Subscribe Us

header ads

1.39 திருவேட்களம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.39 திருவேட்களம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பாசுபதேசுவரர், தேவியார் – நல்லநாயகியம்மை.

பண் – தக்கராகம்

415           

அந்தமும் ஆதியு மாகிய வண்ணல் ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும் வேட்கள நன்னக ராரே.           1.39.1

415

சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச் சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ் சூழப் போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னக ராரே.              1.39.2

416

பூதமும் பல்கண மும்புடை சூழப் பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையு மாகிச் சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னக ராரே.              1.39.3

418

அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் அமையவெண் கோவணத் தோடசைத்து
வரைபுல்கு மார்பி லோராமை வாங்கி யணிந் தவர்தாந்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந் தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னக ராரே.    1.39.4

419

பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட் கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன்னக ராரே.                  1.39.5

420

கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் கண்கவ ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ணப் பொங்கிய பூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றையந் தாரார் வேட்கள நன்னக ராரே.     1.39.6

421

மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக் காலனைக் காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர் வேட்கள நன்னக ராரே.          1.39.7

422

ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் அமுத மமரர்க் கருளி
சூழ்தரு பாம்பரை யார்த்துச் சூலமோ டொண்மழு வேந்தித்
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னக ராரே.    1.39.8

423

திருவொளி காணிய பேதுறு கின்ற திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங் கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த வரக்கன் ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
வெருவுற வூன்றிய பெம்மான் வேட்கள நன்னக ராரே.           1.39.9

424

அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர் யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லால் புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னக ராரே.    1.39.10

425

விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவமி லாரே.   1.39.11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments