Subscribe Us

header ads

7.035 திருப்புறம்பயம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.035 திருப்புறம்பயம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாட்சிவரதேசுவரர் தேவியார் – கரும்படுசொல்லம்மை


பண் – கொல்லி

351
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.1

352
பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும்
நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.2

353
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீயுரை யாற்றளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மை அரிதுகாண்இஃ தறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறுகாலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.3

354
குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் போதுமே. 7.35.4

355
கள்ளிநீசெய்த தீமையுள்ளன பாவமும்பறை யும்படி
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண் சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல் தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.5

356
படையெலாம்பக டாரஆளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவ லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து மருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.6

357
முன்னைச்செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள் கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.7

358
மலமெலாமறும் இம்மையேமறு மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள் சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே. 7.35.8

359
பண்டரியன செய்ததீமையும் பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவ லாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின் றாடிவானவர்தாந் தொழும்
புண்டரீக மலரும்பொய்கை புறம்பயந்தொழப் போதுமே. 7.35.9

360
துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத் தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு துய்துமென்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர் வல்லவானுல காள்வரே. 7.35.10

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments