சிவ சிவ
அருள்தரும் பிர்மவித்யாம்பிகை உடனுறை அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், திருவெண்காடு
(அருள்மிகு புதன் ஸ்தலம்)
திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ்
இறையன்புடையீர்! வணக்கம்.
திருவெண்காடு என்னும் இத்திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ளது. சோழவள நாட்டில் காவிரிக்கு வடகரையில் அமைந்த தலங்களுள் பதினோராவதாக வைத்து எண்ணப்படும் தலம் இது. திருவெண்காட்டிற்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் காவிரியும், வட எல்லையாக மணிகர்ணிகை ஆறும் கிழக்கே 3 கி.மீ தொலைவில் அலை கடலும் அணி செய்கின்றன. வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சுவேதாரண்ய க்ஷேத்திரத்தில் எமனை சுவேதாரண்யேசுவரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷனநாதிகளை இராமன் சம்ஹாரம் செய்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தின் தொன்மைக்கு இக்குறிப்பு மேலான சான்றாகத் திகழ்கிறது. சமபாதகரோ பூமௌ தஹ்யமான சராக்னி ருத்ரேநேவ வினிர்தக்த சுவேதாரண்யே யதாந்தகஹா (ஆரண்ய காண்டம்) காசிக்கு சமமான ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று. இங்கு சிவமூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் மும்மூன்றாக அமைந்துள்ளது. சமயக்குரவர்கள் நால்வரால் பாடப்பெற்றது. இங்கு புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. சக்தி பீடங்களுள் ஐம்பத்தொன்றாவது பீடமாகும். காளி காலஞ் சரேததா என்று பத்ம புராணம் இதை குறிக்கிறது. பிரம்ம சமாதி இங்குள்ளது. இவ்வூர் சங்கல்பத்தில் பிர்ம ஸ்மசானம் என்று சொல்லப்படுகிறது. சிவனின் 64 மூர்த்தி பேதங்களுள் ஒன்றான ஸ்ரீ அகோராஸ்திர மூர்த்தி இங்கு மட்டுமே உள்ளது.
இதுவே ஆதி சிதம்பரம். இங்கு சபையும், சபையின் தென்மேற்கில் பெருமாள் சந்நிதியும் உள்ளன. சிவபெருமான் இங்கு ஆனந்த தாண்டவம், காளி நிருத்தம், கௌரி தாண்டவம், முனி நிருத்தம், ஸந்தியா தாண்டவம். திரிபுரதாண்டவம் புஜங்க லலிதம், ஸம்ஹார தாண்டவம். பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார். சிதம்பரத்தில் நிற்குணமாக ஆடி முக்தியைத் தருகிறார். இங்கு சத்தணமாக ஆடி இருமைப்பயன் தருகிறார். இந்திரன். ஐராவதம், சிவப்பிரியர், வேதரசி, சுவேதகேது. சுவேதன். விஷ்ணு. சூரியன். சந்திரன், அக்னி முதலியவர்கள் இங்கு வழிபட்டுள்ளனர்.
பதினோராந்திருமுறையில் பாடிய பட்டிணத்தடிகள் சிவ தீட்சை பெற்றதலம் இதுவே. சைவ சித்தாந்த முழு முதல் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் அவதரித்ததும், சிறுதொண்டர் இளமையில் வாழ்ந்ததும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையும் அவர் தோழி சந்தனத்தாதியும் பிறந்தது இங்கேயே இத்தலத்தில் வழிபட்டால் முன் வினைகள் போகும் என ஞானசம்பந்தர் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்மிகு பிர்மவித்யாம்பிகை உடனுறை அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் அரசு நிதி மற்றும் உபயதாரர்களின் பேருதவியுடன் அனைத்து சன்னதி விமானங்களும், கோபுரங்களும், மண்டபங்களும், மதில்களும் சிறந்த முறையில் செப்பனிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23-ஆம் தேதி (07.07.2025) திங்கட்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 9.00 க்கு மேல் 10.20 க்குள் (குடமுழுக்கு நேரம் சரியாக 9.05 மணி) சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சமய சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments