்கும் கொடிய நோக்கத்துடன், திருக்கோயிலின் முன்பு சீற்றத்துடன் சென்று இடிபோலப் பெரு முழக்கம் செய்தான்.

அடியவர்களுக்கு அரணாகிய சிவபெருமான், கண்டார் நடுங்கும் தோற்றத்துடன், கயாசுரன் முன் தோன்றினார். முடிவு நெருங்கியபடியால் சிவபெருமானுடனும் போர் செய்வதற்காகத் துடித்து ஓடினான்.

சிவபெருமான் திருவடியால் உதைக்கப் பெற்றுப் பதைபதைத்துக் கீழே விழுந்தான். அவ்வாறு விழுந்த கயாசுரனாகிய யானையின் தலையை ஒரு திருவடியாலும், தொடையை மற்றொரு திருவடியாலும் மிதித்துக்கொண்டு திருக்கைகளின் நகங்களால் முதுகில் கிழித்து நான்கு கால்களும் பக்கங்களில் பொருந்தும் படி தோலை உரித்தார்.

இதைக் கண்டு உமையம்மையும் நடுங்கினார். பெருமானின் உக்கிரத் திருமேனியின் பேரொளியால் உயிர்களின் கண்கள் பார்வையை இழந்தன. ஒளியின் கொடுமையைக் குறைத்து, உயிர்களின் கண்ணொளி மயக்கத்தைப் போக்கத் திருவுளங்கொண்டு உரித்த யானைத் தோலைத் திருப்புயத்தின் மேல் போர்த்துத் தன் கடுவொளியை மாற்றினார். கயாசுரன் அழிந்தது கண்டு மூவுலகும் பெருமகிழ்ச்சியடைந்து சிவபெருமான் திருவருளைப் 'போற்றி வாழ்த்தின.


"எண்திசையோர் அஞ்சிடுவகை கார்சேர் வரையென்னக் கொண்டெழு கோலமுகில்போல் பெரிய கரிதன்னைப் பண்டுரி செய்தோன் " (தேவாரம் 1053)


வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார்" (தேவாரம் 4870)


உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கெய்த ஓர் குஞ்சரத்தை " (தேவாரம் 4994)


உமையவளை அஞ்சநோக்கிக் கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கைவைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா " (தேவாரம் 6715)


Thanks to: Thiruvasagam publication of Social Religious Guild, Thirunelveli


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments