Subscribe Us

header ads

2.054 திருப்புகலி

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.054 திருப்புகலி


பண் – சீகாமரம்
579

உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.  01

580

நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.  02

581

அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.  03

582

கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே.  04

583

நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.  05

584

மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.  06

585

களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.  07

586

பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.  08

587

சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.  09

588

நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.  10

589

ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.  11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments