Subscribe Us

header ads

1.15 திருநெய்த்தானம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நெய்யாடியப்பர், தேவியார் – வாலாம்பிகையம்மை.

பண் – நட்டபாடை

152      

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.          1.15.1

152      

பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.     1.15.2

154      

பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.          1.15.3

155      

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.          1.15.4

156      

நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
(*) தண்கரை என்றும் பாடம்.   1.15.5

157      

விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
(*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.   1.15.6

158      

நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.          1.15.7

159      

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.          1.15.8

160      

கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.          1.15.9

161      

மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.          1.15.10

162      

தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.   1.15.11

Post a Comment

0 Comments