Subscribe Us

header ads

1.57 திருவேற்காடு

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.57 திருவேற்காடு

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேற்காட்டீசுவரர், தேவியார் – வேற்கண்ணியம்மை.

பண் – பழந்தக்கராகம்

612

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.          1.57.1

613

ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.          1.57.2

614

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே.          1.57.3

615

ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
பாழ்ப டும்மவர் பாவமே.          1.57.4

616

காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே.          1.57.5

617

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.          1.57.6

618

மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.          1.57.8

619

மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.          1.57.8

620

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
நெருக்கி னானை நினைமினே.                                       1.57.9

621

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே. 1.57.10

622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே. 1.57.11

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments