திருச்சிற்றம்பலம்
திருத்தல விளக்கம்
வலம்புரி விநாயகர்: தேவர்கள் தம் செயல்கள் இடையூறின்றி முற்றுப்பெறவும் அசுரர்தம் செயல்கள் இடையூறடைந்து முற்றுறாதொழியவும் அருளுதற்பொருட்டுத் தமக்கோர் கடவுளை அருளச் சிவபிரானை வேண்டினர். அருள்செய்து அத்திருமால் முதலானோரைப் போக்கி முத் தேவரையும், முச் சத்தியரையும் முறையே ஈன்ற சிவப் பிரணவத்தையும் சத்திப் பிரணவத்தையும் யானை வடிவுடையவாகக் கண்ட அச்சித்திரச் சாலையுள் அம்மை அப்பர் அவ்வடிவு கொண்டு கலந்து விநாயகரை அருளினர்; தலைமைப் பதவியையும் அவர்க்கு நல்கினர். ஓர்கால் விளையாட்டாக விநாயகப் பெருமானார் பாற்கடலை யுண்டுமிழ்ந்தவழி உட்புகுந்து வெளிவந்து வீழ்ந்து மயங்கிக் கிடந்த மால் இழந்த பாஞ்சசன்னியம் என்னும் வலம்புரியை வழங்கி வலம்புரி விநாயகராய் அத்திமலையில் திருமால் விருப்பப்படி எழுந்தருளியிருந்து அருள் புரிந்து வருகின்றனர்.
இவ்வரலாற்றைக் கற்றவர், கேட்டவர், நல்லவரைக் கேட்பித்தவர் இடையூறுகள் தவிர்ந்து மக்கட் பேறு முதலாம் யாவும் பெற்றுப் பின் சிவபோகமும் பெறுவர்.
திருநெறிக்காரைக்காடு: சிவி என்னும் இந்திரன் இருவினை ஒப்பும் மலபரிபாசமும், சத்திநிபாதமும் கைவரப் பெற்றுப் போகங்களை உண்டுமிழ்ந்த சோற்றினும் அருவருத்து வியாழ பகவானின் செவியறிவுறூஉப் பெற்று முன்னர் இந்திரபதவியை வழங்கிய அக்காரைக் காட்டீசரை வணங்கி முத்திசேரும் கணநாதர்தம் தலைவன் ஆயினன். இந்திரன் வழிபட்டமையால் இந்திரபுரம் எனவும் காரைமரங்களின் சூழலால் காரைக்காடெனவும் பெறும் அத்தலம். புதன் வழிபட்டுக் கிரகநிலை பெற்றமையின் புதன்கிழமை இந்திர தீர்த்தத்தில் மூழ்கிக் காரைக்காட்டீசரை வணங்குதல் சிறப்புடையது. காஞ்சியில் திருக்காலிமேடு என வழங்கும் அத்தலம் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரது திருப்பதிகத்தொடும் மேற்கு நோக்கிய திருமுன்புடையதாய்த் திகழும்.
புண்ணியகோடீசர்: திருமால் பிரமனையும் பதினான்கு உலகங்களையும் படைக்க விரும்பித் தனக்குப் பொற்றாமரைப் பொய்கையினின்றும் மலர் பறித்துதவிய கசேந்திரன் என்னும் யானை ஆதிமூலம் என்றலறப் பற்றிய முதலையைச் சக்கரத்தால் பிளந்து அவ்வியானையைக் காத்து அதன் பூத்தொண்டினைக் கொண்டு சிவபிரானை அருச்சித்து ஆங்குச் செய்யப்படும் புண்ணியம் ஒன்று கோடியாகவும் ‘வரதா வரதா’ என இறைவனைப் பலமுறை எதிரெழுந்தருள்கையில் போற்றி, வரதராசன் என்னும் திருப்பெயர் தனக்கு உண்டாகவும் வரம் அருளப்பெற்ற திருத்தலம். சின்ன காஞ்சிபுரம் அமுதுபடித் தெருவின் பின்னுள்ளது இது.
சிவாத்தானம்: பிரமன் திருமாலொடும் உலகைப் படைக்கும் ஆற்றலை வேண்டிக் கயிலைப் பெருமானார் ஆணைப்படி புண்ணிய கோடீசத்திற்குக் கிழக்கில் ‘தேனம்பாக்கம்’ என்னும் இடத்தில் பிரம தீர்த்தம் தொட்டுக் கரையில் சிவலிங்கம் தாபித்துப் போற்றினன். பின்பு சோமயாகம் தொடங்குகையில் தேவர் முனிவர் சூழ்ந்திருக்கும்போது சரசுவதி நீரினும், பின்பு மரங்களினும் சூக்குமவடிவிற் கரந்தனள். மனைவியாகிய சரசுவதியைக் காணாது சாவித்திரி காயத்திரி ஆம் மற்றைய இரு மனைவியரொடும் பிரமன் யாகம் செய்தனன். பிரமனைக் கண்டு வெகுண்ட சரசுவதி நதியுருவாய் யாகத்தை அழிக்க வருகையில், வேள்வித் தலைவராகிய சிவபெருமானார் வேள்வி வடிவினராகிய திருமாலை ஏவ அவர் மூன்று முறை கிடந்து தடுத்துக் கடலை நோக்கிச் செலவிட்டனர். சிவபிரானார் தோன்றி, ‘திருமாலே, நீ யாம் சொன்ன வண்ணம் செய்தமையின், ‘சொன்ன வண்ணம் செய்தவன்’ எனவும், இரவிருளில் நதியைக் காணவேண்டி விளக்கொளியாய் நின்றமையின், ‘விளக்கொளிப் பெருமாள்’ என்னும் பெயர் பெற்று எவரையும் இன்புறுத்துக’ எனவும் அருளி மறைந்தனர்.
நதியுருவம் மாறி மீண்டும் மரவடிவில் மறைந்த சரசுவதியை அம்மரத்திற் றண்டுகொண்டு இருத்துவிக்குக்களால் வேறு பிரித்து உருவுகொண்ட அவளுடன் யாகத்தை செய்து முடித்தனன் பிரமன். காட்சி வழங்கிய அம்மை அப்பர் திருவடிகளை வணங்கி இத்தீர்த்தத்தில் மூழ்கினவரும், இவ்விலிங்கத்தை வழிபட்டவரும் முத்தியை அடையவும், தன்னுடைய இருக்கையாகிய அத்தானத்தைச் சிவபிரானுக்கு வழங்கினமையின் சிவாத்தானமென வழங்கவும் வரம் பெற்றனன். மேலும், திருமாலையும் உலகங்களையும் படைக்கும் ஆற்றலையும் பெற்றனன்.
முத்தீசம்: காசிப முனிவர் மனைவியாகிய கத்துரு, சுபருணை தத்தம் அழகைப் பாராட்ட நடுநின்ற கணவர் கத்துரு அழகின் மிக்கவள் என்றமையின், தோற்ற சுபருணை, தங்களுள் ஒட்டியவாறு சிறையிடைப் பட்டனள். தேவ அமுதம் கொடுப்பின் விடுதலை பெறுவை என்ற கத்துருவின் விருப்பத்தை நிறைவு செய்யச் சுபருணை காஞ்சியில் முத்தீசரை வணங்கி வரம்பெற்றுக் காசிப முனிவர் அருளால் கருடனை ஈன்று வளர்த்து அவனுக்குக் குறையைக் கூறினள்.
கருடன் தேவலோகம் சென்று இந்திரனைப் புறங்காணச் செய்து அமுதத்தைக் கைப்பற்றி வருங்கால் தடுத்த திருமாலொடு இருபத்தொரு நாள் நிகழ்ந்த கடும்போரில் வெற்றி தோல்வி கண்டிலன்.
திருமால் வியந்து ‘வேண்டுவகேள் தருதும்’ என்றனர். கருடன் கேட்டு, ‘நினக்கு யாது வேண்டும் அதனை என்பாற் பெறுக’ எனத் திருமாலை நோக்கிக் கூறினன். ‘எனக்கு வாகனமாம் வரத்தைத் தருக’ என்ற திருமாலுக்கு வருந்தியும் சொல் தவறாது ‘அவ்வாறாகுக’ என்று பின் இசைவு பெற்றுச் சென்று, அமுதத்தைக் கத்துருவிற்குக் கொடுத்துத் தாயைச் சிறைவீடு செய்தனன் கருடன். கருடன் தனது தாய் அருச்சித்த முத்தீசரை வணங்கிக் கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளைக் கொல்லும் வரத்தைப் பெற்றனன். ஏகாலியர் குலத்திற் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனாரும் முத்திபெற்றனர். கருடன் வழிபட்ட கருடேசர், முத்தீசர்க்கும் பின்புறம் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் காந்திரோடில் உள்ளது.
மணிகண்டேசம்: தேவரும், அசுரரும் பிரமனொடும் சூழ்ந்து திருமாலை வணங்கி இறப்பினை வெல்லும் வழியை அருளவேண்டினர். திருப்பாற் கடலினின்றும் அமுதம் பெற்றுண்டலே உபாயமென மதித்து மந்தரத்தை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு சுராசுரர் கடைந்தபொழுது அங்கு வந்த வாலி, இயலாத அவரை விலக்கி மலை கடலில் அழுந்தாதபடி திருமால் ஆமையாய்த் தாங்கக் கடைந்தனன். வாசுகி வலிபொறாது வாய்நுரையைக் கக்கிப் பெருமூச்செறிந்தனன். அக்கலப்பினால் ஆலாலம் என்னும் கொடியவிட மெழுந்து உலகைக் கனற்றுவதாயிற்று.
வாலி ஓட்டெடுப்பப் பொன்னிறம் போய்ப் புகைநிறமுற்ற பிரமனும், வெண்ணிற மிழந்து கரிய நிறமுற்ற மாலும் நிறமாறிய பிறர் பிறரும் கயிலையைச் சரணடைந்தனர். ‘அஞ்சலீர்’ என்றருள் செய்த சிவபிரானார் திருவுளக் குறிப்பின்படிவிடம் யாண்டும் பரவிச் செறிந்து நின்றநிலை நீங்கி நீட்டிய மலர்க் கரத்தில் மலரில் வண்டுபோலத் தங்கித் திருக் கண்ணோக்குற்றுச் சிற்றுருவாய் மெய்யன்பர் திருமனம் இறைவன் ? திருவடிக்கீழ் ஒடுங்குமாறுபோல அடங்கியது. திருவடித் தொண்டராகிய தமிழ் முனிவர் திருக்கரத்தில் உழுந்தளவாகக் கடல்நீர் சுருங்குமேல் இந்நிகழ்ச்சி புகழ்ந்துரைக்கும் பொருளதோ? இறைவன் சங்கற்பப்படி அம்மையார் திருக்கண்களால் ஆலமுண்டு அமுதம் பொழிந்த அந்தவிடத்தைப் பிறரால் நிறுத்தலாகாத கண்டத்தில் நிறுத்தித் திருநீலகண்டர் ஆயினர். அருளைப்பெற்று மீண்டு எழுந்த விடத்தை இறைவனுக்காக்கிய பிழைதீரக் காஞ்சியில் சிவலிங்கம் தாபித்துத் திருமால் முதலானோர் தொழுது நீலமணியை ஒக்கும் கண்டம் உபகரித்த செய்ந் நன்றியை நினைந்து மணிகண்டேசர் என வழங்கினர். பின்பு கடலைக் கடைந்து அருளாற்பெற்ற அமுதத்தை அசுரரை வஞ்சித்துத் தேவர் உண்டு நோய் நீங்கி இறவாமையை எய்தினர். அமுதம் விடமும் போல அனைத்திலும் விரவி நிற்கும் இன்பம் தலைதூக்கித் துன்பம் தொலைய மணிகண்டேசர் வழிபடற் பாலர் ஆவர். இத்தலம் திருக்கச்சிநம்பி தெருவில் மணிகண்டேசர் ஆலயம் எனச் சிறப்புற்று விளங்கும்.
கோயிலின் உள்ளே மேற்புறத்தில், வாசுகி தன்னால் விடமெழுந்த குற்றம் தீரச் சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.
சத்ததானம் (ஏழிடம்):- முன்னாளில் அத்திரி, குச்சன், வசிட்டன், பிருகு, கௌதமர், காசிபர், அங்கிரா என்னும் முனிவர் எழுவரும் இமயமலையில் தவத்தால் பிரமனைக் கண்டு, பேரறிவாளர் பெறுதற் குரிய முத்தியை அறிவாற் குறைந்தவரும் பெறுதற் குபாயம் யாதென வினாவினர்.
பிரமன் அதற்கு விடைபகர்வான்: தருமம் ஒன்றே இறைவன் திருவுள்ளத்தை மகிழ்வித்து முத்தியை நல்குவிக்கும். அஃது இருவகைப்படும். ஒன்று சிவதருமம் எனவும் மற்றொன்று பசு தருமம் எனவும் படும். இவை முறையே சிவபுண்ணியம் பசு புண்ணியம் எனவும் கூறப்பெறும். உலக நல்வினையாகிய வேள்வி முதலியன தம்தம் பயன்களைக் கொடுத்து அழிந்துபோம். உணவு உண்ட அளவில் பசி தீர்ந்து பின் பசி உண்டாம். சிவ புண்ணியமோ பயனையும் கொடுக்கும் பின் மேன்மேற் செலவிற் கேதுவாய் அழியாது நின்று மெய்யறிவையும் விளைத்து முத்தியை நல்கும். எங்ஙனமெனின், அமிழ்தம் பிற உணவு போலன்றி உண்ட வழிப் பசி தீர்த்தலும் அல்லாமல் பின் பசி தோன்றாதவாறும் நிற்கும்.
அத்தகு சிவபுண்ணியம் ஆவன சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசித்தலும், சிவனடியாரை உண்டி முதலியவற்றால் உபசரித்தலும். இச் சிவபுண்ணியங்கள் இடவிசேடத்தால் சிவதலங்களிற் செய்வுழி ஏனைய இடத்தினும் பயன் கோடிஆக மிகும். அத்தலங்களினும் மிக்க காஞ்சியிற் செய்தால் பயன் எண்ணிலி கோடி ஆகும் எனத் தெருட்டினன்.
முனிவரர் நான்முகன் மொழிவழியே காஞ்சியை நண்ணிச் சிவகங்கையில் முழுகித் திருவேகம்பரைத் தொழுது மஞ்சள் நதிக்கரையில் எழுவரும் தத்தம் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றுகையில் பெருமான் காட்சி தந்து ‘வைவச்சுத மனுவந்தரத்தில் நீவிர் ஏழ்முனி வரராமின்; முடிவில் முத்தியையும் வழங்குவோம்’ ஏழிடங்களில் வணங்குவோர் வினைப் பிணிப்பின் நீங்கி இம்மை மறுமை இன்புடன் வீட்டினைத் தலைப்படுவர் என அருளி மறைந்தனர்.
இத்தலங்கள் சின்ன காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருப் புளியந் தோப்பிலுள்ளன.
பராசரேசம்: வசிட்டர் மாட்டுத் தீராப் பகைகொண்ட விசுவாமித்திரர், வசிட்டர் சாபமேற்று அரக்கனாய சுதாசன் என்னும் அரசனைத் தூண்ட அவன் வசிட்டர் புதல்வர்களாகிய சத்தி முதலாம் நூற்றுவரையும் விழுங்கினன். கேள்வியுற்ற வசிட்டர் மனைவி அருந்ததியோடும் வருந்திப் புத்திர சோகத்தால் உயிரைவிடத் துணிந்து மலைமேல் ஏறி வீழ்ந்தனர். பூமாதேவி தாங்கிப் பிழைப்பித்தனள்.
வசிட்டர் மூத்த மகனாகிய சத்தியின் மனைவி கருப்பம் சிதையுமாறு வயிற்றில் அடித்துக் கொண்டனள். ‘சந்ததியை அழிக்காதே’ என்னும் வசிட்டர் ஆணைக் கஞ்சிய வழிக் கருவில் இருக்கும் குழவியின் அழுகுரல் கேட்டது.
அப்பொழுது திருமால் எதிரெழுந்தருளி ‘அறிவான் மிக்கு என்னை ஒப்பவனாய்ச் சிவபிரானிடத்து மெய்யன்புடையனாய்க் குலந்தழைக்க மகனுக்கு மகன் இப்பொழுதே தோன்றுவன்’ என்றருளி மறைந்தனர்.
சத்தி மனைவியாகிய அதிர்சந்தி மகப்பெற்றுச் சடங்குகளுடன் இளம் பிறைபோல் வளர வளர்க்கும் நாளில் அன்னை மடியிலிருந்த குழவியாகிய பராசரர் தன் தாயை நோக்கி ‘மங்கல மின்றி இருப்ப தென்னை’? என் தந்தை எங்கே என வினவினர். வசிட்டர் முதலானோர் வருந்தி யழுமாறு ‘தந்தை முதலானோரை அரக்கன் விழுங்கினன்’ என்றனள் தாய். ‘உலகை விழுங்குவேன்’ என்ற பெயரனை நோக்கி ‘உலகம் என் செய்யும்? அரக்கர் குலத்தை வேரொடும் களையச் சிவபூசனையைத் தனக்கு ஒத்ததும் உயர்ந்ததும் இல்லாத காஞ்சியில் ஓர் நாள் செய்யினும் திருவருள் வாய்க்கப் பெறும்’ என்னும் வசிட்டர் மொழியைச் சிரமேற் கொண்டு காஞ்சியை நண்ணிக் கம்பா நதியில் மூழ்கித் திருவேகம்பரை வணங்கி மஞ்சள் நதிக்கரையில் மணிகண்டேசத்திற்கு வடமேற்கில் ‘பராசரேசர்’ எனச் சிவலிங்கம் நிறீஇப் போற்றி வழிபட்டனர் பராசரர். காட்சி தந்த சிவபிரானார் ‘மைந்தனே நின் பூசனையால் எம்மை அடைந்து உன்னைக் காணப் போந்த நின் தந்தையைக் காண்க. ஓர் யாகம் செய்து அதில் அசுரர்களை நீறு செய்க. இந்தச் சிவலிங்கத்தில் என்றும் வாழ்வோம்’ என்றருளி மறைந்தனர்.
அங்ஙனமே வேள்வியால் அரக்கர் பலரை அழிவு செய்து முனிவர் உரையால் முனிவு தீர்ந்து வாழ்ந்தனர் பராசரர். இத்தலம் செட்டி கோயில் என விளக்கம் பெற்றுக் காந்திரோடில் உள்ளது.
ஆதீபிதேசம் (தீபிதம்-விளக்கொளி): சிவாத்தானத்தில் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த நதியைத் தடைசெய்ய வந்த திருமால் நள்ளிரவில் விளக்கொளியாய் நின்று அப்பொருள் பயக்கும் ‘ஆதீபிதேசர்’ எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றி அத்தலத்திற்கு எதிரில் விளக்கொளிப் பெருமாள் என்னும் திருப்பெயரைச் சிவபிரானார் வழங்க வீற்றிருக்கின்றனர். விளக்கொளிப் பெருமாள் வழிபட்ட விளக்கொளியீசரைப் போற்றினோர் வேண்டிய வரங்களைப் பெற்று முத்தியையும் பெறுவர். இத்தலம் ஆலடிப் பிள்ளையார் கோயில் தெரு கீரைமண்டபத்திற் கருகில் விளக்கொளிப் பெருமாளுக் கெதிரில் உள்ளது.
சார்ந்தாசயம் (சார்ந்தார்க்குப் பற்றுக்கோடு); பராசரமுனிவர் தவத்தால் தோன்றி வேதபுராணங்களைக் கரைகண்டு வகுத்தமையால் வேதவியாசர் எனப் போற்றப்படும் முனிவரர் கலியுகம் வருதலைக் கண்டஞ்சிக் காசியை அடைந்து நோன்புகள் புரிந்து வந்தனர்.
முனிவரர்கள் அவரை அடுத்து நூல்களின் மெய்ப்பொருளைத் தெள்ளிதின் விளக்கவேண்டினர். வியாசரும் தனித்தனி விரித்துரைத்தனர். கேட்டு மகிழ்ந்த முனிவரர் தொகுத்து இது பொருள் என ஒரே வார்த்தையில் விளக்கவேண்டினர். முன்தோற்றிய பொருளுக்கு மாறுபட ‘நாராயணனே பரப்பிரமம்’ ஆகும். இது சத்தியம் சத்தியம்!’ என்று கையெடுத்துச் சூள் கூறிய வியாசர் சொற்கேட்டு முனிவரர் அஞ்சினர்.
முனிவரரொடு சபதம் செய்த வியாசர் விசுவநாதர்முன் இரு கைகளையும் எடுத்து நிறுத்தி முன்கூறியவாறே கூறினர். எப்பெயரும் தம் பெயரே ஆகலின் விசுவநாதப் பெருமான் வெகுண்டிலர். நந்திபெருமான் சாபத்தால் வியாசர் கைகள் மடக்க முடியாமல் பெருமான் புகழை நிலைநிறுத்தும் வெற்றித் தூண்கள்போல் நின்றன. திருமாலைத் துதித்தனர் முனிவர்.
திருமால் எதிர்தோன்றி, ‘என்ன காரியஞ் செய்தனை! நீயும் கெட்டனை! என்னையும் கெடுத்தனையே! மற்றியாவரையும் விலக்கிச் சிவபெருமான் ஒருவரே தியானிக்கற்பாலர்’ என அதர்வசிகை எடுத்தோதும் நிலையைக் கைவிட்டனை. அவர் அருளைப்பெற்ற முறையால் ஒரோவழி உபசரித்துக் கூறும் வாக்கியத்தைக் கொண்டு யாண்டும் எடுத்தோதும் உண்மை மொழியை மறந்தனையே பேதாய்! பலவாறு தெருட்டத் தெருண்ட வியாசர் ‘சிவனை யாவரே அருச்சனை செய்யாதவர் சிவன் மற்றெவரை யாயினும் அருச்சினை இயற்றிய துண்டோ’ என்று கூறிச் சிவபெருமானைப் பல்வகையாகப் போற்றினர்.
உமையம்மையோடும் விடைமேல் தோன்றிய சிவபிரானார், ‘வியாசனே, நீ போற்றிய திருமாலும் பிரமனும் இரண்டு திருவடிகளையும் தாங்கி வருதலைக் காண். மேலும், கற்பங்கள் தோறும் கணக்கில்லாத திருமால் பிரமர்கள் இறக்க அவர்கள் எலும்புகளை மாலையாக அணிந்து அவர்கள் தம் அநித்தியத் தன்மையையும் நம் நித்தியத் தன்மையையும் உன்போன்றவர்க்குக் கண்கூடாகக் காட்டி நிற்கின்றோம்! என அருளினர். பின்னும் வேதமுடிபைக் கண்டுணர்ந்த தலைவர்தம் தலைவனாகிய நீ எம்மைப் பூசித்து முத்தியை அடைவாயாக’ என அருளித் திருவுருக் கரந்தனர்.
வியாசர் நெடிது சிந்தித்து இம்மயக்கம் ‘எனக்கு வந்ததற்குக் காரணம் தவம் செய்வோர்க்குத் தேவர்கள் இடையூறாய் நின்று அறிவை மயக்குவர் என்ப. அது என்னளவில் உண்மையாயிற்று’ எனத் துணிந்து காஞ்சியை அடைந்தனர். சிவகங்கையில் மூழ்கித் திருவேகம்பரைப் பணிந்து மணிகண்டேசத்திற்குத் தென்மேற்கில் சார்ந்தாசயப் பெருமானைத் தாபித்துப் பூசித்தனர். பெருமான் வெளி நின்று வேண்டுவ கேளென, அச்சிவலிங்கத்தில் என்று நீங்காதிருந்து யாவர்க்கும் அருளும் தனக்குத் திருவடியில் இடையறா அன்பும் வழங்கியருளவேண்டுமென்றனர். பெருமான் அவர்க்கு அவற்றை அருள்செய்து திருவுருவிற் கரந்தனர்.
சித்தீசம்:- இமய மன்னர் மகளார், கம்பை நதிக்கரையில் தவஞ்செய் காலத்தில் மஞ்சட் காப்பினைத் திருமேனியில் திமிர்ந்து முழுகிய வெள்ளப் பெருக்கு நறுமணம் பரந்து பாய்ந்து மஞ்சள்நீர் நதி என்னும் பெயரொடு அயலெலாம் இடங்கொண்டு செல்லும் அளவே கங்கை சடைப் பிரானார் அருளடங்காது மீதுவழியும் மகிழ்ச்சியொடும் சிவலிங்க வடிவாய் அவ்விடத்தே முளைத்தனர்.
அக்காரணத்தால் அவருக்கு ‘மஞ்சள்நீர்க் கூத்தர்’ என்னும் திருப் பெயர் வழங்கினர். நடம்புரியும் திருவடிகளைச் சித்தர் மிகப்பலர் அணைந்து போற்றிப் பெருஞ் சித்திகளைப் பெறுதலினால் பெருமை நிரம்பிய சித்தீசர் என்னும் திருப்பெயரானும் உலகரால் போற்றப்பெறுவர். அவ்வண்ணலார் திருமுன்பில் கிணறு ஒன்றுள்ளது. அத்தீர்த்தத்தில் ஞாயிறு, சனிக்கிழமைகளில் முழுகிப் பெருமானை வணங்கும் வெற்றி வாழ்க்கையர்க்குப் பிறவி நோய் ஓட்டெடுக்கும். இத்தீர்த்தம் சித்த தீர்த்தம் எனப்பெறும். இத்தலம் குயவர் வீதியில் மஞ்சள் நீர்க்கரைக் கண் உள்ளது.
இட்ட சித்தீச்சரம்: பிருகு முனிவர் மரபின் வந்த ததீசி முனிவர் குபன் என்னும் அரசனொடு நட்புப் பூண்டு அளவளாவு நாளில் அந்தணர் சிறப்புடையரோ? அரசர் சிறப்புடையரோ என விளையாட்டு விருப்பினராய் அசதியாடினர். அந்தணரைப் பாராட்டினர் முனிவர். அரசரைப் போற்றினர் அரசர். சொற்போர் முதிர்ந்து மற்போராயது, முனிவர் வெகுண்டு அரசனைத் தாக்க, அரசன் சினந்து வச்சிராயுதத்தால் முனிவரை இருகூறுபட வெட்டி வீழ்த்தினான். முனிவர் சுக்கிரனை மனங்கொண்டு தரையில் உருண்டனர்.
சுக்கிரன் உணர்ந்து போந்து உடலைப் பிணைத்து ததீசியை உயிர்ப்பித்தனன். உயிர்பெற்ற ததீசியை நோக்கி ‘இறைவனை வழிபடின் எங்கும் எவரானும் அழிவுறாத யாக்கையைப் பெறல் கூடும். வழிபாட்டிற்குரிய சிறந்த இடம் காஞ்சியே ஆகும். அங்கு, இட்ட சித்தீசப் பெருமானை வணங்கியே மிருதசஞ்சீவினி என்னும் இறந்தோரை உயிர்பெறச் செய்யும் மந்திரத்தைப் பெற்றேன். அந்த இட்ட சித்தீசப் பெருமானுக்கு தென்பால் இட்டசித்தித் தீர்த்தம் உள்ளது, காணினும், கேட்பினும், கருதினும், தீண்டினும், மூழ்கினும் நாற்பொருளையும் பயக்கும் அத்தீர்த்தத்தின் சிறப்பைக் கூறவும் கூடுமோ? அத்தீர்த்தத்தால் பெறாத பேறொன்றில்லை. முதல் யுகத்தில் பிரமன் மனைவியொடும் மூழ்கிச் சத்தியலோகப் பதவியையும் படைத்தற்றொழிலையும் பெற்றனன். இரண்டாம் யுகத்தில் சூரியன் மூழ்கி வேத வடிவமாம் உடலையும் ஆயிரங் கிரணங்களையும் பெற்றனன். துவாபரத்தில் திருமால் இலக்குமியொடும் முழுகிக் காத்தற் றொழிலையும் வைகுந்த வாழ்க்கையையும் பெற்றார்.
கலியுகத்தில் உமையம்மையார் முழுகி இறைவனது திருமேனியில் இடப்பாதியிற் கலந்தனர். சூரியன், பகன் என்பவர் முழுகித் தக்கன் வேள்வியில் இழந்த பற்களையும் கண்களையும் முறையே பெற்றனர். குபேரன் அம்மையை நோக்கி இழந்த கண்ணையும் இறைவனுக்கு நண்பன் ஆதலையும் அத்தீர்த்தத்தால் எய்தினன். துச்சருமேளன் ஊர்வசியையும் கண்ணன் புதல்வன் சாம்பன் குட்டநோய் நீக்கமும் பெற்றனர். நளனும் பஞ்ச பாண்டவரும் முழுகிப் பகையை வென்று இழந்த நாட்டைக் கைப்பற்றினர். இத்தீர்த்தத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் நாற்றிசையினும் முறையே அறம், பொருள், இன்பம், வீடென்னும் நாற்பொருளையும் பயக்கும் நான்கு தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. எல்லா மாதங்களிலும் முழுகுதல் சிறப்புடையதாயினும் வைகாசி, மாசி, கார்த்திகை, ஆடி மாதங்களில் மூழ்குதல் முறையே ஒன்றற்கொன் றேற்றமுடையவாகும். கார்த்திகை மாதத்து ஞாயிறு சாலச் சிறப்புடையதாகும்.
முழுகுதல், மந்திரம் கணித்தல் இவைகளை அங்குச் செயின் ஒன்று பலவாகும். இவ்வாறு விரித்துக் கூறிய சுக்கிரன் ததீசிக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தையும் செவி அறிவுறுத்தனர்.
பின்பு ததீச முனிவர் காஞ்சியை அடைந்து இட்டசித்தித் தீர்த்தத்தில் முழுகி இட்டசித்தீசரைப் போற்றப் பெருமான் எழுந்தருளி வந்து யாண்டுங் கொலையுறாதவச்சிரயாக்கையைத் தந்தருளப்பெற்றனர். பின்பு, முனிவர் அரசவையைச் சார்ந்து குபன் என்னும் அரசனைத் தலைமேல் உதைத்தனர்; அரசனுக்கு உதவவந்த திருமாலைப் புறங்கண்டனர். இத்தலமும் தீர்த்தமும் கச்சபேசர் திருக்கோயிலில் உள்ளன.
சிவபெருமான் ஓர் கற்பகாலத்தில் ஐம்பெரும் பூதங்களையும் அவற்றிடைத் திருமால் முதலாம் தேவர் பிறர் பிறவாம் சராசரங்களையும் அழித்து, அவ்விரவில் இறைவியோடு தனித்திருந்து திருக்கூத்தியற்றி, மீண்டும் உலகைப் படைக்கும் சங்கற்பராயினர்.
உலகமெல்லாம் அழிந்தும் அழியாது தன்காப்பில் விளங்கும் காஞ்சியில் சோதிலிங்கமாக வெளிநின்று தமது சத்தியால் முன்போல விளங்க உலகங்களையும் உலகிடைப் பொருள்களையும் சிருட்டித்தனர். அச்சோதி லிங்கத்தைப் பிரமன் சரசுவதியுடன் வணங்கிப் படைப்புத் தொழிலிற் றலைமை பெற்றான்.
முன்னொரு கற்பத்திற் றேவர்கள் பாற்கடலைக் கடைவுழித் திருமால் ஆமையாய் மந்தர மலையைத் தாங்கி அமுதம் கண்டு உபகரித்தமையால் செருக்குக் கொண்டு உலகம் அழியுமாறு கடலைக் கலக்குகையில் உயிர்களின் அச்சம் கெடவும், திருமால் அகந்தை நீங்கி அறிவுறவும் அவ்வாமையை அழித்து அதன் ஓட்டினை வெண்டலை மாலையிடையே கோத்தணிந்தனர்.
திருமால் குற்றம் நீங்கிச் சோதிலிங்கத்தை வழிபாடு செய்து மெய்யன்பும், வைகுந்த பதவியும் அவர் அருள்செய்யப் பெற்றனர். அச்சிவலிங்கத்திற்குக் ‘கச்சபேசன்’ என்னும் திருப்பெயர் விளங்கவும், என்றும் அதன்கண் விளங்கவும், காசியினும் அவ்விடம் சிறப்புறவும் வரம் வேண்டிய திருமாலுக்குச் சிவபெருமான் அவற்றை வழங்கினர்.
கச்சபேசப் பெருமானை எண்ணினோரும் சென்று கண்டவரும் இவ்வுலகத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியையும் பெறுவர்.
அக்கச்சபேசப் பெருமானைத் துர்க்கை, ஐயனார், சூரியன் வயிரவர், விநாயகர் இவர்களும் வழிபட்டு அத்திருநகரைக் காவல் செய்வாராயினர்.
கச்சபேசருக்குத் தென்மேற்கில் திருமால் பூசித்த ‘சத்தியமொழி விநாயகர்’ வீற்றிருக்கின்றனர். அப்பெருமானை வணங்கினவர்கள் எப்படிப்பட்ட இடையூறுகளும் தவிர்ந்து விரும்பிய பயனைப் பெறுவார்கள்.
பணாதரேசம்: கருடன் சிவபிரானை வணங்கிப் பெற்ற பேற்றினால் தம் குலத்தை அழிக்கக் கண்ட பாம்புகள் வேகவதியின் வடகரையில் ஆதீபி தேசத்திற்குத் தெற்கில் பணாதரேசப் பெருமானைத் தாபித்துப் பூசித்துத் தம் குறை தீர வேண்டப், பெருமானார் தமது திருமேனியில் அவற்றை அணிகலமாகத் தரித்துக் கொண்டனர். திருமாலுடன் வந்த கருடனை இறைவன் திருமேனியிலுள்ள பாம்புகள் ‘ஏன் கருடா சுகமோ’ என வினவின. இஃது உலகிற் பழமொழியாகவும் விளங்கும். சிறியர் சார்பினை விடுத்துப் பெரியோரைச் சார்தல் வன்மை தரும் என்பது பெறப்படும். இத்தலம் ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அணித்தாக வடக்கில் உள்ளது.
காயாரோகணம்: காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.
இலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.
இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.
தான்தோன்றீசம்: உயிர்கள் மலக்கட்டினின்றும் நீங்கி முத்தியைப் பெறும்பொருட்டு இறைவன் சிவலிங்க வடிவமாகத்தானே தோன்றி யருளினமையால் தான்தோன்றீசன் என்னும் திருப்பெயருடைய அவ்விலிங்கத்தை, ஒரு சிறுவர் வழிபாடு செய்து, இனியபால் பெற்ற வரலாறிதுவாகும்.
வியாக்கிர பாதமுனிவர் வசிட்டர் தங்கையை மணந்தார். அவ்வம்மையிடமாகத் தோன்றிய உபமன்னியன் என்கின்ற சிறு குழவி, தனது மாமன் வீட்டில் காமதேனுவின் பாலைத் தேக்கெறிய உண்டு வருநாளில் தந்தை தாயார் தம்மில்லிற்குத் தம்மகவைக் கொண்டு சென்றனர். அங்கு மாவை நீரிற் குழைத்தூட்டப் பருகாது அழுதனர், முன்னைத் தவம் செய்யாதார் விரும்பிய போகங்களை இப்பொழுது எங்ஙனம் பெற இயலும் என்னும் அன்னை சொற்கேட்டு வினவியறிந்து காஞ்சியை அடைந்து தான்தோன்றீசப் பெருமானைப் பூசனை புரிந்து பெருமான் திருப்பாற்கடலைக் கொண்டூட்ட உண்ட உபமன்னிய முனிவர் கண்ணபிரானுக்குத் திருவடி தீக்கை செய்து சிறந்தனர்.
தீக்கைபெற்ற கண்ணபிரானார் திருநீற்றுடன் உருத்திராக்க முதலிய பூண்டு ‘சிவநேசர்’ எனப் போற்றப்பெற்றனர். இத்தலம் ஏகாம்பரநாதர் சந்நிதி வீதியில் உள்ளது.
இரணியேசம்: இரணியன் எனப் பெயரிய அவுணர் தலைவன் தனது, குலகுருவாகிய சுக்கிரனை வருவித்து வணங்கி, பிறர் எவரும் பெறாத திருவினையுடைய அரசு பெறற்குரிய உபாயம் யாதென வினவினன். சிவபூசனையே எவற்றையும் நல்கவல்லதெனவும், அரனைப் போற்றாத ஆக்கையும், பொறிகளும் பயப்பாடு உடையன அல்ல எனவும் குருவால் அறிவுறுக்கப்பெற்றனன் இரணியன். மேலும், தலங்கள் பலவற்றுள்ளும் காசியே சிறப்புடையது; அதனின் மிக்கது காஞ்சி எனவும் அறிந்தனன். பச்சிலையோ, பழம்போதோ யாதோ கொண்டு பேரன்பொடும் செய்யப்பட வேண்டும் என்னும் கேள்விச் செல்வனாய் இரணியன் தன் தமையன் இரணியாக்கன் அவன் மகன் அந்தகன் தன் மகன் பிரகலாதன் வழிவந்த மைந்தர்கள், மனைவிமார் மற்றும் பலரொடும் காஞ்சியை அடைந்து அவரவரும் தம்தம் பெயரால் சிவலிங்கம் தாபித்துப் பூசிக்கத் தானும் இரணியேசம் எனத் தன் பெயரால் சிவலிங்கப் பதிட்டை செய்து அருச்சனை புரிந்தனன். மனிதராலும், விலங்காலும், ஏனைய சீவர்களாலும், நிலத்திலும், விண்ணிலும், கொடிய ஆயுதங்களாலும் உலர்ந்த ஈரிய இடங்களிலும் வீட்டிற்குப் புறத்திலும் அகத்திலும் இரவிலும் பகலிலும் ஆக இத்திறங்களில் இறவாமையும், மூவுலகை ஆளும் அரசும் வேண்டிய இரணியனுக்கு அவற்றை வழங்கினார் சிவபிரானார். உடன் போந்தவரும் தத்தம் மனத்திற்கினியன வேண்டிப் பெற்றனர். இரணியன் பூசித்த இரணியேசம் ஏனையோர் வழிபட்ட தலங்களோடும் உத்தமோத்தமமாய்ச் சிறக்கும். இத்தலம் சருவதீர்த்தத்தின் கிழக்குக் கரையிலுள்ளது.
ஓணகாந்தன் தளி: வாணாசுரனுடைய சேனைத் தலைவராகிய ஓணன்காந்தன் என்னும் அசுரர் இருவர் காஞ்சியை அடைந்து தீர்த்தம் எடுத்து அதன் கரையில் சிவலிங்கம் இரண்டு தத்தம் பெயரால் நிறுவிப் பூசித்தவழிப் பெருமானார் விடைமீது அம்மையொடும் காட்சிதரத் தமக்கு மெய்யறிவு தந்துய்யக் கொள்ளவும், அவ்விலிங்கங்களில் எழுந்தருளியிருந்து எந்நாளும் யாவர்க்கும் அருள்செய்யவும் வரம் பெற்றனர்,
இத்தலம் பஞ்சுப்பேட்டைக்கு மேற்கில் உள்ளது. சுந்தரர் தேவாரம் பெற்ற விளக்கமுடைய திருத்தலம்.
அரிசாப பயந்தீர்த்த தானம்: தேவரும் அசுரரும் போர் புரிகையில் தேவர்க்குத் துணையாக வந்த திருமால் அசுரரைத் தாக்கினர். புறங்கொடுத்தோடிய அசுரர் பிருகு முனிவரர் தம் மனைவியாகிய கியாதியைச் சரணடைந்தனர்.
அசுரர்க்கு இடங்கொடுத்து வீட்டு வாயிலில் காவலிருந்த கியாதியை பெண்ணென்றும் தனக்கு மாமியென்றும் எண்ணாது தலையை அறுத்தனர் திருமால். கூகூ என்னும் அரற்றுக் கேட்டு யோகம் கலைந்த பிருகு முனிவர் ‘திருமாலை நோக்கிப் பெரும் பாவத்திற்குப் பாத்திரமானவனே, ‘சைவ சமயமே ஏனைச் சமயங்களிற் றலையாய சமய மென்பதும், சிவபிரானையன்றி மற்றைத் தெய்வங்களை மறந்தும் புறந்தொழாத மாண்புடையேம் என்பதும் உண்மையேயாயின் பாவத்திற்கேதுவாகிய பிறப்புப் பத்தெடுத்து உழலுக எனவும், நின்றொண்டர் புறச்சமய நூல்வழி ஒழுகி ஏகதண்டம் திரிதண்டம் தாங்கித் திரிக’ எனவும் கடுஞ்சாபம் இட்டனர்.
பின்னர்ச் சுக்கிரன் துணைகொண்டு மனைவியை உயிர்பெறச்செய்த முனிவரர் தவவாழ்க்கையிற் றலைநின்றனர்.
திருமால் காஞ்சியை அடைந்து சிவகங்கையில் மூழ்கித் திருவேகம்பரைத் தொழுது பின்பு கச்சபேசத்திற்குக் கிழக்கில் அரிசாப பயந்தீர்த்த பிரானைத் தாபித்துப் பூசித்தவழிப் பெருமான் வெளிநின்று ‘எம்மால் தரப்படும் சாபம் எம் அடியவரால் விரும்பின் நீக்கப்படும். அவரால் தரப்படும் சாபமோ எம்மால் நீக்கப்படமாட்டாது’ என அடியவர் பெருமையை அறிவுறுத்தி அடையும் பத்துப் பிறப்புக்களையும் உலகிற்கு நலம் பயப்பனவாகவும், பிறப்பு ஐந்தனுள் மறக்கருணையும் ஐந்தனுள் மறக்கருணையும் காட்டி அருள்வதாகவும் அருள் செய்தனர் மேலும், திருமாலுக்கு வேண்டியவற்றை அருளி அவர் விருப்பப்படி வழிபடுவார்க்கு அருள் செய்ய ‘அவ்விலிங்கத்தே வீற்றிருப்பேம் என வழங்கித் திருவுருக் கரந்தனர். இத்தலம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது.
திரிகாலஞானேசம்: இறப்பு நிகழ்வு எதிர்காலங்களின் நிகழ்ச்சிகளை ஒருங்கே அறிவான் முனிவரர் சிலர் சிவலிங்கம் நிறுவிப் போற்றி முக்கால ஞானத்தை அத் திரிகால ஞானேசராற் பெற்றனர். உருகும் அன்பர்க்கு அருள்செய்யும் தலமாகும். இது காஞ்சி நகரப் பேருந்து வண்டி நிலையமாகிய மதுராந் தோட்டத்தில் உள்ளது.
திருப்புகலூரில் முருகநாயனார் வழிபாடுசெய்த பூதபவிஷ்ய வர்த்தமான இலிங்கங்கள் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பெற்றமை நினைவு கூர்க. பூதம்-இறப்பு. பவிஷியம்-எதிர்வு. வர்த்தமானம்-நிகழ்வு.
மதங்கேசம்: ஐம்புலக் குறும்புகளை அடக்கவேண்டி மதங்க முனிவர் அருச்சித்த மதங்கேசர் கோயில் மதங்கேசர் தெரு மிஷன் மருத்துவமனைக் கெதிரில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது. பல்லவர்காலச் சிற்பங்கள் அமைந்து அரசியலால் காக்கப்படுகிறது.
அபிராமேசம்: திருமால் இந்திரனுக்கு அருளுதற்பொருட்டுக் காசிபர் புதல்வராய் வாமனராகத் தோன்றி அபிராமேசரை நிறுவிப் போற்றி அருளைப்பெற்று மாவலி என்னும் அசுரர் தலைவன் வேள்விச் சாலையை அடுத்து மூன்றடி நிலம் அவனிடம் இரந்துபெற்றுத் தடுத்த சுக்கிரன் கண்ணைக் கெடுத்தனர். பின்பு, மாவலி ஆட்சியுட்பட்ட விண்ணையும் மண்ணையும் ஈரடி அளவையாற்கொண்டு மூன்றாமடிக்கு மாவலி தலையில் வைத்து அவனைப் பாதாலத்தழுத்தித் தேவர்கோன் துயரைத் தீர்த்தனர். மீண்டு வந்த திருமால் ‘வாமன குண்டம்’ என்னும் தீர்த்தம் தொட்டு நீராடி அபிராமேசரை வணங்கி உலகளந்த பேருரு (திருவிக்கிரமவடி)வை அவர்க்குக் காட்டி அருள்பெற்று ‘உலகளந்தபெருமாள்’ என்னும் திருப்பெயருடன் விளங்குகின்றனர். ‘அபிராமேசர்’ உலகளந்தார் வீதியில் சங்குபாணி விநாயகர்க்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.
ஐராவதேசம்: நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதேசர் என்னும் அப்பெருமானைப் பூசனை புரிந்து யானைகட்குத் தலைமையாகவும், இந்திரன் ஊர்தியாம் நிலைமையையும் பெற்றது. இத்தலம் இராஜவீதியும் நெல்லுக்காரத் தெருவும் கூடுமிடத்தில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது.
மாண்டகன்னீசம்: அழகிய காதர் என்னும் பொருள் தரும் மாண்ட கன்னி முனிவர் ‘மாண்ட கன்னீசர்’ எனப் பெரிய சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திருவருள் வலத்தால் விண்ணுலகத்தில் வைத்து நுகரவேண்டிய தேவபோகத்தை இந்திரனு (போகியு)ம் நாணுமாறு இக்காஞ்சியில் ஐந்து அரம்பையரைக் கொணர்ந்து மணந்து நுகர்ந்து வாழ்ந்தனர். அவர் நாளும் நீராடிய நீர்நிலை ‘ஐயரம்பையர் தீர்த்தம்’ என்றாயது.
முனிவர் நெடுங்காலம் போகம் நுகர்ந்து உவர்த்து முடிவில் முத்தியைப் பெற்றனர்.
வன்னீசம்: (வன்னி-அக்கினி.) அக்கினிதேவன் தமையன்மார் மூவர் வேள்வி அவியைச் சுமக்கலாற்றாது இறந்தனர். அது கண்டஞ்சிய அக்கினி ஐயரம்பையர்த்தீர்த்தத்தைப் புகலடைந்து சகோதரனாக ஏற்றுக் காக்கவேண்டி அதனுள் மறைந்து கரந்தனன். தேவர் எங்கும் தேடி முடிவில் (ஒக்கப ்பிறந்தான் குளம்) சகோதர தீர்த்தக்கரையை அடைந்து அதன்கண் வாழும் மீன்கள் காட்டிக்கொடுக்கக் கண்டு கூவி அழைக்கும் தேவர்களை முன் போகவிட்டுப் பின்பு மீன்களைத் தூண்டிலிற் படுகெனச் சாபமிட்ட அக்கினி அக்குளக்கரையில் வன்னீசரைத் தாபித்துப் பூசித்து அவிசுமக்கும் ஆற்றலைப் பெற் றேகினன். இவ்விரு தலங்கள் மாண்டகன்னீசர் தெருவில் உள்ள ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் உள்ளன.
சவுனகேசம்: சவுனகமுனிவர் தம்பெயராற் சிவலிங்கம் நிறுவிப் போற்றி மலநோய் நீங்கி முத்தி எய்தினர். இக்கோயில் புத்தேரி தெருவை அடுத்துள்ள சவுனகேசர் தெருவில் உள்ளது.
சுரகரேசம்: வெப்பு நோயைக் கண்களால் பிறர்க்கு ஆக்குதலால் சுராக்கன் என்னும் பெயருடைய அசுரனை அழிக்கச் சிவபிரான் ஆக்கிய தலமும், சுரநோயைப் போக்குதலின் ‘சுரகரம்’ என்னும் தீர்த்தமும் உடைய அவ்விடத்தே சிவவீரியத்தைத் தேவர்கள் பொருட்டு அக்கினி உட்கொண்டு கருப்பத்தால் வெப்பமுற்ற தேவர் அனைவரும் இறைவன் ஆணைப்படி இத்தீர்த்தத்தில் மூழ்கிச் சுரகரேசரை அருச்சித்துச் சுரம் நீங்கப்பெற்றுப் போய்க் கங்கையில் விடுத்த வீரியம் சரணவப் பொய்கையில் தங்கி வளர்ந்து ஆறுமுகப்பெருமான் ஆக அருள விளங்கும் தலம் இது. இத்திருக்கோயில் திருவேகம்பர் சந்நிதி வீதியில் உள்ளது.
அமரேசம்: தேவரும் அசுரரும் பலயுகம் பொருது வெற்றி தோல்வி காணாராயினர். போர் முற்றுப்பெற உமையம்மையார் விரும்பச் சிவபிரானார் சிறிது ஆற்றலை அசுரரிடத்து வைத்துத் திருமால் முதலியோரைத் தோல்வியுறச் செய்தனர். பின்பு அம்மையார் கருத்தாகத் தேவரை வெற்றிகொளச் செய்தனர். வெற்றிக்குக் காரணம் தான் தாமென மயங்கிச் செருக்கிய திருமால் பிரமன் இந்திரன் முதலானோர் முன்பு :யட்சனாக வந்தபெருமானார், துரும்பை நிறுத்தி இதனை எறிய வல்லவர் வென்றவர் ஆவர் எனத் தனித்தனி முயன்று இயலாமையின் நாணிய அத்தேவர் முன்னின்றும் மறைந்தனர். திகைக்கும் தேவர்முன் உமையம்மையார் தோன்ற யாவரும் துதி செய்தனர்.
‘சிவனருளின்றித் துரும்பையும் அசைக்கமுடியாத நீவிர் தற்போகத்தினால் எழுந்தருளியிருந்த பெருமானைக் காணீர் ஆயினீர். எப்பொருளின் கண்ணும் விளங்கும் எவ்வகை ஆற்றலும் அவனருளிய ஆற்றலே என்னும் உண்மையை மறந்து தருக்கிய நீங்கள் பிழைதீரக் காஞ்சியிற் சிவபூசனை புரிமின்’ என அருளி மறைந்தனர். அம்மையார் அருளியவாறு காஞ்சியில் திரிதசர் ஆயதேவர் ‘திரிதசேச’ரைத் தாபித்துப் பூசித்துப் பெருவலி பெற்றனர். இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அமரேசர் கோயில் தெருவில் உள்ளது.
திருமேற்றளி: (தளி-கோயில்) உருத்திரர் நூற்றுவரும் பிறரும் வழிபட்ட நூற்றுப்பதினெட்டுத் தலங்கள் உள்ளன. அத்தலங்கள் என்றும் தபோதனர்களால் பூசிக்கப்படுகின்றன. அவற்றுள் திருமேற்றளியும் ஒன்று.
முன்னாளில் திருமால் சிவசாரூபம்பெற அத்தளியில் தவஞ்செய்தனர். சிவபிரானார் அவர்முன் தோன்றி ‘நீ விரும்பிய பேற்றை வைவச்சுத மனுவந்தரத்து இருபத்தெட்டாம் கலியுகத்தில் சீகாழிப் பதியில் அவதரிக்கும் நம் அடியவனாகிய திருஞானசம்பந்தன் அருள் செய்வான். அதனளவும் அங்கே தவஞ்செய்தி’ என்றருளி மறைந்தனர். அங்ஙனமே திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தால் திருமால் சிவசாரூபம் பெற்ற இடம் அத்தலம். திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் இத்தலத்திற்கு உள்ளன. திருஞானசம்பந்தர் பதிகத்திற்கு உருகிய திருமால் சிவலிங்கவடிவாய் ஓதஉருகீசர் என்னும் திருமுன்பொடும், சிவபிரான் திருமேற்றளிநாதர் என்னும் திருமுன்பொடும் விளங்குகின்றனர். தெருவின் கீழைக் கோடியில் திருஞான சம்பந்தர் எழுந்தருளியுள்ளனர். அவர் பாடலைக் கேட்ட முத்தீசர் சந்நிதியும் உள்ளது. திருஞான சம்பந்தர் பிள்ளையார் என்னும் பெருமையால் காஞ்சிபுரத்தில் மேலைப்பகுதி முழுவதும் பிள்ளையார் பாளையம் எனப் போற்றப்பெறும். உதியமரம் இருத்தலின் ஒதியடிமேடை என்பது பிரசித்தமாக வழங்கும் இடம் அதுவாகும்.
அனேகதங்காவதம்: (அனேகபம்-யானை) யானைமுகமுடைய விநாயகர் தம் பெயரால் ‘அனேகபேச்சுரன்’ எனப்பெறும் சிவலிங்கம் நிறுவிப் போற்றப் பெருமான் வெளி நின்றனர். ‘யாது பணி’ என வணங்கி வேண்டிய விநாயகர்க்குப் பெருமான் அருள் செய்தனர்.
நல்லோர் வழிபட அவர் கருமங்களை இடையூறு நீக்கி முற்றுப்பெறச் செய்யவும், வழிபடாத தீயோர் செயல்களை இடையூற்றினை ஆக்கி அழிக்கவும் தேவர்கள் விருப்பப்படி உன்னைத் தந்தோம். அவற்றிற்கு வேண்டும் ஆற்றலையும் இப்பொழுதே வழங்கினோம். மேலும், இரணியபுரத்துக் கேசி முதலாம் அசுரரை அழித்து அவர் கருவுள் இருக்கும் வல்லபை என்னும் சத்தியை மணந்து ‘வல்லபை விநாயகர்’ என்னும் பெயரொடும் விளங்கி அவ்வாறெண்ணி வழிபடுவார்க்கு அருள் செய்’ என மகிழ்ச்சியொடும் அனேகபேச்சுரர் விடைதரச் சென்று அவ்வசுரரை அழித்து வல்லபையை மணந்து வீற்றிருந்து இடையூறு நீக்கித் காத்தருளுகின்றனர். விநாயகர் பூசித்த பிரானை வணங்கினோர் பிறவி நோய் நீங்கித் திருக்கயிலையை அடைந்து வாழ்வர். இத்தலம் புத்தெரி தெருவிற்கு மேற்கில் கயிலாயநாதர் ஆலயத்திற்கு அணித்தாக உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகம் பெற்ற தலம்.
கயிலாயம்: பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களில் பொன், வெள்ளி, இரும்புகளாலாகிய முக்கோட்டைகளைக் கொண்ட திரிபுரர் என்னும் அசுரர் மூவர் குருலிங்கசங்கம மெய்ப்பத்தியில் தமக்கு ஒருவர் நிகரிலராய் வாழ்ந்தனர். எனினும், குலப்பகையால் மிகப் பெரிதும் தேவரை வருத்தினர்.
திருமாலின் துணைகொண்டு தேவர், முப்புரத்தசுரரை அழிக்க ‘ஆபிசாரம்’ என்னும் யாகம் செய்து தோன்றிய பூதங்கள் ஏவப்பட்டு சிவபூசை, மகேசுரபூசை, விபூதி சாதனங்களில் உறுதியொடு தலைநின்ற அவ்வசுரர் முன்செல்லவும் மாட்டாவாய் அழிந்தன.
நெடிது சிந்தித்துத் திருமால் தன் கூற்றில் ஆதிபுத்தனைத் தோற்று வித்து நாரதனையும் உடன் போக்குவித்துத் திரிபுரத்து உள்ள தலைவர் மூவரொழிய ஏனைய அவுணரை முற்றவும் தாம் ஆக்கித் தந்த நூலால் மயக்கிச் சிவநெறியைக் கைவிடுத்தனர். பெண்டிரும் நாரதர் சொல் வலைப்பட்டுக் கற்பிழந்தனர்.
அந்நிலையில் திருமால் தேவரொடும் கயிலை புகுந்து சிவபிரானார் திருவடிகளில் விண்ணப்பிக்க அத்தேவர்களைத் தேராகவும் போர்க்குரிய கருவிகளாகவும் கொண்டுஅப்பெருமானார் திரிபுரத்தவருள் தலைவர் ஏனையோரையும் மூவரொழிய முப்புரங்களையும் சிரித்தெரித்தனர். திருமால் முதலானோர் சிவபூசனையையும் சிவசாதனங்களையும் கைவிட்டவர் என்றும் தமக்குப் பகைவரேயாவர் எனக் கூறித் தத்தம் இடம் சென்றனர்.
பலயுகங்கள் நரகிடைக் கிடந்தாலும் தீராக் கொடுஞ்செயலாகிய துர்ப்போதனை புரிந்தமைக்கு: வருந்திய புத்தனும் நாரதரும் சிவபுண்ணியத்தைச் செய்யத் தூண்டாது செய்வோரைப் பிறழ்வித்தமைக்குப் பெரிதும் வருந்திக் கழுவாய் இல்லாத குற்றம் தீரக் காஞ்சியை இருவரும் எய்தினர்.
புத்தநாரதரை வருத்தும் இருப்புக்குன்றத்தினும் பெரும்பாரமாகிய பாவச்சுமை காஞ்சியை நெருங்குகையில் பருத்திக்குன்றினும் மெலிதாய் விட்டமை நோக்கி அவ்விடத்திற்குப் ‘பருத்திக்குன்றம்’ எனப் பெயரிட்டனர்.
அதற்கு வடகிழக்கில் அதிவிசித்திரச் சிற்பக் கோயிலை இருவருமாக அமைத்து, கயிலாயநாதரை எழுந்தருளுவித்துப் பூசனை புரிந்து தவம் இயற்றினர் இருவரும். சிவபெருமான் வெளிநின்று ‘பிறர் நலம் பெற ஓரோர்கால் பாவம் சிறிது செய்யலாமெனினும் சிவாபராதமாகிய செயல் நினைப்பினும் அதனைப் போக்கப் பல்லூழிகாலம் நரகிடைக் கிடந்தாலும் உய்தியில்லை. அத்தகு பாவமும் காஞ்சியை அடுத்தமையால் பெரிதும் நீங்கிற்றாயினும் பல் பிறப்பெடுத்து அநுபவித்தே கழிக்க வேண்டியுள்ளது. ஆகலின், அப்பிறப்புக்களைக் கழிக்குமாறு கூறுதும் கேண்மினென’ அருளினர்.
‘இக்கயிலாயநாதரை வலம் செய்யப்புகும் இடத்தும், வெளிவரும் இடத்தும் வழியைச் சுருங்கையாக அமைத்தோம்’ இவ்வழிகளால் வலங்கொள்ளும் முகத்தால் பல்யோனியிற் புக்குழலும் பிறப்பு இறப்புக்கள் நுமக்குக் கழிவனவாகுக. முடிவில் முத்தியை வழங்குவோம்’ என வாய் மலர்ந்து பெருமானார் திருவுருக்கரந்தனர்.
புத்தனும் நாரதரும் அங்ஙனமே நெடுங்காலம் இறைவனை வலம் வருவோராய்த் திருவருளைப் பெற்றனர். கயிலையை ஒக்கும் இத்தலம் ஒப்பது மூவுலகினும் இல்லை. இக் கயிலாயநாதர் கோயில் கலைகளுக்கிடனாக அதிவிசித்திரச் சிற்பக் கோயிலாக, அசரீரிகேட்ட இராசசிம்மனால் கி. பி. 700ல் அமைக்கப்பட்டது. இதன் இயல்புகள் சொல்லுக்கடங்காச் சிறப்பின. காஞ்சியை அடைந்தோர் யாவரும் வந்து வணங்கிய கோயில் எனினும் ஆம்; கயிலாயநாதர் திருக்கோயிலைக் காணக் காஞ்சிக்கு வருகின்றனர். எனினும் அமையும். இத்தலம், ‘கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும் கயிலாதநாதனையே காணலாமே’ என்னும் சிறப்பொடும் புத்தேரி தெருவிற்கு மேற்கில் உள்ளது.
வீரராகவேசம்: இராமன், தன் மனைவியாகிய சீதையை இராவணன் கவர்ந்து சென்றமையால் வருந்தி அம்மனைவியைப் பெறுமாறும் இராவணனை வெல்லுமாறும் உபாயமும் உபதேசமும் புரிந்த அகத்தியர் சொல்வழி ‘வீரராகவேசன்’ என்னும் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றினன்.
பிரானார், வெளிநின்று வீரம் வேண்டினை ஆகலின் வீரராகவன் என்னும் பெயரொடும் விளங்குக’ எனவும், பாசுபதப்படையை வழங்கித் தேவர் பிறரைக்கொண்டு அவரவர் படைகளை வழங்குவித்து இலக்குவனொடும் சுக்கிரீவன் முதலாம் படைத் தலைவனொடும் இலங்கை புகுந்து இராவணனை அவன் சுற்றத்தோடும் அழித்துச் சிதையை மீட்டுக் கொண்டுபோய் அயோத்தியை அடைந்து அரசு செய்க’ எனவும் அருள் புரிந்தனர்.
அகத்தியர் உணர்த்திய தத்துவங்களின் ஐயங்களை இராமனுக்குப் போக்கிய சிவபிரானார், இங்கு வணங்கினோர் பகைவரை வென்று வாழ்ந்து திருவருளை எய்துவர் என அருளி மறைந்தனர்.
இத்தலம் புத்தேரி தெருவிற்குத் தெற்கிலுள்ள வயலில் அமைந்துள்ளது.
கற்கீசம்: ஊழி முடிவில் கொடியவர்களை அழித்தற் பொருட்டுத் திருமால் கற்கி (குதிரை) ஆக இருந்து வீரராக வேசத்திற்குத் தெற்கில் மண்ணி தீர்த்தக் கரையில் வணங்கி வரம்பெற்ற தலம் ஆகும். வீரராகவேசத்திற்கும் ஐயனார் கோயிலுக்கும் அடுத்துள்ள இச்சிவலிங்கத்தை வணங்கினோர் போக மோட்சங்களை பெறுவார்.
வாணேசம்: வாணன் தவத்தினுக்கு எளிவந்து சிவபிரானார் திருநடனம் செய்தனர். திருநந்திதேவரொடு வாணனும் குடமுழா முழக்கினன். பெருமானார். ஆயிரங் கைகளை அவ்வசுரனுக்கு அளித்து மேலும், அவன் விரும்பிய நெருப்புவடிவமான கோட்டையையும் மூவுலகையும் ஆளும் வல்லமையையும், அழியாத இயல்பையும் பிறவற்றையும் வழங்கினர்.
யாவரையும் அடிப்படுத்து அவ்வசுரன் ஆளும் நாளில் கயிலைக்குச் சென்று பெருமானை வணங்க ‘நினக்கு வேண்டும் வரம் யாதென’ வினவிய கயிலைநாயகர்பால் நாளும் திருக்காட்சி தர அம்மையொடும் குமரர்களோடும் என் இல்லத்தில் எழுந்தருளி இருத்தல் வேண்டும் என்றனன்.
மனக்கருத்தை முற்றுவிக்க வாயிலில் வீற்றிருக்கும் பெருமானாரைத் தோள்தினவு தீரப்போருக்கு அழைத்தனன் வாணன். பெருமான் புன்முறுவலுடன் ‘முப்பதுமுறை உன்னிடத்துத் தோற்ற கண்ணன் உபமன்னியர்பால் சிவதீக்கை பெற்று எம்மைப் பூசித்துப் பெருவலி பெற்று நின்னை வெல்லும் வலியினனாய் நின்மகள் உஷைக்கோர் பழிவருங்கால் மதிற் கொடியும் அற்றுவிழும் துன்னிமித்தத்தில் போர்க்கு வருவன்’ என்றனர்.
அங்ஙனே, உஷை கனாக் கண்டு நனவில் வருந்தும்போது சித்திரலேகை என்னும் தோழி தீட்டிய அரசிளங்குமரர்களுள் தன்னைக் கனவிற் கலந்தவனைக் காட்டக் கண்டு கண்ணபிரான் பெயரனும் பிரத்தியும்நன் மகனுமான அநிருத்தனைத் துயிலும் அணையொடும் கொணர்ந்தனள் தோழி.
அந்தப்புரத்தில் அவனொடும் இருந்த உஷை கருவுற்றமை அறிந்த வாணன் அநிருத்தனை அரிதிற் சிறைப்படுத்தினன்.
அநிருத்தன் சிறைப்பட்டமை நாரதரால் அறிந்த கண்ணன் சோணிதபுரத்தின்மேற் படையெடுத்துழி வாயிலில் காவல்கொண்டிருந்த சிவபிரானார் பல்வகையாகத் தேற்றி என்னையும் வெல்லும் ஆற்றலை முன்னொருகால் மந்தரமலையில் வழங்கியுள்ளோம் அதனை மறந்தனை’ ஏனத் துவாரகை மன்னனைத் தெருட்ட வேறு வழியின்மையால் எதிர்நின்று போர்செய்கையில் கண்ணனுக்கு வெற்றியை வழங்கினர்.
இவ்வாறே உமையம்மையார், விநாயகர், முருகப்பெருமானார் இருந்த ஏனைய மூன்று வாயில்களையும் கடந்தபோது வாணன் கண்ணனுடன் போர்செய்து முடிவில் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறு கரங்களை அறுபட் டிழந்துழிச் சிவபெருமான் எதிரெழுந்தருளிக் ‘கண்ணனே நின்போல் என்பால் அன்பனாகிய வாணன் நம்மை வழிபட இரு கரங்களை விடுக’ என அருளினர். கேட்ட கண்ணன் ‘நும் அன்பர் எனக்கும் அன்பரேயாவர்’ என நாற்கரம் விடுத்தனர்.
சிவபிரான் புன்முறுவல் பூத்து வாணனை நோக்கி ‘தோள் தினவு தீர்ந்தது போலும்’ என வினவி உஷையை அநிருத்தனுக்கு மணம் புரிவித்துத் துவாரகைக் கனுப்பினர். வாணனுக்குக் குடமுழா முழக்கும் பேறு அளித்துக் கைலைக்கேகினர் பெருமானார்.
இத்தலம் திருவோணகாந்தன் தளிக்கு மேற்கில் ஒரு பர்லாங்கு தொலைவில் வயற்கண் உள்ளது.
சலந்தரேசம்: சலத்தில் தோன்றினமையால் சலந்தரன் எனப் பெயர் பெற்ற சலந்தராசுரன் சிவலிங்கம் தாபித்துப் பூசிக்கத் திருவேகம்பர் எழுந்தருளி அவன் விரும்பியவாறு ஆண்மையும், வலிமையும், தலைமையும், பகைவரை அழித்தலும், இறைவனை ஒழிந்த பிறரால் அழிவுறாமையும், முத்தியை வழிபட்ட இவ்விடத்தே பெறுகையும் ஆகிய இந்நலங்களை அருளப்பெற்றனன்.
எண்டிசைத் தலைவரையும் வென்று கீழ்ப்படுத்தித் திருமாலைச் சிறைப்படுத்தித் தேவர் வேண்ட விடுத்தனன்.
வாழ்நாள் உலந்தமையின் சிவபிரானொடு பொரக் கயிலையை அணிகினன் அவுணன். அதனை அறிந்த திருமால் துறவோர் வேடம் பூண்டு அசுரன் மனைக்கிழத்தி பிருந்தையைக் கொள்ளுதற்கிது தக்க பருவம் என மதித்து அவன் மனையிடைப் பூம்பொழிலில் தங்கினர். அசுரன் மனையாள் முனிவரைக் கண்டு ‘தவத்தீர்! என் கணவர் சிவபிரானொடும் பொரத் திருக்கயிலை சென்றனர். வெல்வரோ? தோற்பரோ? விளைவறியேன் விளக்கியருளல் வேண்டும்’ என வினவினள்.
திருமாலாகிய துறவோர் ‘சிவபிரானை வென்றவர் உளரேயோ? ஆகவே, நின் கணவன் நிச்சயமாக உயிரை இழப்பன்’ என அவளுக்கு விடை கொடுத்தனர்.
அந்நிலையில், ஓர் தானவன் ஓடிவந்து ‘அம்மே! நம் படையைச் சிவபிரான் நீறுபடுத்திப் பின் சக்கரமொன் றுண்டாக்கி அதுகொண்டு உன் தலைவனை அழித்தனன்’ என்னலும், முனிவன் அவள் கையைப் பற்றக் கணவனையிழந்த யான் மூன்று நாட்களுக்குப் பிறகு நின் மனைக்கிழத்தி யாகுவென்’ என்று விடுவித்துத் தீப்புகுந்தொழிந்தனள்.
அச்சாம்பரிற் புரண்டு மயல் பூண்ட திருமாலின் மயக்கம் நீங்க உமையம்மையார் கொடுத்த சந்தனத் திறள் மூன்றனையும் தேவர், சாம்பரி லிடத் துழாய், நெல்லி, அகத்தி மூன்று மரங்களாக முளைத்த அவற்றுள் துழாயைத் தழுவிப் பிருந்தையால் ஆயநோய் நீங்கப்பெற்று வைகுந்தம் அடைந்தனர் திருமால்.
துவாதசியில் இம்மூன்றனையும் போற்றிக் கொள்வோர்க்குத் திருமாலின் இன்னருள் கைகூடும்.
கயிலையில் அழிந்த சலந்தரன் ஒளிவடிவாய்க் காஞ்சியை அடைந்து தான் முன்பு வழிபட்ட இலிங்கத் தொன்றுறக் கலந்தனன்.
இத்தலம் பின்பு நிகழ்ந்த மாறுதலான் இப்பொழுது ஓணகாந்தன் றளியுள் சேர்ந்து அவ்விருவர் வழிபட்ட சிவலிங்கங்களுக்குத் தெற்கில் மூன்றாவது சந்நிதியாக விளங்குகிறது.
தக்கேசம்: வேள்வி நாயகனான சிவபிரானை மதியாது வேள்வி வடிவினராம் திருமால் முதலியோரைக் கொண்டொரு வேள்வியைத் தொடங்கினன் தக்கன். உமையம்மையார் காணச் சென்று பழித்த தந்தையாகிய தக்கன் யாகம் பாழ்படச் சாபமிட்டுக் கயிலையை அடைந்த வழிச் சிவபிரான் தன் கூற்றில் வீரபத்திரரையும் அம்மையார் தன் கூற்றில் காளியையும் தோற்றுவித்து வேள்வியை அழிக்குமாறு செலுத்தப் பூதகணங்களுடன் போய்த் ததீசி முனிவர் நன்மொழியைக் கேளாத தக்கனையும், அவையையும் நோக்கிச் சிவபிரானுக்குரிய அவியைக் கொடுக்குமாறு தூண்டினர்.
மறுத்தமையால் பூத கணங்களைக் காவற் படுத்திய வீரபத்திரர் உள்ளே புகுந்து சூரியர் கண்களைப் பறித்தும் பற்களைத் தகர்த்தும், சந்திரனைக் காலாற்றேய்த்தும், அக்கினியின் கையையும் நாவையும் துண்டுபடுத்தியும் ஏனைத் தேவரையும் பொருந்திய தண்டங்களைச் செய்தும் செய்வித்தும் நிறுத்தினர்.
உடன்சென்ற காளியும் சரசுவதியின் கொங்கையையும், மூக்கையும் அரிந்தும் பெண்டிர்பிறரைத் தண்டித்தும் நின்றனள். அந்நிலையில் காக்க நின்ற திருமால் விடுத்த சக்கரப்படையை வீரபத்திரர் அணிந்திருந்த தலைமாலையுள் ஓர்தலை விழுங்கியது. இவ்வாறாகப் பெருமானார் அம்மையொடும் விடைமேற்றோன்றி போற்றி அடைக்கலம் புக்க விண்ணோரைக் காத்து அருள் புரிந்தனர். தக்கனை ஆட்டுத்தலையைப் பொருத்தி உயிர்பெறச் செய்தனர் பிரானார்.
பெருமான் திருமால் முதலாம் விண்ணோரை நோக்கித் தக்கன் யாகத்திற் பங்குகொண்ட பாவம்தீர எம்மைப் பூசனைபுரிவீராக. புரியுங்காறும் சூரபதுமன் முதலான அவுணர் நுமக்குப் பகைவராய் நலிவு செய்வர்’ என அருளித் திருவுருக் கரந்தனர். தக்கன் தன் மக்கள் பூசனை புரிந்த அச் சூழலை அடுத்துச் சிவலிங்கம் தாபித்துப் பூசனைபுரிந்து சிவகணத் தலைமை பெற்றனன். பூசனையை மறந்த விண்ணோர் சூரபதுமன் ஆட்சியில் துன்பக் கடலில் மூழ்கினர். பிரமனால் அறிந்த விண்ணோர் யாவரும் சிவபூசனை புரிந்து அச்சூரன் முதலானோரை முருகப்பெருமான் தொலைவு செய்தமையால் மகிழ்ந்து வாழ்ந்தனர். ‘தக்கேசம்’ என்னும் இத்தலம் பிள்ளையார்பாளையம் கச்சியப்பன் தெருவிலுள்ளது.
வயிரவேசம்: மேருமலைச் சிகரத்தில் தவஞ்செய்த முனிவரர் சிலர் முன் பிரமன் தோன்றினான். ஐந்து முகங்களையுடைய பிரமனை முனிவரர் பின்வருமாறு வினாவினர்; ‘காணப்படும் இவ்வுலகம் யாரை முதல்வனாக உடையது? இது எவரிடத்துத் தோன்றி நின்றொடுங்கும்? பலவாய பசுக்களினுடைய பாசத்தை நீக்கி அருள்செய்யும் தலைவன்யாவன்? இவற்றை விரித்துரைத்தருள்க’ என வேண்டினர்.
பிரமன், மூவகை வினாவிற்கும் உரிய முதற்பொருள் தானே எனத் தருக்கினன். அப்போது வேதங்கள் வெளிப்பட்டு ஒருங்கும் தனித் தனியும் மேருமலையை வில்லாகவுடைய சிவபிரானே தலைவன் எனப் பல சாத்திரங்களும் வேதங்களும், புராண இதிகாசங்களும் விரிக்கின்றன’ என விளம்பின. பிரணவமும் எதிர்நின்று பகரவும் கொள்ளானாயினன் பிரமன்.
திருமால் ஆங்குத் தோன்றித் தானே தலைவன் என, பிரமன் யானே தலைவன் என இங்ஙனம் இருவரும் மாறுபடும்பொழுது சூரிய மண்டிலத்தினின்றும் வயிரவர் எழுந்தருளினர். கண்ட அளவே வெருவிய திருமால் ஓட்டெடுத் துய்ந்தனர்.
‘என் மகனே! வருக’ என அழைத்த பிரமனின் பழித்துப் பேசிய ஐந்தாம் தலையை வயிரவர் நகத்தினாற் கொய்தனர். மலர்மிசையோன் உயிர்போய் மீள அருளால் உயிர்பிழைத்து மயக்க நீங்கி அம்மை அப்பரை வணங்கிப் போற்றி நான்முகனாய் வாழவும், தான் செய்த பிழையைப் பொறுக்கவும் வரம்பெற்றுச் சென்றனன்.
சிவபெருமான் கட்டளைப்படி இரத்தப் பிச்சை ஏற்கப் புகுந்து கைகுந்தத்தில் விடுவச்சேனனைச் சூலத்திற் றூக்கினர். திருமால் தன் நெற்றி நரம்பைப் பிடுங்கி இரத்தத்தைக் கபாலத்தில் நூறாயிரம் வருடம் பெய்தும் நிரம்பாத அந்நிலையில் மூர்ச்சையுற்று விழுந்த மாலை வயிரவர் கையால் தடவி மயக்கம் நீக்கினர்.
திருமாலுக்கு அபயமும், அருளும் வழங்கிப்போய் முனிவர் மனைவியரைப் புன்முறுவலால் மயலுறுத்தித் தேவர்தம் செருக்கை முற்றவும் இரத்தப் பலி தேர்தலால் போக்கிய வயிரவர் காஞ்சியை அணுகிக் கபாலத்தை ஓர்மருங்கு வைத்துச் சூலநுதியினின்றும் விடுவச்சேனைத் திருமாலின் வேண்டுகோளின்படி விடுத்தனர். பின்பு தம் பெயரால் வயிரவேசர் எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றி வெளிநின்ற பெருமானை உமையம்மையொடும் அருட்குறியில் இருந்து யாவர்க்கும் அருளவும், தாம் திருமுன்பிருந்து தொண்டு செய் துய்யவும் வேண்டிப் பெற்றனர் வயிரவர்.
மேலும், இறைவனார் ஆணைப்படி இரத்தத்தைக் கணங்களுக் களிக்கச் சிலவற்றிற்கும் பருகப் போதாமை கண்டு போர்க்களத்தில் உயிர்விடுவோரைத் துறக்கம் சேர்த்து அவர் இரத்தத்தைக் கணங்களைப் பருகுவித்து இரணமண்டில வயிரவராகக் காஞ்சியைக் காவல் புரிவர்.
இத்தலம் பிள்ளையார்பாளையம் சோளீஸ்வரர் கோயில் தெருவில் உள்ளது.
குமரகோட்டம்: முருகப்பெருமானார் தாருகன் முதலாம் அசுரரை அழித்துத் தேவரை வாழ்வித்தபின் திருக்கயிலையில் அம்மை அப்பரை வணங்கி அருள்விளையாடல்களைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரமன் தேவர் குழாங்களுடன் சிவபிரானை வணங்கச் செல்லும்பொழுதும் மீளும் பொழுதும் முருகப் பெருமானை மதியாது சென்றனன்.
அவனது அகந்தையை நீக்கக் கருதிய கருணையொடும் குமரப்பிரானார் வேதனை அழைத்து ஒருவாறு வணங்கிய வேதனை ‘வேதம் வல்லையோ’ என வினவினர்.
ஓம் மொழிப் பொருளின் உண்மைகாணாது மயங்கிய பிரமனைக் குட்டிச் சிறையி லிட்டுப் பிரம கோலத்துடன் படைத்தற்றொழிலை மேற்கொண்டனர் தேவசேனாதிபதி.
தேவர் முறையீட்டிற்குத் திருச்செவி சாத்திய சிவபிரானார் நந்தியை விடுத்தபோது முருகப்பெருமான் பிரமனைச் சிறைவீடு செய்யாமையின் தாமே போந்து பிரமனை விடுவித்தனர். பிரமன் வேற்கடவுள் கருணையால் நல்லறிவு பெற்றேனென வணங்கித் தன் இருக்கை சார்ந்து படைப்புத் தொழிலை மேற்கொண்டனன்.
சிவபிரான் மடித்தலத்திலிருந்து முருகப்பெருமான் ஓம்மொழிப் பொருளைத் தந்தையார்க்கு வெளிப்படுத்தி அவரருளைப் பெற்றனர். ஆயினும் தந்தையார் பணியாகிய பிரமனைச் சிறைவீடு புரியாமையான் நேர்ந்த பிழைதீரத் தம்பெயரால் தேவசேனாபதீசர் எனச் சிவலிங்கம் இருத்திப் போற்றினர்.
முருகப்பெருமான் மான்தோலுடையும், தருப்பை அரைநாணும், திருக்கரங்களில் உருத்திராக்க வடமும், கமண்டலமும் விளங்க நினைப்பவர் பிறப்பறுதற்கு ஏதுவாகிய குமரக்கோட்டத்துள் முனிவரர் போற்றத் தேவசேனாபதீசர் திருமுன்பு மேற்கு நோக்கிய திருக்கோலத்துடன் நின்றருள் புரிவர். அவர்தம்மை வணங்குவோர் இன்பமுத்தியை எளிதிற் பெறுவர்.
அடியவரை மயக்கும் குற்றத்தினின்றும் எஞ்ஞான்றும் தவிரவும் மார்க்கண்டேயரை வஞ்சகப் படுத்த முயன்ற பிழை தீரவும் தேவசேனாபதீசப் பெருமானை வணங்கி ‘உருகும் உள்ளக்கோயிலான்’ என்னும் திருப்பெயருடன் திருமால் குமரகோட்டத்தில் முருகப்பெருமான் அருளையும் பெற்று விளங்குகின்றனர்.
குமரகோட்டம் என்னும் இத்தலம் காஞ்சிக்கு நடுநாயகமாய் விளங்குகின்றது.
கண்ணேசம்: (கண்ணன்-கரியன்) திருப்பாற்கடலில் எழுந்த விடத்தால் கரிந்து வெப்புற்ற திருமால் ‘கண்ணேசர்’ என்ற பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றி அப்பெருமான் ஆணைப்படி திருவேகம்பத்தில் திருமுடியில் உள்ள நிலவின் அமுத கிரணத்தால் வெப்பம் நீங்கி நிலாத்துண்டப் பெருமாள் என்னும் திருநாமம் பெற்றனர். கண்ணேசத்தில் வழிபாடு செய்வோர் மேலுலகில் வாழ்வர்.
இக்கண்ணேசம் செங்கழுநீரோடை வீதியில் மொட்டைக் கோபுரத்திற் கெதிரில் உள்ளது. கவுசிகேசம்: உமாதேவியார் கழித்த கருஞ்சட்டையில் தோன்றிய கவுசிகி பூசித்துப் பெற்ற அருளால் சும்பன் நிசும்பன் என்னும் அசுரரை அழித்துக் காஞ்சியை காவல் செய்யும் பேறு பெற்றனள். இத்தலம் காமாட்சியம்மை கோயிலை அடுத்துப் புறத்தே வடகிழக்கில் உள்ளது.
மகாளேசம்: மாகாளன் என்னும் பாம்பு திருக்காளத்தியில் பூசனை புரிந்து வீடு பேற்றை விரும்பப் பெருமான் கட்டளைப்படி காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் போற்றி அருள்பெற்றுப் போய்த் திருக்காளத்தியில் முத்தியை எய்திற்று. இத்தலம் காமகோட்டத்திற்கும் காளிகோயிலுக்கும் இடையில் உள்ளது.
திருமாற்பேறு: திருமால், குபன் என்னும் அரசனுக்குத் துணை நின்று அவனுக்குப் பகைவராம் ததீசி முனிவர்மீது சக்கரத்தை எறிய வயிரயாக்கையிற் பாயாது அது கூர்மழுங்கியது. சலந்தரனைத் தடித்த சக்கரத்தைச் சிவபிரானிடத்திற் பெறுமாறு உமையம்மை வழிபாடு செய்த திருமாற்பேற்றீசரை நாடொறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனை புரிந்து வருவாராயினர்.
சிவபெருமான் திருமாலின் அன்பினை அளந்து காட்டுவான் மலரொன்றினை மறைத்திட மந்திரம் ஒன்றினுக்கு மலர்பெறாது தமது கண்ணைப் பறித்து மலராகத் திருவடியில் இட்டனர்.
சிவபிரான் மகிழ்ந்து சூரியமண்டிலத்தினின்றும் பேரொளியுடன் இறங்கிவரக் கண்ட தேவர் ஓட்டெடுத்தனர்; திருமால் வணங்கிப் போற்றினர். அதுகாலைச் சிவபிரானார் திருமாலை நோக்கி ‘உனக்குத் தாமரை மலரை ஒக்கும் கண்கொடுத்தோம். ஆகலின், நினக்குப் பதுமாக்கன் என்னும் பெயர் வழங்குக. இவ்வூர் இனித் திருமாற்பேறு என்னும் பெயரொடும் நிலவுக. ‘சுதரிசனம்’ என்னும் இச்சக்கரத்தால் வெல்லற்கரிய எத்துணைப் பெரும் பகையையும் வெல்லுக. நீ கூறிய பேராயிரமுங் கொண்டெம்மை யருச்சிப்போர்க்கு மலம் நீக்கி முத்தியை வழங்குவோம். அன்றியும், தீண்டச் சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர், திருமாற்குப் பேறளித்தார் என்னும் எட்டுப் பெயர்களும் அவ்வாயிரம் பெயருக்கு ஒப்பாகும்’ என்றருளினர்.
திருமால் மேலும் தொழுது துதித்து ‘இவ்வூரிற் கணப்பொழுது தங்கினவர்க்கும் முத்தியையும் இவ்விலிங்கத்தை வணங்கினோர் கடல் சூழ்ந்த உலகிலுள்ள சிவலிங்கங்கள் எவ்வெவற்றையும் பணிந்த பயனையும் வழங்கவேண்டும்’ என வேண்ட வேண்டுவார்க்கு வேண்டுவ வழங்கும் பெருமானார் அவர்க்கு அவற்றை அருள்செய்து அச்சிவலிங்கத்துள் மறைந்தருளினர்.
இத்தலம் காஞ்சிபுரத்திற்கு வடக்கே எட்டுக்கல் தொலைவிலுள்ள ‘திருமாற்பேறு’ என்னும் தொடர் வண்டி நிலையத்தினின்றும் மேற்கே 2? மைலில் உள்ள திருமாற்பேறு என்னும் ஊரிலுள்ளது. இறைவன் திருப்பெயர் மால்வணங்கீசர். இறைவி திருப்பெயர் கருணை நாயகி. திருஞானசம்பந்தர் திருப்பதிகம் இரண்டும் திருநாவுக்கரசர் திருப்பதிகம் நான்கும் கொண்ட தலம் இது.
அந்தகேசம்: இரணியாட்சன் மகன் அந்தகாசுரன் அந்தகேசப் பெருமானைப் பூசனை புரிந்து பெற்ற வரத்தினால் திருமால் முதலான தேவர்களைப் புறங்கண்டு அரசாண்டு வந்தனன். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண்ணுருக்கொண்டு திருக்கயிலையில் இறைவியின் கணங்களொடும் இருந்தனர். அறிந்த அசுரன் அங்குப் போர் செய்தற்குச் செல்ல அம்மையார் அருளைப்பெற்றுத் திருமால் அளவில் மகளிர் சேனையைச் சிருட்டித்து அனுப்பத் தோற்றோடினன்.
அதுகாலை இறைவனார் பேரழகுடைய பிட்சாடனகோலம் பூண்டு தாருகாவன முனிவர் மனைவியர்பாற் சார்ந்து மயல் பூட்டினமையால் அப்பெண்டிர் கற்பினை இழந்தனர். அறிந்த முனிவர் சிவபெருமானை அழித்தற் பொருட்டு வேள்வி ஒன்றியற்றி அவ் வாபிசாரயாகத்திற்றோன்றிய முயலகன், புலி, பாம்பு, மான், பூதம், மழு, யாகத்தீ இவற்றை ஏவினர். பெருமானார் அவற்றை அடக்கி ஏன்றுகொண்டனர்; மேலும் அம்முனிவரர் முன் திருக்கூத்தியற்றி நல்லறிவு அருள் செய்தனர். பிழை பொறுத்து முத்தியளிக்க வேண்டிய முனிவரர்க்குக் ‘காஞ்சியில், புல்பூடு முதலாம் எத்துணைத் தாழ்ந்த பிறப்பிற் றோன்றினும் முத்தி கைகூடும். ஆகலின், நீங்கள் காஞ்சியில் பிறந்து இல்லறமினிது நடாத்தி முத்தி அடைக’ என்றருளினர். பெருமானார் திருவாணைப்படி பிருகு முனிவர் முதலாம் நாற்பத்தொண்ணாயிரவரும் காஞ்சியில் பிறந்து சிவபூசை செய்து வாழ்ந்தமையால் காஞ்சியில் உள்ளார் யாவரும் முனிவர்களே; அத்தலத்துள்ள கல்லெல்லாம் இலிங்கமே; நீரெல்லாம் கங்கையே; பேசுகின்ற பேச்செல்லாம் மந்திரங்களே; செய்யும் செயல்கள் யாவும் இறைவனுக்கு ஆம் திருப்பணியே; எனவே, இயமனுக்கு அந்நகரில் புக உரிமையில்லை.
பெருமானார் திருக்கயிலைக் கெழுந்தருளிய பின் மீண்டும் அந்தகாசுரன் போருக்குச் சென்றனன். இறைவனார் வயிரவ மூர்த்தியை அனுப்பினர். அவர் எதிர்சென்று அந்தகனைச் சூலத்தில் ஏந்தி திருநடம் புரிந்தனர். அசுரன் அறிவுபெற்றுச் சூலத்திற் கிடந்தவாறே துதித்தனன். வயிரவர் மகிழ்ந்து வேண்டும் வரம் கேள் என்றருளி முத்தி வேண்டினன் அசுரன். வயிரவர் இறைவன் திருக்குறிப்பின்படி காஞ்சியை அடைந்து சூலத்திற் கிடக்கும் அந்தகனைத் திருவேகம்பர் திருக்கோயிற் சிவகங்கையில் மூழ்குவித்துத் திருவருளை நல்கிப் பாசத்தைப் போக்கினர். அந்தகன் தான் முன்பு வழிபட்டு வரம்பெற்ற இலிங்கத்துள் கலந்து ஒன்றுபட்டனன்.
இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே எட்டுக் கல் தொலைவில் திருப்புட்குழியில் உள்ளது. காமேச்சரம்: இறைவன் சித்தத்தில் தோன்றிய சித்தசன் எனப்பெறும் மன்மதன் சிவபிரானை வழிபட்டு உயிர்கள் தோற்றுதற்குக் காரணமான ஆண்பெண் சேர்க்கையை உண்டாக்கி இரதிக்கு இனியனாய் இருந்து கொடுப்போர் கொள்வோர் உள்ளத்திருந்து அச் செயலைச் செய்வித்து மூவுலகினும் தன் ஆணையைத் தடையின்றி நிகழ்த்தும் பேற்றினை வேண்டினன். பெருமானார் திருவுள்ளப்படி மன்மதன் காஞ்சியை அடைந்து சருவதீர்த்தத் தென்கரையில் சிவலிங்கம் நிறுவிப் போற்றிக் கருதிய வரத்தைப் பெற்றனன். அவனை மனத்தில்கொண்டு தானம் பெற்றால் பெற்ற பிராமணர் ஆசையென்னும் குற்றத்தினின்றும் நீங்குவர். இத்தலம் காமேச்சரம் எனப் பெற்றுச் சருவதீர்த்தத் தென்கரையில் விளங்கும்.
தீர்த்தேச்சரம்: காமாட்சியம்மையார் சிவபூசனையில் இறைவனார் ஏவலின் அண்டத்தின் அகத்தும் புறத்தும் உள்ள தீர்த்தங்கள் யாவும் ஒருங்கு திரண்டு போந்து அம்மை இறைவனைத் தழுவிக்கொண்ட பின்பு அத்தீர்த்தம் யாவும் சருவ தீர்த்தம் என்னும் பெயரால் காஞ்சியில் தங்கிச் சிவபிரானைத் தீர்த்தராசன் எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றிப் பெற்ற திருவருளுடைய அத்தீர்த்தத்தில் மூழ்கித் திருவேகம்பப் பெருமானை வணங்கினோர் எல்லா நலங்களும் பெற்றுக் கொலைப்பாவங்களும் நீங்கும் நிலைமையைப் பெற்றுத் திகழ்வர். அத்தீர்த்தத்தில் முழுகித் திருவேகம்பரைத் தரிசித்தோர் பிறப்பிற் புகார் முத்தியைத் தலைப்படுவர். பிரகலாதன், விபீஷணன், பரசிராமன், அருச்சுனன், அசுவத்தாமன் என்றின்னோர் முறையே தந்தையையும் தமையன்மாரையும், வீரரையும், குரு முதலியோரையும், கருவையும் கொன்றழித்த பாவங்களை முழுகியும் தரிசித்தும் போக்கிக்கொண்டனர். சருவதீர்த்தத்தின் பெருமையை முற்றச் சொல்லவல்லவர் இலர். இத்தலம் சருவதீர்த்தத்தின் மேற்குக் கரையில் இரணியேசத்திற்குக் கிழக்கிலுள்ளது.
கங்காவரேச்சுரம்: வருணன் கங்காதேவியுடன் இறைவனை வணங்கிப் போற்றி நீர்க்கும், நீரிடை வாழும் உயிர்களுக்கும் தலைவனாயினன். இத்தலம் கங்காவரேச்சுரம் எனப் பெற்றுச் சருவதீர்த்தக் கரையின் கிழக்கில் மேற்கு நோக்கிய சந்நிதியை உடையது.
விசுவநாதேச்சரம்: உலகில் உள்ள சிலதலங்கள் யாவும் ஒருங்கு சூக்குமமாகப் பொருந்தியிருக்கும் தலம் இதுவாகும். காசி விசுவநாதரும் காசியினும் காஞ்சி சிறந்ததென்று இங்கெழுந்தருளியுள்ள சிறப்பினது. இப்பெருமான் திருமுன்னர் முத்தி மண்டபம் ஒன்று உளது. இவ் விசுவநாதரை வணங்கித் திருமுன் புள்ள முத்திமண்டபத்தைக் கண்டவர் முத்தராவார். இத்தலமும் மண்டபமும் சருவதீர்த்தத்தின் மேற்குக் கரையில் இரணியேசம், தீர்த்தேச்சரம் என்னும் தலங்களுக்கு வடக்கே அடுத்துள்ளன.
முத்தி மண்டபம்: உலகெலாம் ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே மாறிலாதிருந்திடு வளங்கொள் காஞ்சியில் மூன்று மண்டபம் உள்ளன. ஆடிசன்பேட்டை முத்தீசர் சந்நிதியில் இருக்கும் முத்திமண்டபம் ஒன்று, சருவதீர்த்தத்தின் மேலைக் கரையில் உள்ள முத்திமண்டபம் ஒன்று; திருவேகம்பர் திருக்கோயிலுக்கு வெளியில் பதினாறுகால் மண்டபத்தினை அடுத்து, ‘இராமேச்சுரம்’ என்னும் தலத்தில் இராமன் திருமுன்பு பரமானந்த மண்டபம் ஒன்று. இம் மூன்று மண்டபங்களையும் விடியற் காலையில் எழுந்து அன்போடு நினைப்பவர் பல தளையினின்றும் விடுபட்டு முத்தியை அடைவர்.
மகாலிதானம்: ஓர் ஊழிமுடிவில் துயிலெழுந்த பிரமன் உலகைப் படைக்க எண்ணுகையில் வெள்ளத்தில் பாம்பணைமேல் துயிலும் தன் தந்தையாகிய திருமாலை மயக்க உணர்வினால் ‘நீயாரென’ வினவினான். திருமால் ‘உலகிற்கு முதல்வன் யான்’ எனக் கூறக்கேட்ட பிரமன் நகைத்து ‘உலகிற்கு முதல்வன் நீயுமில்லை; பிறரும் அல்லர்; யானே முதல்வன்’ என்றனன். இவ்வாறு இருவரும் சொற்போர் புரிந்து முதிர்ந்து விற்போரால் தேவப் படைகளை வீசிப் பதினாயிரம் வருடம் போர் செய்தனர். பிரமன் விடுத்த பாசுபதமும் திருமால் விடுத்த உருத்திரக்கணையும் நிகழ்த்திய போரிடையே சிவபிரானார் தீப்பொறி சிதறச் சோதிலிங்க வடிவமாய்த் தோன்ற அவ்விரு படையும் இவ்விலிங்கத்துள் மறைந்தன.
திருமால் பன்றியாய் அச்சோதிலிங்கத்தின் அடியையும், பிரமன் அன்னமாய் அதன் முடியையும் காண்பான் முறையே பூமியை இடந்தும், விசும்பிற் பறந்தும் ஆயிரம் வருடம் தேடியும் வெற்றிகாணாமையால் மயங்கினர். அப்பொழுது நாதம் ஒலிவடிவமாய் ஓம் உம என இருபகுப்பாகி ஒன்று கலந்து இருக்கு, யசுர், சாமம் என்னும் மூன்று வேதமாய் விரிந்து இறைவன் இயல்பை விளக்கி அவனது அருட்குறியாகும் இது’ எனக் கூறின. மயக்கம் நீங்கி உண்மையை உணர்ந்த இருவரும் இறைவனைப் போற்றி செய்தனர். வெளி நின்ற சிவபிரானாரை இத்தகைய மயக்கம் அணுகாமையையும் பெருமான்பால் அன்புடைமையையும் திருமால் பிரமர் வேண்டிப் பெற்றனர். பின்பு சிருட்டித் தொழில் தனக்கு நிலைபெறத் தன்னிடத்துப் பெருமான் தோன்ற வேண்டுமெனப் பிரமன் வேண்டினன். அதனை அவனுக்கு வழங்கிய இறைவன் மேலும் சில அருள் செய்தனர்.
‘நீவிர் இருவரும் காஞ்சியை அணுகி இதுபோலும் ஓர் சிவலிங்கம் தாபித்துப் பூசித்துப் படைத்தல் காத்தலுக்குரிய உரிமையைப் பெறுவீர்களாக. மானிடர் தேவர் யாவரும் சிவலிங்க பூசனையை மேற்கொள்வார்களாக. அவ்வாறு பூசனை புரிவார்க்கு மயக்கம், வறுமை, பயம், மனக்கவலை, பசி, நோய் முதலிய தோன்றி வருத்தும் பிறவி ஒழிவதாக. ஓர்கால் பிறப்பினும் வருத்தமின்றி மகிழ்ச்சி எய்தி அவர் வாழ்வாராக. இயமன் ஒருகாலும் அவர் தம்மை அணுகாதொழிக. பூசனை புரியாதார் தமக்கொரு களைகண் இல்லாதவ ராவார். அவர்களுடன் வார்த்தையாடுதலும் இழிஞரிலும் இழிஞர் ஆதற்கு ஏதுவாகும். வேள்வி, தானம், விரதம், முதலானவை தரும்பயன் பூசனையால் வருபயனுக்கு கோடியில் ஒரு பங்கிற்கும் நிகராகா. உலகம் உய்யுமாறு இத்தகு ஆணைகளை விதித்தோம்’ என்றருளி மறைந்தனர். திருமாலும், பிரமனும் காஞ்சியை அடுத்துச் சிவலிங்கம் நிறுவிப் பூசித்துப் பயன் பெற்றனர். சிவலிங்க பூசனையின் பயனை வரையறுத்துக் கூற வல்லவர் ஒருவர் உளரேயோ?
மகாலிங்கத் தானம் என்னும் இத்தலம் கேசரிகுப்பம் அப்பாராவ் முதலியார் தெருவில் மேற்கு நோக்கிய தின்பினை உடைத்தாய் விளங்குகின்றது. மிகப் பெரிய திருவுருவம் விளங்கும் இம்மூர்த்தியை அண்டக நாயனார் எனவும் வழங்குவர்.
வாலீசம்: வாலி பூசித்துப் போரில் எதிர்த்தவர் வலியில் செம்பாதி தன்னையடையப் பெற்றதலம். கச்சி மயானத்திற்குக் கிழக்கதாய் மேற்கு நோக்கியதாய்ச் சித்தர்கள் வழிபடத்தோன்றிய வாயுலிங்கமே அவ்வாலீசமாகும். வாலி இருக்கைக்குக் கொண்டு செல்லப் பெயராது வால் அற்று விழ அதன் வடுப்பெற்று இக்காஞ்சியை விட்டென்றும் நீங்கோரானப் பெருமான் அருளும் சிறப்பினது. (திருவே. 103-120)
கச்சிமயானம்: பண்டன் என்னும் அசுரன் வரத்தினால் தேவர் முதலானோர்தம் உடம்பிற் கலந்து வீரியத்தைக் கவர்ந்துண்டு மெலிவிக்க, இறைவன் உடம்புடைய அனைத்துயிரையும் அவியாக வேள்வியில் இட்டு அவ்வழியாகப் அப்பண்டனை அழித்துப் பண்டுபோற் படைத்தனர். (பண்டு- உடம்பு) கச்சியில் மயானமாய் வேள்வியில் முளைத்தவர் பிரானார் மேற்கு நோக்கிய சந்நிதியாய்த் திருவேகம்பத்தில் கொடிமரத்தின் முன்னே தேவாரம் பெற்றுத் திகழ்வது இத்தலம்.
நல்ல கம்பர்: உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)
கள்ளக் கம்பர்: திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)
வெள்ளக் கம்பர்: பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினர். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றனர். (திருவே. 86)
இம்முத்தலமும் சுந்தரர் கண்பெற்ற பதிகத்துட் போற்றப் பெற்றுள்ளன.
--[முற்றும்]--
0 Comments