Subscribe Us

header ads

2.098 திருத்துருத்தி - திருவிராகம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.098 திருத்துருத்தி – திருவிராகம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதேசுவரர், தேவியார் – முகிழாம்பிகையம்மை.


பண் – நட்டராகம்
1059

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.  01

1060

அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.  02

1061

கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்
கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.  03

1062

கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.  04

1063

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.  05

1064

வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே.  06

1065

கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.  07

1066

சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.  08

1067

களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.  09

1068

புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.  10

1069

கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.  11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments