Subscribe Us

header ads

2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.100 திருக்கோவலூர் வீரட்டம் – திருவிராகம்


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – சிவானந்தவல்லியம்மை.


பண் – நட்டராகம்
1081

படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.  01

1082

கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.  02

1083

உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.  03

1084

கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.  04

1085

உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.  05

1086

கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.  06

1087

உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.  07

1088

ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை
ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.  08

1089

ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.  09

1090

குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.  10

1091

கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்
விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.  11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments