Subscribe Us

header ads

2.116 திருநாகைக்காரோணம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.116 திருநாகைக்காரோணம்


பண் – செவ்வழி

1256

கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  01

1257

விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  02

1258

வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  03

1259

வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  04

1260

வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  05

1261

விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்
உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  06

1262

பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை
செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  07

1263

பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற
அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்
கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  08

1264

நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால்
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  09

1265

உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.  10

1266

மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்
சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே.  11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments