Subscribe Us

header ads

7.011 திருப்பூவணம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.11 திருப்பூவணம்


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பூவணநாதர், தேவியார் – மின்னாம்பிகையம்மை


பண் – இந்தளம்

104
திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ. 7.11.1

105
எண்ணி இருந்து கிடந்து நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ. 7.11.2

106
தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்
புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ. 7.11.3

107
நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ. 7.11.4

108
நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடியணி வார்உறை பூவணம் ஈதோ. 7.11.5

109
மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ. 7.11.6

110
மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ. 7.11.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7.11.8-9

111
சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாஉறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே. 7.11.10

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments