39வது உழவாரப் பணி
அருள்மிகு தாயினும் நல்லாள் உடனாய கலிங்கநாதீஸ்வரர் திருக்கோயில்
இருளஞ்சேரி கிராமம், திருவள்ளுர் மாவட்டம்.
அருள்தரும் தாயினும் நல்லாள் உடனாய அருள்மிகு கலிங்கநாதீஸ்வரர் திருக்கோயில்
இருளஞ்சேரி கிராமம், திருவள்ளுர் மாவட்டம்.
கலியுக கவலை நீக்கும் கலிங்கநாதீஸ்வரர்
கலியுகத்தின் பாவங்கள் நீங்கவும், கலிகால பாதிப்புகள் விலகவும், கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் இருளஞ்சேரி ஸ்ரீ கலிங்கநாதீஸ்வரர்.
ஜெயங்கொண்ட சோழ மண்டல மணவிற்கோட்டத்தில் உள்ள தியாக சமுத்திரநல்லூர் அருகே அமைந்துள்ள ஊர் இருங்களூர் எனப்படும் இருளஞ்சேரி ஆகும். இவ்வூரை இறையாஞ்சேரி என்று திருநாவுக்கரசர் ஊர்தொகைப் பாடலில் பாடியுள்ளார்.
இக்கோயிலில் காணப்படும் எட்டு கல்வெட்டுகள் இதன் தொன்மையை வெளிப்படுத்துகின்றன. இவை 1947 இந்திய தொல்லியல் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இருளஞ்சேரியின் பழைய பெயர் இருங்களூராக இருந்து இறையாஞ்சேரியாக மாறி நாளடைவில் இருளஞ்சேரியாக மாறியிருக்கலாம்.
கி.பி.10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் கண்டறியப்பட்டு இருப்பதால், இது சோழர் காலத்திய கோயில் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
கல்வெட்டு செய்திகள் கி.பி.12 ஆம் நூற்றாண்டில், இக்கோயிலின் ஸ்ரீ வருகபிள்ளையார் சன்னதியை, இருங்களூரைச் சார்ந்த அமர யுத்த கோவன் எனப்படும் திருவிற்கோலமுடையான் என்பவர் கட்டியது தெரியவருகிறது.
இதே போல, இருங்களூரில் வசித்த சிந்தனையுடையாள் என்ற பெண்மணி தன் கணவன் தியாக மேகம் என்பவரின் நினைவாக ஆலயத்திற்கு விளக்கு தானம் வழங்கிய செய்தி தெரியவருகிறது.
இறைவனின் ஆதிகாலப் பெயர் கலியஞ்சீஸ்வர மஹாதேவர் என்பது. இப்பெயரை மண்டபத்தின் மேற்கு பகுதி சுவரில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இக்கல்வெட்டு 18, அக்டோபர் 1237 ல் இராஜராஜதேவன் எனப்படும் மூன்றாம் இராஜராஜன் காலத்தில் 22 ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.
கலியுகத்திற்கு அஞ்சுவோருக்கு அபயம் தந்தருளும் இறைவன் என்பதால், கலியஞ்சீஸ்வரன் எனப் பெயர் பெற்றார். கலியஞ்சீஸ்வரனே மருவி கலிங்கநாதீஸ்வரனாக அழைக்கப்படுகிறார்.
சனிப்பிரதோஷத்தில் தொடங்கி, தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இறைவனை வழிபடுவோருக்கு ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி, கண்ட சனி, பாதச்சனி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளும் அகலும். அத்துடன் கலிகால கஷ்டங்களும் நீங்கி விடும் என்பது அடியார்களின் நம்பிக்கை.
ஸ்ரீ தாயினும் நல்லாள்:
இறைவி தாய்க்கு தாயாக விளங்குபவள். இத்திருப்பெயர் கொண்ட இறைவியை வேறெந்த சிவாலயத்திலும் காண முடியாது என்பது குறிப்படத்தக்கது.
திருக்குளம்:
இக்கோயிலின் எதிரே பிரமாண்ட திருக்குளம் அமைந்துள்ளது. இதுவே சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. கி.பி.1943 ல் கூவம் ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் படித்துறைகள் மண்ணில் புதைந்து சிதிலமடைந்துள்ளது. புனரமைத்தால் மீண்டும் புது பொலிவு பெரும்.
ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன திருமடம்:
இவ்வாலயத்தினை ஒட்டி மேற்புறத்தில் ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன திருமடம் ஒன்றும், அதன் அருகே இம்மடத்தை நிறுவிய முதல் குருவான ஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல பரமாச்சரிய ஸ்வாமிகளின் ஜீவ சமாதியும், சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
ஸ்வாமிகள் ஒரு வெகுதான்ய வருடம், ஆணித்திங்கள் வளர்பிறை சப்தமி திதி அன்று கபாலம் திறந்து இறையருள் பெற்றவர். இந்த ஆதீனத்தின் வழி வந்த முதலாவது சிதம்பர ஸ்வாமிகள் அருளிய “கலிங்கேசன் பதிற்றுப்பத்து அந்தாதி” இறைவன் திருப்புகழை 101 பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. இப்பாடல்களில் சில பாடல்கள் மட்டும் கிடைக்க பெற்றுள்ளன.
ஆலய அமைப்பு:
ஆலயம் சிறிய அளவில் தெற்கு முகமாய் எதிரே திருக்குளத்துடன் அமைந்துள்ளது. இறைவன் கிழக்கு முகமாய் காட்சி தர, இறைவி தென்திசை நோக்கி அருள் வழங்குகிறார். கோபுரத்தின் கீழ்ப்புறத்தில் நான்கு பக்கமும் சிங்கமுக உருவங்களும், நால்வரது சிற்பங்களும் கருங்கல்லில் அமைந்துள்ளன. கலி அஞ்சி அபயம் தந்த நாதர் என்பதால் நவக்கிரக சன்னதிக்கு இங்கு இடமில்லை. கோபுரத்தின் கீழே குபேரன், நடராஜர், ரம்பா, ஊர்வசி போன்ற சிற்பங்களும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
நந்தி தேவர்:
இவ்வாலய நந்தி தேவர் மிகவும் சிறப்பானவர். இவரது வலது கண் சூரியன் வடிவத்திலும், இடது கண் சந்திர வடிவத்திலும் அமைந்துள்ளது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பு. இவரின் பீடத்தில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக இந்த ஆலயம் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது உறுதிப்படுகிறது. இவ்ஆலயத்தின் சிறப்பே பிரதோஷம் தான்.
சோழர் காலத்தில் இருங்களூர் என்றும், தேவார நாயகர் திருநாவுக்கரசர் காலத்தில் இறையாஞ்சேரி என்றும், தற்காலத்தில் இருளஞ்சேரி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் இறைவன் மீது திருநாவுக்கரசர் ஊர்த்தொகைப்பாடலில், பல்வேறு தலங்களை பாடி வந்து இறையாஞ்சேரியையும் குறிப்பிடுகிறார். இந்த இறைவனை வழிபட்டால் கயிலைநாதனைக் காணலாம் என்று பாடுகின்றார்.
அழகிய திருச்சிற்றம்பலத்திற்கு அருளியதாலும் இது ஒரு முக்தி தலம். காசிக்கு சமமான ஊர் என்றும் போற்றப்படுகிறது. இதே போல, ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன மடத்தின் பரம்பரை வழி வந்த முதலாவது சிதம்பர ஸ்வாமிகளின் பதிற்றுப்பத்து அந்தாதி பாடல்களும் இறைவனை புகழ்ந்து பாடுகின்றன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments