Subscribe Us

header ads

2.065 திருப்பிரமபுரம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.065 திருப்பிரமபுரம்


பண் – காந்தாரம்
698

கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.  01

699

கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.  02

700

சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.  03

701

நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.  04

702

தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.  05

703

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.  06

704

பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.  07

705

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே.  08

706

அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.  09

707

வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.  10

708

பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.  11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments