Subscribe Us

header ads

2.064 திருமுதுகுன்றம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.064 திருமுதுகுன்றம்


பண் – காந்தாரம்
688

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.  01

689

எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே.  02

690

நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந்
தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே.  03

691

தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங்
குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.  04

692

வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ்
சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும்
முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.  05

693

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.  06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  07

694

வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.  08

695

அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ்
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.  09

696

கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.  10

697

அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.  11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments