Subscribe Us

header ads

1.11 திருவீழிமிழலை

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை.

பண் – நட்டபாடை

108  

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.       1.11.1

109  

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.    1.11.2

110  

வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.       1.11.3

111  

பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.       1.11.4

112  

ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.       1.11.5

113  

கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே. 1.11.6

114  

கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.       1.11.7

115  

முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.       1.11.8

116  

பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே. 1.11.9

117  

மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.      1.11.10

118  

வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
(*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.
(*) ஊழின்வலி என்றும் பாடம். 1.11.11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments