Subscribe Us

header ads

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சித்தநாதேசர், தேவியார் – அழகாம்பிகையம்மை.

305

ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.          1.29.1

306

காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.          1.29.2

307

கல்வி யாளர் கனக மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.          1.29.3

308

நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.                                      1.29.4

309

உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரிற்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.          1.29.5

310

கூரு லாவு படையான் விடையேறிப்
போரு லாவு மழுவான் அனலாடி
பேரு லாவு பெருமான் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.          1.29.6

311

அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரிற்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.                                      1.29.7

312

அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.          1.29.8

313

ஆழி யானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.          1.29.9

314

மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.          1.29.10

315

மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.          1.29.11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments