அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் சிறுவஞ்சூர்
அமைவிடம் : காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புத்தூர் வட்டம், நாட்டரசன்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊர் சிறுவஞ்சூர் கிராமம். இக்கிராமத்தின் வடக்குப்பகுதியில் தொன்மைவாய்ந்த அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காட்டாங்குளத்தூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் படப்பை ஓந்தூர் வழியாக 5 கி.மீ தொலையிலும் அமைந்துள்ளது - சிறுவஞ்சூர். அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கிய மொட்ட கோபுரத்துடன் அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம். முன்மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. சதுரமான கருவறையில் அருள்மிகு திருவாலீஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இலிங்க உருவமாகக் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறையின் முன் எளிமையான அர்த்தமண்டபம் அமைக்கப்பட்டது. இம்மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள், நம்மாழ்வார், தும்பிக்கை ஆழ்வார். சண்டிகேஸ்வரர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இச்சிற்பங்களில் சண்டிகேஸ்வரர் மட்டும் இக்கோயிலுக்கு உரியதாகும். பிற சிற்பங்கள் பெருமாள் திருக்கோயிலுக்குரியதாகக் கருதலாம். இம்மண்டபத்தை அடுத்து சிறிய தூண்களுடன் கூடிய முன்மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் இலட்சுமி நாராயணர்,முருகப்பெருமாள் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
அருள்மிகு திருவாலீஸ்வரர்
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய பகுதிகள் கருங்கல் கொண்டு ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டப புறச்சுவரில் எளிமையான தேவகோட்ட மாடங்கள் காணப்படுகின்றன.
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. சதுரமான கருவறையில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் நின்றகோலத்தில் நான்கு கரங்களுடன் தெற்குநோக்கி அருள்பாலிக்கின்றார். இச்சன்னதி கருவறை, அர்த்தமண்டப புறச்சுவரில் தேவகோட்ட மாடங்கள் உள்ளன. இதில் சிற்பங்கள் காணப்படவில்லை. இச்சன்னதியும் மிகவும் சிதைந்தநிலையில் பொலிவிழ்ந்து காணப்படுகிறது. இதனைத் தொன்மை மாறாமல் புனரமைத்தல் வேண்டும்.
இக்கோயிலில் நந்தி மண்டபம். மடப்பள்ளி, தீர்த்த கிணறு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதி மற்றும் அம்மன் சன்னதி முன் பகுதியில் செங்கள் மற்றும் சுதை கொண்டு அமைக்கப்பட்ட சுவர்பகுதி சிதைந்தநிலையில் காணப்படுகிறது. இச்சுவர் பகுதியில் ஒரு மீட்டர் அகலமுடையது. சிவன் சன்னதி, மற்றும் அம்மன் சன்னதி முன்பகுதியில் செங்கற்கல்லால் கட்டப்பட்ட மண்டபங்கள் இருந்துள்ளன. தற்போது சுவர்பகுதி மட்டும் காணப்படுகின்றன. இப்பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments